Phone
Mail
Whatsapp

The Word for the day

வார்த்தையினால் விடுதலை

Listenகேட்க Watchபார்க்க

45. பொன் குத்துவிளக்கு

45. பொன் குத்துவிளக்கு

Sorry for the inconvience, Currently English version is not avalilable.

Switch to Tamil language

(அறிவிக்கப்பட்ட நாள்: 18.11.2012)

மாற்கு 1: 2-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;"

    "இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்" என்று மல்கியா தீர்க்கதரிசன புத்தகத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் நிறைவேறத்தக்கவிதமாய் இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோது யோவான்ஸ்நானன் முன் அனுப்பப்பட்டான். மல்கியா தீர்க்கதரிசியின் மூலம் உரைக்கப்பட்ட அந்த தீர்க்கதரிசனம் அன்று நிறைவேறியது.

    மோசேயினுடைய பிறப்பின் காரியத்தினைக் குறித்து வேதத்தில் பார்க்கின்றோம். எபிரெய ஸ்திரீகள் பிரசவிக்கிற ஒவ்வொரு ஆண் குழந்தையையும் கொலைசெய்யவேண்டும். இது எகிப்தின் மருத்துவச்சிகளுக்கு ராஜாவினால் கட்டளையிடப்பட்டது. அப்படி இருக்கும்பொழுது, மோசே என்ற அழகான ஆண் குழந்தை அந்தப் பிரமாணத்தை மீறி வளர்க்கப்பட்டது. ஒரு காலத்துக்குப்பிறகு, அப்படி அதை வளர்க்க இயலாததால், ஒரு பேழையில் வைத்து ஜலத்திலே அனுப்புகிறார்கள். ஜலத்திலிருந்து எடுக்கப்பட்டதால், அவனுக்கு மோசே என்ற பெயர் சூட்டப்பட்டது. அங்கே பார்வோனுடைய குமாரத்தி மோசே என்ற இந்த நாமத்தை அவனுக்குச் சூட்டுகிறாள். பார்வோனுடைய குமாரத்தியிடம் வளர்ந்த அந்தக் குழந்தை, ஒரு கால கட்டத்துக்குப்பிறகு தன்னுடைய பிறப்பினைக் குறித்து அறிந்துகொள்கின்றது. தன்னுடைய ஜனங்கள் ஆளோட்டிகளின் மூலம் அனுபவிக்கின்ற வேதனையினை காண்கிறான். ஆளோட்டிகள் மூலமாக அவர்கள் இடுகிற கூக்குரல் அவனுக்குள் தைத்தது.

    அந்த ஜனம் படுகிற உபத்திரவத்தைக் கண்டபோது, அவனுக்குள்ளாக ஒரு உணர்ச்சி எழும்புகிறது. அது அவனுக்குள் இயல்பான ஒரு காரியம். தன்னுடைய ஜனம் துன்பப்படுத்தப்படும்பொழுது, அப்படி துன்பப்படுகிற தன் ஜனத்துக்காக அவனுடைய ஆவி பொங்கி எழும்புகிறது. அவன் முதலாவது தன் மாமிச சிந்தனையிலே ஒரு கிரியையினைச் செய்தான். ஒரு எகிப்தியன் எபிரெயனுக்கு விரோதமாக எழும்பியபோது, அந்த எகிப்தியனை அவன் கொன்று புதைக்கிறான்.

    அதன்பின்னர், இரண்டு எபிரெயர்களுக்குள்ளாக அநியாயஞ்செய்த எபிரெயனைக் கண்டித்தபோது, அநியாயஞ்செய்த அந்த எபிரெயன்: நீ எங்களுக்கு அதிகாரியா? நியாயாதிபதியா? நீ யார்?. நீ அன்று அந்த எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொல்லப்பார்க்கிறாயா என்று கூறியதும், மோசேக்கு பயம் வந்தது; அவன் எகிப்தைவிட்டு ஓடி விடுகிறான். அதன்பின்னர் வனாந்தரத்தில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருக்கும்பொழுது, முட்செடியின் மத்தியிலிருந்து ஒரு தூதன் அவனை அழைத்தான்.

யாத். 3: 1, 2 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.

    அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது."

    எபிரெயனுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியிலிருந்து அவன் விடுதலை பெறவேண்டும் என்ற சிந்தை இயல்பாகவே அவனுக்குள் இருந்தது. ஆனால் அதனை தனித்தவனாய் செயல்படுத்த முடியவில்லை. காரணம், இவன் அடிமைப்படுத்தப்பட்ட எபிரெயனாய் இருந்தான். எகிப்தியனுடைய அதிகாரத்துக்கு மேலாக அவனால் ஒன்றும் செய்ய இயலாதிருந்த நிலை. எகிப்தியருடைய அதிகாரம் வானளாவிய அதிகாரமாக அப்போது இருந்தது. அதனால் எந்தவொரு காரியத்தையும் அதற்கு மேலோங்கி அவனால் செய்யமுடியவில்லை. எனவேதான் எகிப்தைவிட்டு ஓடிப்போனான். ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும்பொழுது, முட்செடியின் மத்தியிலிருந்து ஒரு தூதனானவர் தரிசனமாகி பேசினார். அதன் பின்னர், அந்த தூதனுக்குள்ளான ஒரு வழிநடத்துதலும், வழிகாட்டுதலும் அவனுக்குள்ளாக வருகிறது. அப்போது, அவனுக்குள் புது பெலன் வந்தது. கர்த்தர் அவனோடு பேசினார்: தான் அவனோடு இருக்கிறேன் என்றும், பார்வோனிலும் பெரியவர் தான் என்றும், எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர் அவர் என்றும் அறிகின்றான். அவர் ஆதியிலே எவைகளையெல்லாம் திட்டம்பண்ணி வைத்தாரோ, அவைகள் யாவற்றையும் அவனுக்கு அறிவித்தார். மோசேயினுடைய ஆகமங்களில் இவையாவும் சாட்சியாய் அறிவிக்கப்பட்டுள்ளது. சிருஷ்டித்த நாளிலே அவைகளை எப்படியாகச் சிருஷ்டித்தார் என்றும், அவைகள் ஒவ்வொன்றையும் வெவ்வேறு கால அளவிலே தான் சிருஷ்டித்ததையும் அவனுக்கு அறிவித்தார். ஏழாம் நாளில் ஓய்ந்திருந்ததைக் குறித்தும் சாட்சியிட்டுள்ளார்.

    எட்டாம் நாள் விருத்தசேதனத்தின் நாள். அது கர்த்தருடைய நாள். ஏழாம் நாள் ஓய்ந்திருந்த பின்னர், அவர் ஆத்துமா கொண்டவனாய் ஆதாம் என்ற மனிதனை வேறுபிரித்தார். அவனுக்குள்ளாக ஜீவ சுவாசத்தை ஊதியதால், அவன் ஜீவாத்துமா உள்ளவனானான். அவனுடைய சந்ததியில் இரு பெரும் பிரிவு உருவானது. ஒன்று ஆபேலுடைய சந்ததி, மற்றொன்று காயீனுடைய சந்ததி. ஆபேல், துன்மார்க்கனான காயீனால் கொலைசெய்யப்பட்டான். இவைகள் யாவும் மோசேக்கு அறிவிக்கப்பட்டது. இவைகள் யாவற்றையும் அறிந்ததால், பார்வோன் மன்னனைக் குறித்த பயம் அவனைவிட்டுப் போனது. பார்வோனுக்கு அதிகாரத்தைக் கொடுத்தவர் தன்னை அனுப்புகிறவர் என்று அறிந்தான். பார்வோனின் ராஜ்யம் அழிவுள்ளது. ஆனால், தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள ராஜ்யம் என்றைக்கும் அழியாத பரலோக ராஜ்யம் என்பதை அவன் அறிந்திருந்தான். அவனுக்குள்ளாக கிரியை செய்த தூதன் அதற்குரிய பெலனை அவனுக்குக் கொடுத்தார். மோசே இயல்பாகவே பயந்த சுபாவமுள்ளவன். ஆனால் அவனுக்குள்ளாக அனுப்பப்பட்ட தூதன் அவனுக்குப் பெலனைக் கொடுத்தார். எகிப்தின் தேவர்கள் மத்தியில் நீதி செய்ய கர்த்தர் நியமித்த நியமனம் அங்கே நிறைவேறிற்று.

    மோசேக்கு முட்செடியின் மத்தியில் காட்சி கொடுத்த தூதனானவர், அதற்கு முன்னர் ஆபிரகாமுக்குக் காட்சி கொடுத்த கர்த்தரோடு வந்தார். ஆபிரகாமுக்குக் காட்சி கொடுத்த கர்த்தரோடு வந்த அந்தத் தூதன் சோதோம் கொமோராவை அழிக்கக் கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவனாயும் இருந்தார். அந்தத் தூதனானவருடைய வழிநடத்துதல் மோசேக்குள்ளாக முட்செடியின் நடுவிலே இருந்து கர்த்தரால் கொடுக்கப்பட்டது.

    மோசே என்ற மாமிச சரீரம் கர்த்தர் கட்டளையிட்ட கிரியைகளை மாமிசத்தில் நிறைவேற்றி மரித்து மண்ணோடு மண்ணானது. அவனுக்குள்ளாக இருந்த ஆத்துமா என்ற ஆவியின் சரீரம் கர்த்தத்துவத்தினால் ஜெனிப்பிக்கப்பட்டது. அவனுடைய மாமிச சரீரத்தை முட்செடியின் மத்தியிலே காட்சி கொடுத்த தூதனானவர் வார்த்தைக்குள் இயக்கி செயல்பட வைத்தார். அந்தத் தூதனானவர் அதற்கு முன்னரும் தன்னுடைய கிரியைகளைச் செய்துவந்துள்ளார், பின்னரும் தன்னுடைய கிரியைகளை செய்து வந்துள்ளார். இனியும் வந்து அத்தகைய கிரியைகளைச் செய்வார் என்றே தீர்க்கதரிசனம் சாட்சியிட்டுள்ளது.

