Phone
Mail
Whatsapp

The Word for the day

வார்த்தையினால் விடுதலை

Listenகேட்க Watchபார்க்க

44. இருள்

44. இருள்

Sorry for the inconvience, Currently English version is not avalilable.

Switch to Tamil language

யோவா. 8: 12-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "... நான் (இயேசு) உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்".

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாம் உலகத்திற்கு ஒளியாய் இருப்பதை சாட்சியிட்டுள்ளார். மேலும் அவரைப் பின்பற்றுபவர்கள் இருளிலே நடவாமல் ஒளியினை அடைவார்கள் என்றும் சாட்சியிடப்பட்டுள்ளது. அந்த ஒளி, ஜீவனைக் கொடுக்க அனுப்பப்பட மாமிசத்தில் வெளிப்பட்ட வார்த்தையாய் சாட்சியிடப்பட்டுள்ளது. அவர் அந்தக் காலத்திற்குரிய வார்த்தையாய் இருந்தார் (யோவா. 1: 14). அந்த வார்த்தை உலகத்திற்கு ஒளியினைக் கொடுத்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்து அனுப்பப்பட்டது. அந்த வார்த்தை சுயமாய் வரவில்லை (யோவா. 8: 42). அது பிதாவினால் அனுப்பப்பட்டது. அந்த வார்த்தை உலகத்திற்கு ஒளியாயிருந்தது. அது உலகத்தாருக்கு ஒளியாயிருந்தது. அந்த வார்த்தையினைப் பின்பற்றுபவர்கள் இருளிலே நடப்பதில்லை என்று சாட்சியிடப்பட்டுள்ளது. அந்த வார்த்தையினைப் பின்பற்றியவர்கள் ஜீவ ஒளியினை அடைந்தார்கள்.

    இஸ்ரவேலர்கள் பிதாவை விசுவாசித்தார்கள்; அவரது நாமம் யேகோவா என்று விசுவாசித்தார்கள்; ஆனால், பிதாவினால் அனுப்பப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர்கள் விசுவாசிக்கவில்லை. கிறிஸ்துவை விசுவாசியாத யூதர்கள் பிதாவாகிய தேவனால் உண்டானவர்கள் அல்ல என்று வேதம் சாட்சியிடுகின்றது (யோவா. 8: 47). அன்றைக்கென்று அனுப்பப்பட்ட வார்த்தை குமாரனாய் இருந்தது. அந்த வார்த்தையினை விசுவாசித்துப் பின்பற்றியவர்கள் ஒளியினை அடைந்தார்கள், நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டார்கள். ஒருவன் யாரிடத்தில் விசுவாசம் வைக்கின்றானோ அந்த விசுவாசமே அவன் யாரால் உண்டானவன் என்று வேறுபிரிக்கின்றது.

    பிதாவாகிய தேவனை உள்ளான இருதயத்தோடு பூரணமாய் விசுவாசித்தவர்கள் குமாரனையும் விசுவாசித்தார்கள்; குமாரனிடத்தில் அன்பு கூர்ந்தார்கள். குமாரனை விசுவாசித்தவர்கள் பிதாவாகிய தேவனையும் விசுவாசித்தார்கள். அவர்களை தேவனால் உண்டானவர்கள் என்றே வேதம் சாட்சியிடுகின்றது. முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்கள் எப்படியாக உள்ளான இருதயத்தோடு விசுவாசித்தார்களோ அதேநிலையில் விசுவாசித்தவர்கள் ஜீவ ஒளியினைப் பெற்றார்கள்.

    புறஜாதிகள் அவருடைய நாமத்தின்மேல் (வார்த்தையின்மேல்) விசுவாசம் கொண்டவர்களாய் அவரின் பிள்ளைகளானார்கள் (யோவா. 1: 12). அவருடைய நாமம் அந்தக் காலத்திற்குரிய வார்த்தையாய் இருந்தது. அந்தக் காலத்திற்குரிய வார்த்தையே குமாரன். பிதாவினால் உண்டானவர்கள் அந்த வார்த்தை மீது விசுவாசம் வைத்தார்கள். அவர்கள் தேவனால் உண்டானவர்கள் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. அவர்கள் ஒளிக்குரியவர்களாயிருந்தார்கள். அவர்கள் அந்தக் காலத்துக்குரிய வார்த்தையினை விசுவாசித்தார்கள், பிதாவை விசுவாசிக்கின்றோம் என்று அறிக்கையிட்டாலும் குமாரனாய் வெளிப்பட்ட அந்த வார்த்தையினை விசுவாசியாதவர்களை பிசாசினால் உண்டானவர்கள் (யோவா. 8: 44) என்று வேதம் சாட்சியிடுகின்றது.