    எகிப்தின் தேவர்கள் மத்தியில் கர்த்தர் நீதியைச் சரிக்கட்ட மோசே ஒரு கருவியாக நியமிக்கப்பட்டான். அடிமைப்பட்டிருந்த அந்த திரள்கூட்டமான ஜனத்தை மீட்டெடுத்து, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் தேசத்துக்குள்ளாக அழைத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்டான். அப்படியாக அழைத்துச் செல்லப்பட்ட ஜனங்களுக்குள் பிரமாணங்களைச் சாட்சியிட்டார். ஆசரிப்புக்கூடாரம் அங்கே கர்த்தருக்கென்று உருவாக்கப்பட்ட கூடாரமாக இருந்தது.

    ஆசரிப்புக்கூடாரம் என்ற அந்தக் கூடாரத்திற்குள்ளாக கர்த்தருக்கென்று பலி செலுத்த வேண்டும். அந்த ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளாக மோசே சென்று பலியிட்டான். அப்போது அந்த ஆசரிப்பு கூடாரத்தினை மேகஸ்தம்பம் இறங்கி நிழலிட்டது. அங்கே அக்கினி ஸ்தம்பம் இறங்கியிருந்தது. மோசேயோடு கர்த்தர் அந்தக் கூடாரத்திலிருந்து பேசினார். கர்த்தர் மோசேக்கு காட்சி கொடுக்கும்பொழுது, என்னை முகமுகமாய் பார்த்தால், நீ சாவாய் என்று சொல்லி, அவருடைய சாயலின் பின்பகுதியை அவனிடம் காண்பித்தார்.

    கர்த்தருக்குள்ளான வார்த்தைகளை தூதனானவர் மோசேக்குப் பெற்றுக்கொடுத்தார். மோசேயை கர்த்தருடைய ஆவியானவர் வழிநடத்தினார். அவர்களின் ஆசரிப்புக்கூடாரம் திரைச்சீலையினால் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்த திரைச்சீலைக்கு உள்ளான பகுதி மகா பரிசுத்த ஸ்தலம் எனவும், திரைச்சீலைக்கு வெளியே உள்ள பகுதி பரிசுத்த ஸ்தலம் எனவும் பிரிக்கப்பட்டிருந்தது. இவை இவைகள் பரிசுத்த ஸ்தலத்திலே இருக்கவேண்டும், இவை இவைகள் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளாக இருக்கவேண்டும் என்று அவர் திட்டம்பண்ணி, அந்த ஸ்தலத்தைப் பிரித்தார்.

    பரிசுத்த ஸ்தலத்தில் ஒரு மேஜைமீது தேவசமுகத்து அப்பம் வைக்கப்பட்டிருக்கும். அந்த அப்பத்தை ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள் தவிர வேறுயாரும் புசிக்கக்கூடாது. புறம்பே இருக்கிறவர்கள் அதனைப் புசிக்க தடை விதிக்கப்பட்டது. கூடாரத்திற்குள் சென்று கர்த்தருக்கென்று பலி செலுத்தக்கூடிய கிருபை பெற்ற ஆசாரியர்கள் கூடாரத்துக்குள் சென்றார்கள். அவர்களைத் தவிர வேறுயாரும் அதனுள் அனுமதிக்கப்படவில்லை. அவருடைய அந்தப் பரிசுத்த ஸ்தலம் தீட்டுப்படக்கூடாது என்பதற்காக இந்தப் பிரமாணம் கொடுக்கப்பட்டது. அதைப்போல, மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியன் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டதாக வேதம் சாட்சியிடுகின்றது.

    ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைத் தெளித்த பின்னரே மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்லவேண்டும். ஏனென்றால் அது மகா பரிசுத்த ஸ்தலம். ஆசாரியன் தன்னைப் பரிசுத்தப்படுத்தியும், ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தியும், அதற்குள் செல்லவேண்டும். ஜனங்கள் பாளயம் இறங்க கட்டளை இடப்பட்ட இடங்களில் அந்த ஆசரிப்புக் கூடாரம் போடப்படும். பின்னர், புறப்பட கட்டளையிடப்பட்டபின், அந்தக் கூடாரமானது அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்டுவிடும். பொன் குத்துவிளக்கும் இந்தக் கூடாரத்திற்குள்ளாக வைக்கக் கட்டளையிட்டவைகளில் ஒன்றாகும்.

யாத். 25: 31 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்."

    பொன்னினால் செய்யப்பட்ட ஒரு குத்துவிளக்கு அங்கே வைக்கப்படவேண்டும் எனவும், அந்தக் குத்துவிளக்கானது எப்போதும் எரிந்துகொண்டேயிருக்கவேண்டும் எனவும் இங்கே கூறப்பட்டுள்ளது.

    ஆசரிப்புக் கூடராத்தின் பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளாக எரிந்துகொண்டிருக்கும் அந்தக் குத்துவிளக்கின் ஒளியின் மூலம் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்லவேண்டும். மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்வதற்கு முன்பாக இந்தக் குத்துவிளக்கைக் குறித்து அறிதல் அவசியமாகிறது. இந்த பொன் குத்துவிளக்கிற்கு ஏழு அகல்கள் இருந்தது.

யாத். 25: 37 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது."

    பரிசுத்த ஸ்தலத்திற்குள் வைக்கப்பட்டுள்ள அந்தக் குத்துவிளக்கு தன்னகத்தே ஏழு அகல்களைக் கொண்டதாக இருந்தது.

யாத். 26: 35 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "திரைக்குப் புறம்பாக மேஜையையும், மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக."

    திரைக்குப் புறம்பாக வைக்கப்பட்ட மேஜைக்கு எதிராக இந்தக் குத்துவிளக்கு ஆசரிப்புக் கூடார பரிசுத்த ஸ்தலத்துக்குள் வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆசரிப்புக்கூடாரமானது இப்படியாகப் போடப்படவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்.

    கர்த்தர் இந்த ஆசரிப்புக்கூடாரமானது எப்படியாக வடிவமைக்கப்படும் வேண்டும் என்று சாட்சியிட்டுள்ளார். இந்தக் கூடாரமானது இஸ்ரவேலருடைய பாளயத்தைத் தாண்டியதாக இருக்கவேண்டும். இந்த ஆசரிப்புக்கூடாரமானது,

  1. பரிசுத்த ஸ்தலம் எனவும்

  2. மகா பரிசுத்த ஸ்தலம் எனவும் பிரிக்கப்பட்டது.

இந்தக் கூடாரத்தில் இருக்கும் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளாக ஒரு குத்துவிளக்கு வைக்கப்பட்டது. பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளாகச் செல்லும்போது, குத்துவிளக்கானது ஒளி கொடுப்பதற்காக வைக்கப்பட்டது.

யாத். 40: 25 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்."

    இந்த ஆசரிப்புக் கூடாரமானது கர்த்தருடைய சந்நிதி என்று சாட்சியிடப்பட்டுள்ளது. கர்த்தருடைய சந்நிதியில் இந்தக் குத்துவிளக்கு வைக்கப்பட்டிருந்தது. கர்த்தருடைய சந்நிதியிலேயே பலி செலுத்த கட்டளையிடப்பட்டது. கண்ட இடத்தில் பலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

யாத். 27: 20 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக."

    இந்தக் குத்துவிளக்குக்கு எரிவதற்காக ஒலிவ எண்ணெய் வார்ப்பிக்கப்பட கட்டளையிடப்பட்டது. வேறு எண்ணெய் அங்கே கட்டளையிடப்படவில்லை. காரணம், அந்தக் குத்துவிளக்கானது கர்த்தருடைய சந்நிதியில் எரிந்து பிரகாசிக்க கட்டளையிடப்பட்டது. அங்கே மகா பரிசுத்த ஸ்தலத்தில் கர்த்தர் அசைவாடுகிறவராய் இருந்தார். மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்க உதவியாக அந்தப் பொன் குத்துவிளக்கின் ஒளி பிரகாசிக்கிற ஒளியாய் கட்டளையிடப்பட்டது.

    அந்தக் குத்துவிளக்கில் ஏழு அகல்கள் இணைக்கப்பட்டிருந்தது; அந்தக் குத்துவிளக்கு சாயங்காலந்தொடங்கி விடியற்கால மட்டும் எரிய கட்டளையிடப்பட்டது.

யாத். 27: 21 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஆசரிப்புக்கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு வெளிப்புறமாக ஆரோனும் அவன் குமாரரும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கக்கடவர்கள்; இது இஸ்ரவேல் புத்திரருக்கு தலைமுறை தலைமுறையாக நித்திய கட்டளையாயிருக்கக்கடவது."

    குத்துவிளக்கினால் பிரகாசிக்கும் அந்த சந்நிதி சாட்சியின் சந்நிதி என்று சாட்சியிடப்பட்டது. இது நித்திய கட்டளையாய் கட்டளையிடப்பட்டது.

லேவி. 17: 2-7 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:

    இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடாரவாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,

    பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான்.

    ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.

    அங்கே ஆசாரியன் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.

    தாங்கள் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது."

    ஆசரிப்புக்கூடாரத்தில் மட்டுமே பலி செலுத்தவேண்டும். ஆசரிப்புக்கூடாரமேயன்றி இஸ்ரவேலின் பாளயத்துக்குள்ளோ, பாளயத்துக்குப் புறம்பாயோ பலி செலுத்தினால், அந்தப் பலி கர்த்தரால் அங்கிகரிக்கப்படக்கூடிய பலியாய் இராது. ஏறெடுக்கும் பலி கர்த்தரால் அங்கிகரிக்கப்பட வேண்டுமென்றால், அந்தப் பலி கர்த்தர் நிர்ணயித்திருக்கிற ஸ்தலத்திற்குள்ளாகவே செலுத்தப்பட வேண்டும். இந்த ஆசரிப்புக்கூடாரமே அங்கே கர்த்தருடைய சந்நிதியாகும். கர்த்தருடைய இந்த சந்நிதியில் அவர் கட்டளையிட்டபடி குத்துவிளக்கு ஒன்று பிரகாசிக்கிற ஒளி கொடுக்கக்கூடியதாய் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குத்துவிளக்கினை ஆரோனுடைய குமாரர்கள் ஏற்ற வேண்டும். அது சாயங்காலமுதல் விடியற்காலம் வரை எப்போதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும்.

    மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளாக கர்த்தரின் உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. கேருபீன்கள் அதைச் சூழச் செட்டைகளை விரித்திருக்கிறபடி இருந்தது. உடன்படிக்கைப் பெட்டிக்குள்ளாக மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம், ஆரோனுடைய துளிர்த்த கோல், மற்றும் பிரமாணங்களைக் கொண்ட கற்பலகை இருந்தது. இந்த உடன்படிக்கைப் பெட்டி என்பது கர்த்தருடைய வார்த்தையாகும். கற்பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்த வார்த்தை ஆசரிப்புக்கூடாரத்தைத் தவிர வேறு இடங்களில் வைக்கக் கட்டளையிடப்படவில்லை. இந்த சந்நிதி தவிர மற்ற ஸ்தலத்தில் பலி செலுத்தினால், அந்தப் பலி பாவமாகவே அமையும் என்று சாட்சியிடப்பட்டது. மேலும் அந்தப் பலி பிசாசுக்கு ஏறெடுக்கும் பலியாகவே அமையும் எனவும் சாட்சியிடப்பட்டுள்ளது. கானான் தேசத்திலே தன்னுடைய ஜனத்தைக் கர்த்தர் குடியமர்த்தினபிறகு, சாலோமோனுடைய நாட்களிலேதான் தேவாலயம் கட்டப்பட்டது. தேவாலயத்துக்குள்ளாக பரிசுத்த ஸ்தலமும், மகா பரிசுத்த ஸ்தலமும் அமைக்கப்பட்டது. அந்தத் தேவாலயத்தில் குத்துவிளக்கு இருந்தது; அது பிரமாணத்தின்படி எரிந்துகொண்டிருக்க கட்டளையிடப்பட்டது. அந்த குத்துவிளக்கிற்கு பிழிந்தெடுத்த ஒலிவ எண்ணெய் ஊற்றப்பட்டது. சாலோமோன் நாட்களிலே, தேவாலயத்துக்குள்ளே உட்புகமுடியாத அளவிற்கு கர்த்தருடைய மகிமை அந்த ஆலயத்தை நிரப்பியிருந்தது என்று வேதத்தில் சாட்சியிடப்பட்டுள்ளது.

    யெரோபெயாமின் நாட்களில் எருசலேம் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததுபோன்ற ஒரு அமைப்பினைக் கொண்டு பெத்தேலிலும் தாணிலும் ஆசரிப்புக் கூடாரம் போடப்பட்டது. எருசலேம் தேவாலயத்தில் குத்துவிளக்கு இருந்ததுபோல, பெத்தேலிலும் தாணிலும் வைத்தார்கள். அங்கே தங்கத்தினால் செய்யப்பட்டிருந்த பொன் கன்றுகுட்டியும் இருந்தது. விக்கிரகம் தேவனுடைய ஆசரிப்புக் கூடாரத்தில் வந்தபோது, அங்கே ஏறெடுக்கப்பட்ட பலிகள் யாவும் பேய்க்குரியதாயிற்று. எனவே ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவர்கள் அந்த ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு வெளியேறிட பணிக்கப்பட்டது. அனுமதிக்கப்படாத குத்துவிளக்கின் மத்தியில் ஏறெடுக்கப்பட்ட பலி பேய்களுக்குரியதானது. பெத்தேலிலும் தாணிலும் ஏறெடுக்கப்பட்ட பலி கர்த்தரால் அங்கீகரிக்கப்பட வில்லை. எருசலேம் கர்த்தர் பலியிட அனுமதித்த ஸ்தலமாகும். அங்கிருந்த ஆசரிப்புக் கூடாரம் கர்த்தர் உலாவிவர தெரிந்தெடுக்கப்பட்ட ஸ்தலமாகும்.

    பெத்தேலிலும் தாணிலும் ஏற்படுத்தப்பட்டதுபோல, இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோது, அநேக ஆசரிப்புக்கூடாரங்கள் இருந்தன. ஆனால் கர்த்தர் தெரிந்தெடுத்த ஸ்தலம் எருசலேமே ஆகும். ஜனங்கள் எருசலேமிலும் பலியிட்டார்கள்; வேறு அநேக ஸ்தலங்களிலும் இருந்து பலிகளை ஏறெடுத்தார்கள். கிறிஸ்து வெளிப்படும் முன்பாகவே எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டு, பின்னர் புதுப்பிக்கப்பட்டதைக் குறித்து வேதத்தில் நாம் பார்க்கின்றோம். இப்படியாகத்தான் ஆசரிப்புக் கூடாரம் இருக்கவேண்டும். அதுவும் குறிப்பிட்ட இந்த ஸ்தலத்தில்தான் இருக்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டிருந்தார். ஆனால், இஸ்ரவேலரில் அநேகர் அப்படியாகச் செய்யாமல், பேய்களுக்கு பலியிட்டு வந்தார்கள். அவர்கள் பேய்களுக்குப் பலியிட்டதால் மரித்துப் போனார்களா? இல்லையே!

    இஸ்ரவேலரின் ராஜ்யம் இன்றுவரையிலும் இருக்கின்றது. பேய்களுக்குப் பலியிடுபவர்கள் பூமியில் வாழ முடியாது என்பதல்ல. பூமியின் அதிபதியே அவன்தானே! அவன்தான் லோகாதிபதி. இப்பிரபஞ்சத்தின் ராஜ்யங்கள் யாவும் அவனிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

    இயேசுகிறிஸ்துவை உயர்ந்த மலைமீது அழைத்துச் சென்று காண்பிக்கிறான்: இவைகளின்மீதான எல்லா அதிகாரமும் தன்னிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது எனவும், அவரைத் தாழ விழுந்து தன்னை வணங்கும்படியாகவும் கூறினான்; அப்படிச் செய்தால்தான் இவை யாவற்றையும், இதின் மகிமையையும் அவருக்குத் தருவேன் என்று கூறியதை வேதத்தில் காண்கின்றோம்.

    பெத்தேலிலும் தாணிலும் கன்றுகுட்டியினுக்கு பலியிட்ட இஸ்ரவேலர் யாவரும் உடனடியாக மரித்துப்போகவில்லை. அவர்களின் மரணம் என்பது மாமிசத்திலே கட்டளையிடப்படும் மரணமல்ல. அது அவர்களின் உள்ளான மனுஷனான ஆத்துமா ஆக்கினைத் தீர்ப்பிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதால் கிடைக்கப்போகும் இரண்டாம் மரணமாகும்.

1 கொரி. 10: 18 - 22 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?

    இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ?

    அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.

    நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.

    நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?"

    எருசலேம் தேவாலயத்தில் இயேசுகிறிஸ்து வந்து நின்றபோது, அவர்கள் அவரை இன்னார் என்று அறியவில்லை. எருசலேம் தேவாலயம் கர்த்தர் கட்டளையிட்டபடி கட்டப்பட்டது. அதுபோலவே, ஆசரிப்புக் கூடாரமும் பரிசுத்த ஸ்தலமும், மகா பரிசுத்த ஸ்தலமும் அதில் வைக்கப்பட்டிருந்த மேஜையும், அந்த மேஜையின்மீது வைக்கப்பட்டிருந்த அப்பமும், குத்துவிளக்கும் இவை யாவும் கர்த்தர் அனுமதித்தபடியே இருந்தது. ஆனால் அந்தத் தேவாலயத்திற்குரியவர் தங்கள் முன் வந்திருந்ததை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, ஸ்தேவான்: நீங்கள் அங்கே பேய்களுக்கு பலிகளைச் செலுத்திக் கொண்டிருக்கின்றீர்கள் என்று சாட்சியிட்டான். அந்த தேவாலயத்தில் கர்த்தர் கூறியதுபோலவே யாவும் வைக்கப்பட்டிருந்தது. அங்கே குத்துவிளக்கு இருந்தது. அந்தக் குத்துவிளக்கினுள் ஒலிவ எண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. அந்தக் குத்துவிளக்கினுக்கு ஏழு அகல்கள் இருந்தது. அது எரிந்துகொண்டிருந்தது. அப்படியிருந்தும் அது அனுப்பப்பட்டவரை அடையாளம் காணக்கூடியதாய் இல்லை. காரணம், அந்தக் குத்துவிளக்கிற்குக் கொடுக்கப்பட்ட காலம் அப்போது நிறைவடைந்திருந்தது. மாமிசத்தின்படியான இஸ்ரவேலர் என்று பவுல் கூறுவதைப் பார்க்கின்றோம்.

1 கொரி. 10: 18, -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?"

    மாமிசத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள். அவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாய் இருக்கின்றார்கள் என்று பவுல் சாட்சியிட்டான். ஆனால், அந்தப் பலிபீடத்தில் கர்த்தர் விரும்பிய பலியினை அவர்கள் ஏறெடுக்கவில்லை. எனவே அந்த பலிகள் பேய்களுக்கு செலுத்தப்பட்ட பலியாகவே சாட்சியிடப்பட்டது. இவைகளை அறியாமல் அவர்கள் அஞ்ஞானிகளாக இருந்தார்கள். யாருக்கு பலி செலுத்துகிறோம் என்பதை அறியாமல் பலி செலுத்திக்கொண்டிருந்தார்கள்.