    கேட்டின் மகனாகிய பிசாசு, அந்தக் காலத்திற்கென்று அனுப்பப்படும் வார்த்தையினை விசுவாசிக்க விடாதபடிக்குத் தடைசெய்பவன். தேவனாகிய கர்த்தர் உண்டாக்கிய சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பம் தந்திரமுள்ளதாக இருந்தது. ஆதாமிற்குக் கட்டளையிட்ட வார்த்தையினை மீறும்படி உந்தினவன் சர்ப்பம். அவன், ஆதாம் அந்தப் பிரமாணத்தினை மீறும்படிச் செய்தான். "சாகவே சாவாய்" என்ற கர்த்தரின் (ஆதி. 2: 17) வார்த்தையினை மீறி பிசாசின் போதனையான "சாகவே சாவதில்லை" (ஆதி. 3: 4) என்ற வார்த்தையினை பற்றிக்கொண்டவனாய் மீறுதலுக்குள்ளானான். எனவே ஜீவனுக்குரிய நிலையினை இழந்து போனான்.

    சர்ப்பமும் பிதாவாகிய தேவனை தேவன் என்றுதான் அறிக்கையிடுகின்றது (ஆதி. 3: 1). பிதாவை விசுவாசிக்கும் விசுவாசத்திற்கு அது தடை செய்வதில்லை. குமாரனாகிய வார்த்தையின்மீது வைக்கப்பட வேண்டிய விசுவாசத்தினையே மறுதலிக்கச் செய்கின்றவனாக அவன் காணப்படுகின்றான். பிரமாணத்தினை மீறச் செய்து இருளுக்கு உரியவர்களாக்குகின்றான் இருளுக்குரியவனாகிய பிசாசு. அவிசுவாசம் ஒரு ஆத்துமாவை இருளுக்குரியதாக்குகின்றது. பிதாவிற்கு எதிராக சத்துருவாகிய பிசாசு செயல்படுவதில்லை. அவன் கர்த்தத்துவ கிரியைகளுக்கு எதிர்த்து நிற்பவன். ஏழு சபைக்காலங்களிலும் பிதாவைக் குறித்து அறிக்கையிட அவன் தடை செய்யவில்லை. அந்த சபைக் காலத்திற்கென்று அனுப்பப்பட்ட சபைப்பிரமாணமான வார்த்தையினை விசுவாசிக்க விடாதபடிக்கே அவன் செயல்பட்டான். சபை விசுவாசிகளை அவிசுவாசிகளாய் மாற்றி வந்தான். அவிசுவாசம் ஒளிக்குரியவர்களின் தேசமாகிய பரலோக இராஜ்யத்திற்குள் அழைத்துச் செல்லாது. இருள், அது ஆக்கினைக்குரிய கிரியையாகும்.

    கர்த்தரது சமுகத்திலிருந்து குத்துவிளக்குகளாய் ஒளிவிட அனுப்பப்பட்டது சபைகளாகும். சபைக்குரிய காலம் நிறைவடைந்த பின்னர் அந்த சபைக்குரிய பிரமாணம் இருளுக்குரியதாகவே சாட்சியிடப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக்கொண்டு அதற்கேற்ற கிரியைகளைச் செய்பவன் பிசாசு (வெளி. 18: 3; 19: 2). அவன் விசுவாசிகளை இருளுக்குரியவர்களாக மாற்றுகின்றான். ஐசுவரியவான் ஒருவன் இயேசு கிறிஸ்துவிடம் வந்து, நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க வேண்டுமானால் நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோது, அவர் உனக்குரியவைகள் யாவற்றையும் விற்றுத் தரித்திரருக்குக் கொடுத்துவிட்டு என்னைப் பின்பற்றி வா என்று கூறினார் (மத். 19: 16-21). நியாயப்பிரமாணத்தில் தனக்குரியதை விற்றுத் தரித்திரருக்குக் கொடுக்க வேண்டும் என்பதாய் எந்தவொரு பிரமாணமும் கட்டளையிடப்படவில்லை. தனக்கு இருந்த ஆஸ்திகளின்மீது அவன் கொண்ட நம்பிக்கையினை எடுத்துப்போடக் கர்த்தர் கொடுத்த வார்த்தையாகவே அது அறிவிக்கப்பட்டது. அதனால் அவன் கர்த்தரை விட்டு விலகிச் சென்றவனானான். கிறிஸ்துவும் ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது என்பதைவிட ஒட்டகமானது ஊசியின் காதின் வழியாய் நுழைந்து செல்வது எளிது என்று சாட்சியிட்டார்.