    எருசலேம் தேவாலயத்தில் கர்த்தர் அனுமதித்த குத்துவிளக்கு அதற்குரியதாய் கட்டளையிடப்பட்டிருந்த ஒளியினைப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அது பிரமாணத்தின் ஜீவனைக் கொண்ட ஒளியாய் இருந்தது. பிரமாண காலம் முடிவடைந்தபின், அந்தக் குத்துவிளக்கின் ஒளி ஜீவனைக் கொடுக்கக்கூடிய அதிகாரத்தினை இழந்ததாகவே சாட்சியிடப்பட்டுள்ளது. வார்த்தையின்படியாக கர்த்தர் கட்டளையிட்டிருந்த அந்த நியமனமானது அங்கே நிறைவேறியிருந்தது.

    இயேசுகிறிஸ்து சிலுவையில் தமது உயிரை மாய்த்தபோது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது என்று வேதம் கூறுகின்றது. அப்போது பரிசுத்த ஸ்தலமும், மகா பரிசுத்த ஸ்தலமும் ஒன்றாயிற்று. அதைப் பிரித்திருந்த திரைச்சீலை கிழிக்கப்பட்டது. ஆனால், அதனை இஸ்ரவேலர்கள் அங்கீகரித்தார்களா? இல்லையே! இந்த நிகழ்விற்குப் பின்னரும் எருசலேம் தேவாலயத்தில் பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருந்தது. குத்துவிளக்கும் அங்கே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் குத்துவிளக்கு ஜீவனுக்குரிய பிரமாணத்தின் சாட்சியின் ஒளியைப் பிரகாசிக்கவில்லை. மாமிசத்தின்படியான ஒரு கிரியையாகவே அந்தக் குத்துவிளக்கு அமைந்தது. அதன்பின்னர், ஜீவனுக்குரிய ஒளியானது, புறஜாதிகளாகிய நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

    பழைய ஏற்பாட்டின்படியாக அனுமதிக்கப்பட்ட குத்துவிளக்கானது தனது நீதியை நிறைவேற்றிய பின்னர், வெறும் மாமிசத்திற்குரிய ஒளியாக மாத்திரமே காணப்பட்டது. யேகோவா என்னும் நாமத்தோடு அந்தக் குத்துவிளக்கின் ஒளிக்குரிய கிரியை நிறைவடைந்தது. யேகோவா என்ற நாமத்தோடு வந்த குத்துவிளக்கு, யேகோவா என்ற நாமத்தின் கிரியை நிறைவடைந்ததும் மகிமை இழந்ததாகவே காணப்படுகின்றது. யேகோவா என்ற நாமத்திலே கட்டளையிடப்பட்ட ஆசரிப்புக்கூடாரம் யேகோவா என்ற நாமத்தின் கிரியை நிறைவடைந்ததும் மகிமை இழந்ததாகவே சாட்சியிடப்பட்டுள்ளது. எனவே, மாமிசத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள் என்று பவுல் சாட்சி கொடுத்துள்ளான். அதற்குப் பிறகு கொடுக்கப்பட்ட பிரமாணம் ஆவியின் பிரமாணம் ஆகும். இந்த ஆவியின் பிரமாணம் புறஜாதிகளாகிய நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பிரமாணமாகும். பழைய ஏற்பாட்டுக் காலத்திற்கென கட்டளையிடப்பட்ட குத்துவிளக்கானது, பழைய ஏற்பாட்டுக்கால நீதி நிறைவேறினவுடன், அது மகிமை அற்றதாக சாட்சியிடப்பட்டுள்ளது.

    பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கட்டளையிடப்பட்டிருந்த ஆசரிப்புக்கூடாரம், யேகோவா என்ற நாமத்தின் கிரியைகள் நிறைவடைந்ததும் மகிமை இழந்ததாகிவிட்டது. யேகோவா என்ற ஜீவ ஒளியைப் பிரகாசித்த குத்துவிளக்கு அந்த இரட்சிப்பின் ஒளியை இழந்துபோனது. அந்த இரட்சிப்பு மாமிச பிறப்பான இஸ்ரவேலர்களுக்கு மாத்திரமே கட்டளையிடப்பட்ட இரட்சிப்பாகும். யேகோவா என்ற நாமம் மாமிச பிறப்பான இஸ்ரவேலர்களுக்கு இரட்சிப்பினைக் கொடுக்க கட்டளையிடப்பட்ட நாமமாகும். அந்த நாமத்தின்மூலமாகக் கட்டளையிடப்பட்ட ஜீவனானது குத்துவிளக்கின் ஒளியாய் இஸ்ரவேலருக்குள் பிரகாசித்தது. இந்தக் குத்துவிளக்கு பிரகாசிக்கும்வரை பழைய ஏற்பாட்டின் கிரியை ஜீவனுக்குரியதாய் இருந்தது. அதன்பின்னர் இந்த ஜீவனானது இயேசுகிறிஸ்து மூலம் புறஜாதிகளாகிய நமக்கு கட்டளையிடப்பட்டது.

    இஸ்ரவேலர்களுக்குள்ளாக ஒளியினைக் கொடுக்க அனுப்பி வைக்கப்பட்ட குத்துவிளக்கானது, பழைய ஏற்பாட்டுக்காலம் முழுவதும் இஸ்ரவேலர்களுக்குள் ஜீவன் என்ற ஒளியைக் கொடுத்தது. இஸ்ரவேலருக்குள் கட்டளையிடப்பட்டிருந்த காலம் நிறைவடைந்தபின்னர், அந்தக் குத்துவிளக்கு மகிமை இழந்ததாயிற்று. எனவே, குத்துவிளக்கு வைக்கப்பட்டிருந்த தேவாலயமும் மகிமை இழந்ததாயிற்று. ஆனால் இஸ்ரவேலர்கள், மகிமை இழந்த அந்தக் குத்துவிளக்கின் மீது பக்தி வைராக்கியம் கொண்டவர்களாய் இருந்தார்கள். அந்தக் குத்துவிளக்கு அணையக்கூடாது என்பதில் கருத்தாய் இருந்தார்கள்; அதற்கு ஒலிவ எண்ணெய் விடவேண்டும் என்பதில் கவனமாய் இருந்தார்கள். இந்தக் குத்துவிளக்கு பரிசுத்த ஸ்தலத்திற்குள் வைக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாய் இருந்தார்கள். மேஜைமீது தேவசமுகத்து அப்பம் வைக்கப்படவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்கள். இதுபோல கட்டளையிடப்பட்ட எல்லாவற்றின்மேலும் கவனமாக இருந்தார்கள்; ஆனால் இவை யாவற்றையும் கட்டளையிட்டவரை மறுதலித்தவர்களாய் இருந்தார்கள். நியமனத்தைக் கட்டளையிட்டவரை மறுதலித்தார்கள். "உங்கள் கண்கள் காண இந்த வேதவாக்கியம் இன்றைக்கு நிறைவேறிற்று" என்று அந்த தேவாலயத்தில் நின்று சாட்சியிட்டவரை மறுதலித்தார்கள். அவரை விசுவாசிக்கக்கூடிய விசுவாசம் அவர்களிடத்தில் இல்லாதிருந்தது. அவர்களுடைய சிந்தை யாவும் ஆசரிப்புக்கூடாரம் மேலிருந்ததே தவிர, அந்த ஆசரிப்புக்கூடாரத்தை வடிவமைத்தவரிடத்தில் இல்லை. அந்த ஆசரிப்புக்கூடாரத்தின் மகிமை எடுக்கப்பட்டதை அறியாதிருந்தார்கள். குத்துவிளக்கைக் கட்டளையிட்டவர் தீர்க்கதரிசிகள் மூலம் முன்னுரைத்தவைகள் நிறைவேறும்போது அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. குத்துவிளக்கிற்கு ஒளியாய் இருந்தவரை மறுதலித்தார்கள். அவர் நானே அந்த ஒளி என்று சாட்சியிட்டார். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜீவனுக்குரிய ஒளியைக் கொடுக்கக்கூடிய கிறிஸ்துவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

    யேகோவா என்ற விளக்கு தனது மகிமையை இழந்திருந்தது. மற்றொரு விளக்கு அங்கே ஏற்றப்பட்டது. அதுவே பிதாவின் சித்தமாய் இருந்தது. யேகோவா என்ற அந்த விளக்கு கொடுத்த நியாயப்பிரமாணம் என்ற ஒளி ஜீவனுக்குரிய ஒளியாய் அப்போது இல்லை. அந்த விளக்கு ஜீவனுக்குரிய ஒளியைக் கொடுத்தபோது, ஜீவனுக்குரியவர்கள் அதனை விசுவாசித்தார்கள். அப்போது அந்த ஜீவன் குத்துவிளக்கின் ஒளியில் இருந்தது. இந்தக் குத்துவிளக்கானது பிரமாணமாகும். பிரமாணத்தை அந்தக் குத்துவிளக்கு ஒளியாய்க் கொடுத்தது. அது இஸ்ரவேலர்களைப் பிரகாசிப்பிக்கிற ஒளியாய் இருந்தது. அது வார்த்தையாய் இருந்தது. அதுவே பிரமாணம், அதுவே கட்டளை, அதுவே கற்பனை. அதனைக் கட்டளையிட்டவர் யேகோவா. ஆனால், நியாயப்பிரமாண காலம் நிறைவடைந்தபின்னர், அந்தப் பிரமாணத்தினைக் கொடுத்த குத்துவிளக்கு ஆசரிப்புக் கூடாரத்தில் வெறும் மாமிச சிந்தைக்குரியதாகவே சாட்சியிடப்பட்டது. அவர்கள் தேவாலயத்தை ரசித்தார்கள். வாருங்கள், இந்தக் கற்களெல்லாம் எப்படியானவை என்று பாருங்கள், எவ்வளவு அழகாக இந்த தேவாலயம் கட்டப்பட்டது என்று பாருங்கள் என்று அதனை மாமிச சிந்தையோடு அணுகினார்கள். அவர்களிடத்தில் ஆவியின் சிந்தை இல்லை. இந்தத் தேவாலயம் எப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். இங்கே வைக்கப்பட்டுள்ள விலையுயர்ந்த பொருட்களைப் பாருங்கள் என்று கிறிஸ்துவை அழைத்துச் சென்றார்கள். ஆனால் அவரோ, இதில் ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இல்லாமல் எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று கூறினார். அந்தக் கூடாரத்தின் மகிமை எடுபட்டுப் போகும் என்பதைக் குறித்து அவர் சாட்சியிட்டார்.