    அந்தக் காலத்திற்குரிய வார்த்தை பரிசுத்த ஆவியானவர் மூலம் கிறிஸ்து இயேசுவின் வலதுகரத்திலிருந்து அதினதின் காலத்தில் கொடுத்து அனுப்பப்பட்டது. பிதாவினிடமிருந்து அனுப்பப்படும் வார்த்தையே குமாரனாகும். அந்த வார்த்தை உலகத்திற்கு ஒளியாய் இருக்கின்றது. அந்த வார்த்தையினைப் பின்பற்றுபவர்கள் ஜீவ ஒளியினை அடைவார்கள். அந்த வார்த்தையினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருளுக்குரியவர்கள் ஆவார்கள். குமாரனாகிய அந்த வார்த்தையினை விசுவாசிப்பவர்கள் ஒளிக்குரியவர்கள் என்றும், அதனை விசுவாசியாதவர்கள் இருளுக்குரியவர்கள் என்றும் வேதம் சாட்சியிடுகின்றது.

    ஒவ்வொரு சபையின் காலத்திலும் அந்த சபைக்குரிய பிரமாணத்தினை கர்த்தர் தமது தூதன் மூலம் கொடுத்தனுப்பினார். தூதன் மூலம் கொடுத்தனுப்பப்பட்ட வார்த்தையினை விசுவாசித்தவர்கள் ஒளிக்குரியவர்களாகவும், விசுவாசியாதவர்கள் இருளுக்குரியவர்களாகவும் இருந்து வந்துள்ளார்கள்.

    ஏழு சபைகளும், தூதர்களும், அதற்குரிய காலங்களும் கீழ்க்காணுமாறு சாட்சியிடப்பட்டுள்ளது.

    ஏழு சபைக்காலங்களும் நிறைவடைந்த பின்னர் மணவாட்டி அலங்கரிக்கப்படும் காலமாகும்.

  1. இக்காலத்தில் தான் கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் வெளிப்படுத்தப்படுவான்.
  2. அவன் தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் அமர்ந்து தன்னைத்தான் தேவனென்று காண்பிப்பதை வெளியரங்கமாய் வெளிப்படுத்தும் காலமாகும் (2 தெச. 2: 3-6).
  3. மணவாட்டிக்கென இரண்டாம் வானம் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனை ஆளுகை செய்து வரும் வலுசர்ப்பத்தினைத் தள்ளிவிடும் பொருட்டு மிகாவேலும் அவனைச் சார்ந்த தூதர்களும் யுத்தம் செய்வார்கள் (வெளி. 12: 7-9). இது வானமண்டலத்தில் ஏற்படும் யுத்தம்.
  4. இந்தப் பூமியில் சபைக் கோட்பாடு என்ற மிருகம் வார்த்தையின் விசுவாசிகளோடே யுத்தம்பண்ண எழும்பும். அது இந்தப் பூமியில் ஏற்படும் யுத்தம். இதுவே புறஜாதிகளின் கிருபைக்குக் கடைசிக்காலமாகும் (வெளி. 13: 4, 7).

நாம் இப்போது ஜீவிக்கும் காலமானது சபைக்காலங்கள் நிறைவடைந்த காலமாகும். தற்போது வானமண்டலத்தில் யுத்தம் நடந்துகொண்டிருக்கின்றது. அதுபோல, பூமியிலும் ஒரு யுத்தம் ஏற்பட வேண்டும். வானமண்டலத்தில் நடக்கும் யுத்தத்தின் இறுதியில் வலுசர்ப்பமும் அவனைச் சார்ந்த தூதர்களும் இந்தப் பூமியின்மீது தள்ளப்படுவார்கள். அப்போது மணவாட்டி எடுத்துக்கொள்ளப்படுவாள். இவைகள் சம்பவித்த பின்னர், கிருபை புறஜாதிகளிடமிருந்து எடுக்கப்பட்டு மீதமுள்ள 1,44,000 இஸ்ரவேலர்களுக்கு இரட்சிப்பினைக் கொடுக்கும்.

    ஒவ்வொரு சபைக்காலத்திலும், தூதன் மூலமாக அனுப்பப்பட்ட வார்த்தையினை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தவர்கள் ஜீவ ஒளியினைப் பெற்றார்கள். ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருளுக்குரியவர்களாகி ஆக்கினைத் தீர்ப்பிற்கென்று தள்ளப்பட்டார்கள். சபைக்காலங்கள் நிறைவடைந்தபின்னர், "வார்த்தை" பிரமாணமாக சாட்சியிடப்படும். "சாட்சியிடப்படும் அந்த வார்த்தையே" பிதாவின் நாமமாய் சாட்சியிடப்படும். வார்த்தைக்கு எதிர்த்து நிற்பவர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகின்ற கடலில் தள்ளப்படுவார்கள் (வெளி. 20: 10, 14, 15).