    மேலும் அவர் இதனை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை நான் எழுப்புவேன் என்றார். மூன்று நாளைக்குள்ளாக இதனை எப்படி கட்ட இயலும் என்ற சிந்தை கொண்டவர்களாகவே அவர்கள் இருந்தார்கள் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலர்களுடைய விசுவாசம் தாங்கள் காண்கிறவைகளிலேயே இருந்தது. காண்கிறவைகள் அநித்தியமானவைகள்; காணப்படாதவைகளே நித்தியமானவைகள் என்று வேதம் சாட்சியிட்டுள்ளது. அவர்களுடைய விசுவாசம் காண்கிறவைகளில் மாத்திரம் இருந்தது, அது மாமிசத்திற்குரிய காரியமாகும். அது மாமிச சிந்தையாகும். அதனை மரணம் என்று வேதம் கூறுகின்றது.

    இயேசுகிறிஸ்து தேவாலயத்திற்கு எதிரானவராகவும், மோசேயின் பிரமாணத்துக்கு விரோதமானவராகவும் அவர்கள் கண்களுக்கு காணப்பட்டார். மோசேயின் பிரமாணம் நிறைவேறிவிட்டது; மோசேயின் மூலம் கட்டளையிடப்பட்ட நீதி நிறைவேறிவிட்டது; அந்த நீதியை மாத்திரம் பின்பற்றிக்கொண்டிருப்பது நீதி அல்ல; நீதிபரர் வந்து சென்றுவிட்டார்; கிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டார்; இவைகளையே பவுல் சுவிசேஷமாய் அறிவித்தான், "மாமிசத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்" என்று இங்கே கூறப்பட்டதைப் பார்க்கின்றோம்.

    கிறிஸ்து மகிமைப்பட்டபின்னரும் மாமிசத்தின்படியான இஸ்ரவேலர் எருசலேம் தேவாலயத்திலே பலி செலுத்திக்கொண்டிருந்தார்கள்; எருசலேம் மகிமை இழந்தபின்னரும் அங்கே பலி செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அந்த தேவாலயத்தினை வடிவமைத்து அதற்குள்ளாகக் குத்துவிளக்கை அனுமதித்தவர் அந்த ஸ்தலத்தினை விட்டு வெளியேறி விட்டார். அங்கே குத்துவிளக்கு மாமிசத்திற்குரியதாக மாத்திரம் காணப்பட்டது. அது தனது மகிமையினை இழந்துவிட்டது. ஜீவனைக் கொடுக்கக்கூடிய, ஒளியைக் கொடுக்கக்கூடிய விளக்காக அது இல்லை. அந்த மகிமையினை இழந்தபின்னர் அதற்கு இடப்படுகின்ற பலியானது பேய்களுக்கு இடப்படும் பலியாகவே தீர்க்கப்பட்டது. பழைய ஏற்பாட்டுக் குத்துவிளக்கு எடுக்கப்பட்டபின், ஒரு புதிய பொன் குத்துவிளக்கு புதிய ஏற்பாடு குத்துவிளக்காக ஏற்றப்பட்டது.

வெளி. 1: 12 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,"

    பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஆசரிப்புக்கூடாரத்திலிருந்த அந்தக் குத்துவிளக்கு, அதன்பின்னர் ஏழு பொன் குத்துவிளக்குகளாய் ஒளியிடுவதைக் குறித்து சாட்சியிடப்பட்டது. அப்போஸ்தலனாகிய யோவான் அந்த ஏழு பொன் குத்துவிளக்குகளைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்துள்ளான். இவைகள் புதிய ஏற்பாட்டு குத்துவிளக்குகளாகும்.

வெளி. 1: 11 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது."

    இந்த ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளி. 1: 13 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்."

    இங்கே ஏழு குத்துவிளக்குகள் இருக்கிறது. அந்த ஏழு குத்துவிளக்குகளுக்கும் மத்தியில் மனுஷகுமாரன் இருக்கின்றார்; அவர் ஆட்டுக்குட்டியானவராக அமர்ந்திருக்கின்றார்.

வெளி. 1: 20 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்."

    இந்த ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஏழு சபைகளின் நடுவிலும் ஒருவர் பிரகாசிக்கின்றவராய் அமர்ந்திருக்கின்றார். ஏழு சபைக்காலங்களும் நிறைவடைந்தபின், மேலும் ஒரு சபை கட்டளையிடப்படவில்லை. கட்டளையிடப்பட்ட இந்த ஏழு சபைக்குள்ளாக மனுஷகுமாரன் அமர்ந்திருக்கிறார். ஏழு சபைக்காலங்களைக் குறித்து ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளி. 1: 18 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்."

    இந்த ஏழு குத்துவிளக்குகளுக்கும் மத்தியில் இருக்கிறவருடைய கையில் ஒரு திறவுகோல் இருக்கிறது. அது மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோலாகும்.

    இந்த ஏழு குத்துவிளக்குக்கும் மத்தியில் மனுஷகுமாரன் இருப்பதை யோவான் பார்க்கிறார். இந்த குத்துவிளக்கானது ஜீவனுக்குரிய ஒளியினைக் கொடுப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம். அவைகள் ஏழு சபை பிரமாணங்களாகும்.

    பழைய ஏற்பாடு நிறைவுபெற்று புதிய ஏற்பாடு ஆரம்பமானபோது, எழக்கூடிய அந்த ஒளியானது குமாரன் மூலமாய் பிரகாசிக்க ஆரம்பித்தது. நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கின்றேன் என்றும், நான்தான் வழி என்றும், நான்தான் சத்தியம் என்றும் அவர் சாட்சியிட்டார். மேலும், ஜீவ அப்பம் நானே என்று அந்த ஒளியானவர் சாட்சியிட்டார். அந்த ஒளியைக் குறித்து சாட்சியிட்டவன் யோவான்ஸ்நானன். அவன் தான் அந்த ஒளி அல்ல என்றும், அந்த ஒளியைக் குறித்து தான் சாட்சி கொடுக்க அனுப்பப்பட்டவன் என்றும் சாட்சியிட்டான். ஒளியைக் கொடுப்பது குத்துவிளக்கு என்று வேதம் சாட்சியிட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் சாட்சியிடப்பட்டுள்ள இந்த ஏழு குத்துவிளக்கானது ஒரு காலத்திற்கு ஒரு குத்துவிளக்கு வீதம் அனுப்பப்படுவதாக உரைக்கப்பட்டுள்ளது. எல்லா குத்துவிளக்குகளும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் அனுப்பப்படுவதில்லை. அனுப்பப்படக்கூடிய அந்தக் குத்துவிளக்குகள் தன்னகத்தே ஒளி கொண்டது. அந்த ஒளி ஜீவன் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. அந்த ஜீவனை ஏற்றுக்கொள்பவர்களுக்கு அது நித்திய ஜீவனைக் கொடுக்க கட்டளை பெற்றுள்ளது.

    ஒளி கொடுப்பதற்காக அனுப்பி வைக்கப்படும் குத்துவிளக்கானது தன்னை ஏற்றுக்கொள்பவர்களுக்கு ஜீவனைக் கொடுக்க கட்டளை பெற்றது. அதற்குரிய காலம் நிறைவேறிய பின், அந்த குத்துவிளக்கிலிருந்து ஒளி எடுத்துக்கொள்ளப்படுகின்றது. குத்துவிளக்கானது யாருக்கெல்லாம் ஜீவனைக் கொடுக்கவேண்டும் என்று திட்டம் பண்ணப்பட்டு அனுப்பப்பட்டதோ, அவர்களுக்குள் ஜீவனைக் கட்டளையிட்டபின் அது மகிமையற்றதாகவே சாட்சியிடப்பட்டுள்ளது. தன்னை ஏற்றுக்கொண்டவர்களோடு சேர்ந்து அந்தக் குத்துவிளக்கு தனது மகிமைக்குள்ளாகின்றது.

    குத்துவிளக்கு என்பது ஆவிக்குள்ளான ஜீவனைக் கொடுக்க கட்டளையிடப்பட்டதாகும். பழைய ஏற்பாட்டின் காலத்தில் இந்தக் குத்துவிளக்கானது எருசலேம் தேவாலயத்தில் இருந்தது. அதன்பின்னர், அது சபைகளுக்குள்ளாக அனுப்பப்படுகின்றது. முதலாவது சபைக்குள் அந்தக் குத்துவிளக்கு கொடுத்த ஒளியினை அப்போஸ்தலனாகிய பவுல் சாட்சியிட்டான். அப்படியாக ஏழு சபைக்காலங்களிலும் ஏழு பொன் குத்துவிளக்குகள் அனுப்பப்பட்டது. அவை ஒவ்வொன்றும் தங்களுக்குரிய காலத்தில் ஜீவனுக்குரிய ஒளியினைக் கொடுத்து, பின்னர் தனது மகிமையோடு கிறிஸ்துவிடம் சென்றடைந்தது.

    குத்துவிளக்கினுக்குரிய மகிமையின் காலம் நிறைவேறிய பின்னர், அதனைப் பற்றிக்கொண்ட விசுவாசிகள் குத்துவிளக்கினுக்கு ஜீவனைக் கொடுக்க கட்டளையிட்டவரை மறந்துபோன நிலைக்குள்ளானார்கள். எனவே அங்கே மற்றொரு குத்துவிளக்கு ஒளியினைக் கொடுக்கும்பொருட்டு அனுப்பப்பட்டது.

    முதலாவது சபைக்காலத்து குத்துவிளக்கு தனது மகிமையை இழந்தபின்னர், இரண்டாவது சபைக்குரிய குத்துவிளக்கு அனுப்பப்பட்டது. முதலாவது சபை விசுவாசிகள் எப்படி குத்துவிளக்கினை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை அனுப்பியவரை மறுதலித்தார்களோ, அதேநிலை இரண்டாம் சபைக்குரிய குத்துவிளக்கினுக்கும் ஏற்பட்டது. இப்படியாக ஏழு சபைக்காலங்களிலும் அந்த சபைக்குரிய குத்துவிளக்கினை மாத்திரம் பற்றிக்கொண்டவர்களாக விசுவாசிகள் காணப்பட்டார்கள். அவர்கள் குத்துவிளக்கு சாட்சியிட்ட பிரமாணத்தினை மாத்திரம் பற்றிக்கொண்டு, அதற்கு ஒளியினைக் கட்டளையிட்டவரை மறுதலித்தபடியால் மற்றுமொரு குத்துவிளக்கு அனுப்பப்பட்டது. புதிய பிரமாணம் ஒளியாய் பிரகாசித்தது. இப்படியாகவே ஏழு சபைக்காலங்களிலும் நிகழந்தது.

    குத்துவிளக்குகளை தனது வலது கரத்திலிருந்து அனுப்பியவர் ஆட்டுக்குட்டியானவர். அந்த ஆட்டுக்குட்டியானவருடைய நாமம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. ஆனால், சபைகள் குத்துவிளக்கினை அனுப்பி வைத்தவரை மறந்து, குத்துவிளக்கை மாத்திரம் பற்றிக்கொண்டார்கள். எருசலேம் ஜனங்கள் கர்த்தரை மறந்து, தேவாலயத்தை பற்றிக்கொண்டிருந்ததுபோல, சபை பக்தர்களும் கர்த்தரை மறுதலித்து சபைக்கோட்பாடுகளை மாத்திரம் பற்றிக்கொண்டு காணப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் சபையைக் கட்ட அனுமதித்த கர்த்தரை மறந்து, சபையை மாத்திரம் பற்றிக்கொண்டவர்களானார்கள். சபைப்பிரமாணத்தினை மாத்திரம் பற்றிக்கொண்டவர்களானார்கள். அது அவர்கள் கர்த்தரை அறியக்கூடிய அறிவை இழக்கச் செய்யும் நிலைக்குள்ளாக தள்ளிவிடுகின்றது. மிருகத்தின் தன்மை கொண்ட சபைக்கோட்பாடு கர்த்தரை அறியக்கூடிய அறிவை இழக்கச் செய்கின்றது.

    முதலாவது குத்துவிளக்கு அனுப்பி வைக்கப்பட்டதுமுதல் ஏழாவது குத்துவிளக்கு அனுப்பி வைக்கப்பட்டது வரையிலும் இதே தன்மையிலேயே சபைகள் தங்களின் கிரியைகளில் பூரணப்பட்டுள்ளது. எனவே கிருபையானது புறஜாதியாரை விட்டு எடுபடக்கூடிய ஒரு நிலை உருவாகின்றது. ஒவ்வொரு சபையும் அந்த சபை விசுவாசிகளை தங்களது கோட்பாடுகளுக்கு அடிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அது வார்த்தையை விசுவாசிக்க இடறலாய் நின்று தனது கிரியைகளைச் செய்யும்.

    முதலாவது ஏற்பாடு பழைய ஏற்பாடு. அது முழுக்க முழுக்க இஸ்ரவேலர்களுக்குரியது. இரண்டாவது ஏற்பாடு, அது புதிய ஏற்பாடு. அது முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களுக்குரியது. பழைய ஏற்பாட்டின் இறுதியில் எப்படி மாமிசத்திற்குரியவர்களாய் இஸ்ரவேலர் இருந்தார்களோ, அதுபோலொத்த ஒரு நிலையிலேயே புதிய ஏற்பாட்டுக்காலத்தில் கிறிஸ்தவர்களும் இருப்பார்கள். கிறிஸ்தவர்கள் மாமிசத்தின்படி கிறிஸ்தவர்களாவார்கள். ஏழு சபைக்காலங்களும் நிறைவடைந்தபின் கிறிஸ்தவர்களுடைய மனோநிலை முற்றிலுமாக மாமிசத்திற்குரியதாகவே காணப்படும்.

    எருசலேம் தேவாலயத்தில் மாத்திரம் பலி செலுத்தவேண்டும்; இது பழைய ஏற்பாட்டுப் பிரமாணம். அப்போதுதான் பிரமாணத்தின்படியாக அந்தப் பலி கர்த்தரால் அங்கீகரிக்கப்படும். எருசலேம் தேவாலயம் அல்லாதபடிக்கு புறம்பான இடத்தில் பலி செலுத்தப்படுமானால், அந்தப் பலி பேய்களுக்குரியதாகிவிடும். எருசலேமில் செலுத்தப்படும் பலியே கர்த்தரிடத்தில் சென்றடையும் பலியாய் சாட்சியிடப்பட்டது. நியாயப்பிரமாணம் நிறைவடையும் விதமாய் மனுஷகுமாரன் வந்து இந்த தேவாலயத்தினை இடித்துப் போடுங்கள் என்று கூறியபோது, அதனை அந்த தேவாலய பக்தர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மனுஷகுமாரன் தேவதூஷணம் செய்தவராகவே அவர்கள் கண்களுக்குக் காணப்பட்டார்.

    இஸ்ரவேலரில் ஒரு பகுதியினர் ஆவிக்குரியவர்களாகவும், மறு பகுதியினர் மாமிசத்திற்குரியவர்களாகவும் காணப்பட்டார்கள். ஆவிக்குரியவர்கள் ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொண்டார்கள், ஜீவனுக்குரியவர்களானார்கள். மாமிசத்திற்குரியவர்கள் ஆவிக்குரியதை ஏற்றுக்கொள்ளாததினால், ஆக்கினைக் குரியவர்களாக தீர்க்கப்பட்டார்கள். மாமிச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவன் என்று வேதம் கூறுகின்றது.

    இஸ்ரவேலர்கள் மாமிசத்திற்குரியவர்களாய் மாறியதுபோல, கிறிஸ்தவர்களுடைய நிலையும் மாறும். இஸ்ரவேலர்களிடம் எப்படியான சிந்தை காணப்பட்டதோ, அதுபோலவே கிறிஸ்தவர்களுடைய சிந்தையும் காணப்படும். கர்த்தரை மறந்து எருசலேம் தேவாலயத்தின்மீது பற்று கொண்டிருந்த இஸ்ரவேலர்கள்போல சபைகள் மீது விசுவாசம் கொண்டவர்களாகவே கிறிஸ்தவர்கள் காணப்படுவார்கள். சபை என்னும் குத்துவிளக்கினை அனுப்பினவரிடத்திலே விசுவாசம் காணப்படாமற்போகும். சபைக்காலங்கள் நிறைவுபெற்றபின் சபை என்ற அந்தக் குத்துவிளக்கு தன்னுடைய கிரியைகளை நிறைவேற்றி கிறிஸ்துவினைச் சூழ சென்றடையும்.

    சபைக்காலங்கள் நிறைவுபெற்றபின் கிறிஸ்தவர்கள் ஏழு சபைகளிலும் அனுப்பப்பட்ட குத்துவிளக்கை மாத்திரம் பற்றிக்கொண்டிருப்பார்கள். அந்தக் குத்துவிளக்குகள் ஜீவனுக்குரிய ஒளியை இழந்திருப்பதை அறியாதிருப்பார்கள். ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்து பிரிந்தெழும்பியது பிரிவினையாளர்கள் சபை. அது பிரிந்தெழுந்தபோது, அதன் விசுவாசிகள் அந்த சபையின் பிரமாணங்கள்மீது வைராக்கியம் கொண்டிருந்தார்கள். அந்த சபை பிரகாசிக்க குத்துவிளக்காய் மார்ட்டீன் லூதரின் போதனை அமைந்தது. பிரிவினையாளர் சபைக்குரிய சபைக்காலம் நிறைவுபெற்றபின், அதின் விசுவாசிகள் சபைமீது மாத்திரம் வைராக்கியம் கொண்டவர்கள் ஆனார்கள். அதனை ஸ்தாபிக்கக் கட்டளையிட்ட கிறிஸ்துவை மறந்தார்கள். அதுபோல, 6-வது சபை முடிந்து, 7-வது சபை எழும்பின காலத்திலும் அப்படியான ஒரு கிரியையே காணப்பட்டது.

    ஏழாம் சபையே சபைகளின் நிறைவின் காலமாகும். அதன்பிறகு, எழும்பும் சங்கம காலம் என்பது மறைக்கப்பட்ட முத்திரைகள் யாவும் உடைக்கப்படக்கூடிய காலம் ஆகும். மாமிசப் பிறப்பாகிய இஸ்ரவேலர்கள் வார்த்தையை மறுதலித்தபோது, அவர்கள் ஏறெடுத்த பலி பேய்களுக்கு செலுத்தப்பட்ட பலிகளாக மாறிற்று. அதுபோலவே, சபைக்காலங்கள் நிறைவுபெற்றபின், சபைகளில் ஏறெடுக்கப்படும் பலிகள் யாவும் பிசாசுகளுக்கு ஏறெடுக்கப்படும் பலியாகவே மாறிவிடும் என்று வேதம் சாட்சியிடுகின்றது.

சக. 4: 2 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது."

    இங்கே சாட்சியிடப்பட்டுள்ள குத்துவிளக்கானது, பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்காகும். ஏன் அது பொன்னினால் செய்யப்பட்டிருக்கின்றது?

    இஸ்ரவேலரிடமும் அந்தக் குத்துவிளக்கு பொன்னினால் செய்யப்பட கட்டளையிடப்பட்டது. பின்னர் புறஜாதிகளிடத்தில் எழும்பக்கூடிய ஏழு குத்துவிளக்குகளும் பொன்னினால் செய்யப்பட்டதாகவே சாட்சியிடப்பட்டுள்ளது.. பொன் என்பது மகிமைக்குரியதாகும். எனவேதான், குத்துவிளக்குகள் யாவும் பொன்னினால் செய்யப்பட்டது என்று சாட்சியிடப்பட்டுள்ளது.

எண். 31: 50 - 54 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவிநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும், கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.

    அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சகலவித வேலைப்பாடான பணிதிகளான அந்தப் பொன்னாபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள்.

    இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவரானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாயிருந்தது.

    யுத்தத்திற்குப் போன மனிதர் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்காகக் கொள்ளையிட்டிருந்தார்கள்.

    அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம் பேருக்குத் தலைவரானவர்களின் கையிலும், நூறுபேருக்குத் தலைவரானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்."

    பொன் குத்துவிளக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக்கூடாரத்தில் வைக்கக் கட்டளையிடப்பட்டது. அது கர்த்தருடைய சந்நிதியில் வைக்கப்பட்டது. கர்த்தருடைய சந்நிதி பலி செலுத்த தெரிந்தெடுக்கப்பட்ட ஸ்தலமாகும். எனவே இந்தக் குத்துவிளக்கானது கர்த்தரது மகிமையின் ஸ்தலத்தில் மகிமைக்குரியதாய் வைக்கப்பட்ட கட்டளையிடப்பட்டது. குத்துவிளக்கு இருக்கிற இடம் கர்த்தருடைய சந்நிதியாக சாட்சியிடப்பட்டுள்ளது. எனவே கர்த்தர் தெரிந்தெடுத்த அந்த ஸ்தலத்தில் அல்லாமல், வேறு எங்கும் பலியிட அனுமதிக்கப்படவில்லை.

எண். 31: 50 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவிநிவிர்த்தி செய்யும்பொருட்டு...."

    பொன் குத்துவிளக்கு வைக்கப்பட்டிருக்கும் இடம் கர்த்தருடைய சந்நிதியாகும். அந்த இடத்தில் மட்டுமே பாவிநிவிர்த்தி பலி செலுத்தப்பட்டது. பாவம் நிவிர்த்தியானவர்கள் பரலோக சுதந்தரத்தில் பங்கடைய கிருபை பெற்றார்கள். ஆசரிப்புக் கூடார மகிமை இங்கே குத்துவிளக்கினிடமும் பிரகாசித்தது. பாவத்தினை நிவிர்த்தி செய்யக்கூடிய ஒளி அந்த குத்துவிளக்கிலிருந்தது. அந்தக் குத்துவிளக்கினுடைய ஒளி பாவத்திலிருந்து இரட்சிப்பைக் கொடுத்தது, விடுதலையைக் கொடுத்தது. இருள் என்பது பாவமாகும். குத்துவிளக்கின் ஒளி இருளிலிருந்து விடுதலையைக் கொடுத்தது; பாவத்திலிருந்து விடுதலையைக் கொடுத்தது.

    கர்த்தருடைய சந்நிதியிலிருந்து குத்துவிளக்கின் மகிமை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அந்தக் குத்துவிளக்கு ஒளி கொடுக்கக்கூடிய தன்மையினை இழந்திருந்தது.

    சென்னை மாநகரத்திலே இயேசுகிறிஸ்துவினுடைய சீஷர்களில் ஒருவராகிய தோமா கொலை செய்யப்பட்டார். இன்றைக்கு அதை புனித ஸ்தலமாக வைத்திருக்கிறார்கள். St.Thomas Mount என்றும் அந்த மலைக்குப் பெயாரிடப்பட்டுள்ளது. அதுபோல, சாந்தோமிலும் ஒரு ஆலயம் உள்ளது, அது இப்போது புனித ஸ்தலமாக மாறிவிட்டது. புறஜாதிகளுக்குள்ளாக அப்போஸ்தலனாகிய தோமாவும் சுவிசேஷம் அறிவித்தார். அதனை ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள் ஆனார்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் யாவரும் ஆத்துமா என்ற ஜீவனைப் பெற்றார்கள். கிறிஸ்தவர்களுக்குள்ளாகப் பிரமாணம் சாட்சியிடப்பட்டது. அதனை சபைத்தூதர்கள் வந்து சாட்சியிட்டார்கள். கர்த்தரது வலது கரத்திலிருந்து அனுப்பப்பட்ட சபைத்தூதர்கள் ஏழு சபைக்காலங்களிலும் பிரமாணங்களைக் குறித்து சாட்சியிட்டார்கள்.

    சபைக்காலங்களில் ஞானஸ்நானம் என்பது புறஜாதியார்களுக்கான உடன்படிக்கையின் அடையாளமாய் இருந்தது. ஏழு சபைக்காலங்களும் நிறைவடைந்தபின், ஞானஸ்நானம் என்ற அடையாளம் வெறும் மாமிச அடையாளமாகவே காணப்படும். விருத்தசேதனம் என்ற அடையாளம் கிறிஸ்து மகிமையடைந்ததும் மாமிச அடையாளமானதுபோல, ஞானஸ்நானமும் காணப்படும். புறஜாதிகளின் காலம் நிறைவடைந்ததும் ஆத்தும ஜனனம் முற்றிலுமாய் புறஜாதிகளிடத்தில் நிறைவடையும். ஆத்துமா என்ற ஆவியின் சரீரம் இல்லாத மனிதன் வெறும் மாமிச பிண்டமாகவே காணப்படுவான். அவனுக்குள் ஆவியின் இடைபாடு இருக்காது. அதன்பின்னர், சுவிசேஷத்தினாலும் ஞானஸ்நானத்தினாலும் ஒரு பயனும் இராது. சுவிசேஷமும் ஞானஸ்நானமும் ஆத்தும இரட்சிப்பிற்காகக் கட்டளையிடப்பட்டவைகளாகும்.

    பொன் குத்துவிளக்கானது பாவத்தை மன்னிக்கக்கூடிய ஒளியினைக் கொண்டதாக சாட்சியிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத நிலை ஆத்தும ஜனனம் கிடைக்கப்பெறாத ஒன்றாகவே சாட்சியிடப்பட்டுள்ளது. ஆத்துமா இல்லாத நிலை ஜென்ம சுபாவமாகும். புறஜாதிகளைக் குறித்து பாவிகள் என்று பவுல் சாட்சியிட்டுள்ளான். ஆத்துமா இல்லாத புறஜாதிகள் வெறும் மாமிச பிண்டங்களாகும். ஆத்துமா பெற இயலாதிருந்த இந்தப் பாவம் நீங்க கிறிஸ்து இரத்தம் சிந்தினார். அந்த இரத்தமே புறஜாதிகளிடத்தில் ஆத்துமா என்ற உள்ளான மனிதனைப் பெற்றுக்கொள்ள கிருபையினைக் கொண்டுவந்து சேர்த்தது. அவரது இரத்தத்தில் இருந்த ஜீவன் நமக்குள் ஆத்துமா என்ற ஜீவனை உருவாக்கிற்று. இப்படி ஆத்துமா பெற்றுக் கொண்டவர்களுக்குள் ஒரு பிரமாணம் அனுப்பப்பட்டது. ஏழு சபைக்காலங்களிலும் அது சபைப் பிரமாணமாய் அனுப்பப்பட்டது. அது அந்த நாளுக்குரிய குத்துவிளக்கின் ஒளியாய் பிரகாசித்தது.

    அனுப்பப்பட்ட ஏழு பொன் குத்துவிளக்குகளும் ஏழு சபைகளுக்குரிய பிரமாணங்களை ஒளியாய் சாட்சியிட்டது. ஏழாவது பொன் குத்துவிளக்கு அவருடைய நாமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க அனுப்பப்பட்ட பிரமாணமாய் ஒளிவிட்டு பிரகாசித்தது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமம் பிதாவின் நாமமாய் உயர்த்தப்பட்டதைக் குறித்து அது சாட்சியிட்டது. ஜீவனைப் பெற்றவர்கள், அவருடைய வருகையிலே எடுத்துக்கொள்ளப்படுவதற்காக ஒரு குத்துவிளக்கின் ஒளி சாட்சியிடப்பட்டுள்ளது.

    ஏழாம் தூதன் எக்காள சத்தமிடும் நாளிலே, அதாவது ஏழாம் சபைக்காலம் நிறைவடையும் நாட்களில் தேவரகசியம் நிறைவேறும் என்று யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இங்கே நிறைவடையும் என்று சாட்சியிடப்பட்டுள்ள இந்த இரகசியமானது புறஜாதிகளுக்குள் ஜெனிப்பிக்கப்பட்ட ஆத்தும ஜனனமாகும். கிருபை புறஜாதிகள் மத்தியில் நிறைவடையும் வேளையில் ஒளியினைக் கொடுக்க ஒரு குத்துவிளக்கு அனுப்பப்படும். அது ஜீவ ஒளியைக் கொடுக்கக்கூடிய தன்மை கொண்ட குத்துவிளக்காகும். அதுவே கடைசி ஏற்பாட்டின் குத்துவிளக்காகும். இந்தக் குத்துவிளக்கு ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் காலம் கடைசி ஏற்பாடாகும். கர்த்தரின் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படும் மணவாட்டி இந்தக் குத்துவிளக்கின் ஒளியில் பிரகாசிப்பவளாக சாட்சியிடப்பட்டுள்ளாள்.

சக. 4: 2 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது."

    இஸ்ரவேலர்களுக்குள்ளாக கட்டளையிடப்பட்ட பொன் குத்துவிளக்கில் ஏழு அகல்கள் இருந்தது. அதுபோல, கடைசி ஏற்பாட்டில் அனுப்பப்படும் இந்தக் குத்துவிளக்கிலும் ஏழு அகல்கள் காணப்படும் என்று இங்கே தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேலருக்குள்ளாகக் கட்டளையிடப்பட்டுள்ள பொன் குத்துவிளக்கினுக்குள் ஒலிவ எண்ணெய் ஊற்றப்பட்டதுபோல, இந்தப் பொன் குத்துவிளக்கிற்குள்ளும் ஒலிவ எண்ணெய் ஊற்றப்படும். இந்தப் பொன் குத்துவிளக்கு என்பது வார்த்தையைக் குறிப்பதாகும். அது ஜீவனைக் கொடுக்கக்கூடிய அன்றைக்குரிய வார்த்தையாகும். ஜீவனுள்ளோருடைய தேசத்தில் மணவாட்டியாய் சென்றடைய தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் ஒலிவ எண்ணெய் வார்க்கப்பட்டுள்ள அந்த குத்துவிளக்கின் மகிமை இன்னதென்று அறிவார்கள்.

    இந்தக் குத்துவிளக்கு பாவ மன்னிப்புக்கென்று அனுப்பப்படும் ஒளியாகிய வார்த்தைக்குச் சாட்சியிடும். மாமிசத்தில் பரிசுத்தமான ஒரு ஜீவியம் மாத்திரம் ஒரு மனிதனை பரலோக ராஜ்யத்திற்குள் அழைத்துச் செல்லாது. மாமிசத்தினுடைய பரிசுத்தம் ஒரு மாமிச சரீரத்தை ஒழுங்குபடுத்தும். மாமிசத்தில் நற்கிரியைகள் செய்பவர்களின் ஜீவியம் அவர்களுடைய நன்னடத்தைக்குச் சாட்சியிடும். அவர்கள் மற்ற மனிதர்கள் மத்தியில் புகழ்ச்சியாக எண்ணப்படுவார்கள். மாமிசத்திற்குள்ளான பாவமற்ற ஜீவியம் மாத்திரம் ஒரு மனிதனை பரலோக ராஜ்யத்திற்குள்ளாக அழைத்துச் செல்லாது. மாமிச பரிசுத்தம் மாத்திரம் ஒரு மனிதனுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்காது.

    ஆவிக்குரிய பாவம் ஒரு ஆத்துமாவை ஆக்கினைக்குள்ளாக்கும். கடைசி ஏற்பாட்டில் அந்தப் பாவத்தினை நீக்கிடக்கூடிய ஒளியினை அந்தக் குத்துவிளக்கு சாட்சியிடும். அந்தப் பாவம் இன்னதென்று சாட்சியிடுவதே வார்த்தையின் ஊழியம் ஆகும். பாபிலோனின் வேசித்தனங்களுக்கு உடன்படாதிருக்கவும், அவளுக்கு நோரிடப்போகும் வாதையிலே அகப்படாதிருக்கவும் அவளைவிட்டு வெளியேறி வர அது அறைகூவலிடும். பாவத்தைக் கண்டித்து உணர்த்தக்கூடியது வார்த்தை. இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்ட வார்த்தை. அவர் அன்று இஸ்ரவேலர்கள் மத்தியில் பாவம் இன்னதென்று சாட்சியிட்டார். சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார் என்று சாட்சியிட்டார். தேற்றரவாளன் பாவத்தை உணர்த்துவார். அது உலகம் சாட்சியிடும் பிரகாரமாக இராது. ஆவிக்குரிய பிரமாணம் ஆவியானவரால் சாட்சியிடப்படும். அந்த ஆவிக்குரிய பிரமாணமே ஒரு மனிதனை நித்திய ஜீவனுக்குரியவனாக்கும்.

    வலது கைக்கும், இடது கைக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாய் இருக்கக்கூடிய கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் அந்தக் குத்துவிளக்கு அவரது ஒளியைக் குறித்து சாட்சியிடும். அந்த சாட்சிகள் கர்த்தர் அபிஷேகித்து அனுப்பப்போகும் தூதர்களாகும். அவர்கள் அந்தக் குத்துவிளக்கின் ஒளியாய் பிரகாசிப்பார்கள்.

    ஏழு சபைக்காலங்களும் நிறைவடைந்தபின், இந்த ஏழு குத்துவிளக்குகளும் ஏழு தலைகள் கொண்டதாய் சாட்சியிடப்பட்டுள்ள மிருகமாகும்.

    பழைய ஏற்பாட்டின் காலத்தில் புறஜாதிகள் கிருபை என்ற ஆத்தும ஜனனத்தினை பெறக்கூடிய தகுதியினை இழந்திருந்தார்கள். அதுபோல் புதிய ஏற்பாட்டின் காலத்தில் இஸ்ரவேலர்கள் அந்தக் கிருபையினை இழந்திருந்தார்கள். கடைசி ஏற்பாட்டின் காலத்தில் அந்தக் கிருபையானது புறஜாதிகளைவிட்டு பூரணமாய் எடுக்கப்படும். அவர்களுக்குள் ஆவியின் சரீரம் என்ற ஆத்தும சரீரம் நிறுத்தப்பட்டு விடும். அது புறஜாதிகளுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் நிறைவின் காலமாகும். அதன்பின்னர், புறஜாதிகள் யாவரும் பாவிகளாகவே தீர்க்கப்படுவார்கள். அவர்கள் ஏறெடுக்கும் எந்தப் பலிகளும் கர்த்தரது சமூகத்தில் ஏற்கப்படப்போவதில்லை. சபைக்காலங்கள் நிறைவுபெற்றபின், ஒளி கொடுக்க அனுப்பப்பட்டுள்ள ஏழு சபைகளின் குத்துவிளக்குகளும் ஜீவனுக்குரிய ஒளியைக் கொடுக்காது. சபைகளின் பிரமாணங்கள் பாவத்தை நிவிர்த்தியாக்காது. பாவத்தை நிவிர்த்தியாக்கக்கூடிய ஒளியினை சபைக்குரிய குத்துவிளக்குகளால் கொடுக்க இயலாது. ஜீவனுக்குரிய ஒளியினை இழந்த சபைக்கால குத்துவிளக்குகள் மகிமை இழந்த எருசலேமின் ஆலயத்தில் வைக்கப்பட்ட குத்துவிளக்குகளைப் போலாகும். மகிமையிழந்த எருசலேம் பாபிலோனாக சாட்சியிடப்பட்டுள்ளது.

வெளி. 18: 2 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்தஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று."

    ஒளியிழந்த குத்துவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள பாபிலோன் பேய்களுடைய குடியிருப்பாகும். அதில் வைக்கப்பட்டுள்ள குத்துவிளக்குகள் யாவும் ஜீவனுக்குரிய ஒளியைக் கொடுக்க இயலாது போகும். அதின் ஒளி இருளை நீக்காது. எனவே அதனைவிட்டு வெளியேறி ஒளியினைக் கொடுக்கக்கூடிய குத்துவிளக்கிலிருந்து வெளிப்படும் வார்த்தையினைப் பற்றிக்கொள்ள கர்த்தரது சாட்சிகள் அறைகூவல் விடுவார்கள். இந்தக் கர்த்தரது சாட்சிகள் ஒலிவ மரங்களாய் சாட்சியிடப்பட்டுள்ளார்கள். அந்த ஒலிவ மரங்களின் கனிகளிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட எண்ணெயினால் பிரகாசிக்கிற குத்துவிளக்கே ஜீவனுக்குரிய மார்க்கத்தினை சாட்சியிடும்.

சக. 4: 11 - 14 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.

    மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.

    அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

    அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்."

    இந்தக் குத்துவிளக்கிற்கு ஒலிவ எண்ணெயினைக் கொடுக்கும் ஒலிவ மரங்கள் கர்த்தரது சமூகத்தில் நிற்கின்ற அபிஷேகம் பெற்றவர்கள் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. அவர்கள் சாட்சியிடப்போகும் நாமமே பிரகாசிக்கிற குத்துவிளக்கின் ஒளியாகும். அந்த ஒளியில் மட்டுமே ஜீவன் இருக்கும். அந்த ஜீவனே மனிதனுக்கு ஒளியாய் இருக்கும். அந்த ஒளி அவரது வார்த்தையில் இருக்கிறது. அந்த வார்த்தை அபிஷேகம் பெற்ற ஒலிவ மரங்களினால் சாட்சியிடப்படும்.

1 யோவா. 1: 1, 2 -ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.

    அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்."

    அன்று அந்த ஜீவனைக் குறித்து அப்போஸ்தலர்கள் சாட்சியிட்டார்கள். அப்போஸ்தலர்கள் வேதாகமத்தினை நன்கு கற்று அறிந்தவர்கள் அல்ல. பரிசுத்த ஆவி போதித்ததை அவர்கள் ஜனங்கள் மத்தியில் சாட்சியிட்டார்கள். அவர்கள் மாமிசத்தில் வெளிப்பட்ட அந்த வார்த்தைக்கு சாட்சியிட்டார்கள். அந்த வார்த்தை பிதாவினிடத்திலிருந்து வெளிப்பட்டதை அப்போஸ்தலனாகிய யோவான் சாட்சியிட்டான். அந்த வார்த்தை புறஜாதியாரின் கிருபை நிறைவடையும் வேளையில் தன்னை வெளிப்படுத்தும். வெளிப்படுத்தப்படும் அந்த வார்த்தை கர்த்தரது சாட்சிகள் மூலம் அடையாளம் காட்டப்படும்.

    கர்த்தரது சாட்சிகளின் ஊழியம் அந்த வார்த்தைக்கு சாட்சியிடும். மறைக்கப்பட்டுள்ள தேவரகசியங்கள் யாவும் அப்போது வெளிப்படுத்தப்படும். அவர்கள் பெற்ற அபிஷேகத் தைலத்தினால் பிரகாசிக்கும் குத்துவிளக்கானது கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் ஜீவனுக்குரிய ஒளியைக் குறித்து சாட்சியிடும்.

    அந்த ஒளியினால் பிரகாசிக்க கர்த்தர் தம்முடைய அளவில்லாத கிருபையினை நமக்கும் கட்டளையிடும்படியாய் தேவ சமூகத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம். கர்த்தர் தமது கிருபையினைக் கட்டளையிடுவாராக !

ஆமென்!     ஆமென்!!     ஆமென்!!!

All Sermonsஅனைத்து பிரசங்கங்கள்