    விசுவாசிப்பவர்கள் ஒளிக்குரியவர்களாய் நித்திய ஜீவனையும், விசுவாசியாதவர்கள் இருளுக்குரியவர்களாய் ஆக்கினைத்தீர்ப்பினையும் அடைவார்கள்.

    இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோது, காணாமல் போன இஸ்ரவேல் வீட்டாருக்காகவே தாம் அனுப்பப்பட்டதாய் சாட்சி கொடுத்தார் (மத். 15: 24). அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாய் இருந்தது (யோவா. 1: 4). அவர் தமக்குச் சொந்தமானதிலே (இஸ்ரவேலாரிடத்தில்) வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா. 1: 11). அவரை ஏற்றுக்கொண்டவர்கள் ஒளிக்குரியவர்களாகவும், ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருளுக்குரியவர்களாயும் தீர்க்கப்பட்டார்கள்.

    ஜீவனைக் கொடுக்கக்கூடிய அந்த ஒளியினைக் குறித்துச் சாட்சி கொடுக்க அனுப்பப்பட்டவன் யோவான்ஸ்நானன். அவன் அந்த ஒளியல்ல. அந்த ஒளியினைக் குறித்துச் சாட்சி கொடுக்க அனுப்பப்பட்டவன் (யோவா. 1: 8). அவன் வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தமாய் இருந்தான் (யோவா. 1: 23). அப்போது பரிசேயர், சதுசேயர், வேதபாரகர்கள் என யூதர்கள் மத்தியில் பிரிவுகள் இருந்தது. ஆனால், யோவான்ஸ்நானன் அவைகளில் எந்த பிரிவினையையும் சாராதவனாய் இருந்தான். அவன் அந்த ஒளியினைக் குறித்த சாட்சியாய் இருந்தான் (யோவா. 1: 7).

    கர்த்தருடைய சாட்சி அவர் அனுப்பி வைக்கும் வார்த்தையினை சாட்சியிடும். யோவான்ஸ்நானன் கர்த்தருடைய சாட்சி. அது கர்த்தர் அனுப்பி வைத்த வார்த்தைக்கு சாட்சியிட்டது. அன்று அந்த வார்த்தை மாமிசத்தில் இருந்தது. மாமிசத்தில் இருந்த அந்த வார்த்தைக்கு அவன் சாட்சியிட்டான். அவன் அந்த வார்த்தை மாமிசமாவதற்கு முன்னதாகவே அதை அறிந்தவனாக இருந்தான். பரலோக இராஜ்யத்திற்கு அழைத்து செல்ல கொடுக்கப்படும் சுவிசேஷம் ராஜ்யத்தின் சுவிசேஷம் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. அந்த சுவிசேஷமும் சாட்சியாய் பிரசங்கிக்கப்பட்டது. அது இயேசுகிறிஸ்துவின் மூலம் இஸ்ரவேலர்களுக்குள் சாட்சியாய் பிரசங்கிக்கப்பட்டது. ராஜ்யத்தின் சுவிசேஷம் என்பது முடிவுக்கு சாட்சி (மத். 24: 14). ஒளியினைக் குறித்துக் கொடுக்கும் சாட்சியாய் யோவான்ஸ்நானனின் சாட்சி இருந்தது. ஒளிக்குரியவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு அந்த ஒளியின்மூலம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டார்கள்.

    ஜீவனுக்குரிய அந்த ஒளி மனுஷனுக்குள் அனுப்பப்பட்டு அவர்களைப் பிரகாசிக்கச் செய்தது (யோவா. 1: 9). இருளுக்குரியவர்களை வேறுபிரிக்க அந்த ஒளி இஸ்ரவேலருக்குள் அனுப்பப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டவர்கள் அந்த ஒளியினால் நித்திய ஜீவனைப் பெற்றார்கள்; பரலோக ராஜ்யத்தினைச் சுதந்தரிக்கக்கூடிய கிருபை பெற்றவர்களானார்கள்.

    அப்போஸ்தலர்கள் இயேசுவே கிறிஸ்து என்றும், இயேசுவே மேசியா என்றும், இயேசுவே கர்த்தர் என்றும் அறிக்கையிட்டார்கள். அவர்கள் ஒளிக்குரியவர்களாய் இருந்தார்கள். அவர்களது சாட்சியினை ஏற்றுக்கொண்டு விசுவாசித்தவர்கள் ஒளியினைப் பெற்றார்கள். ஒளியினைப் பெற்றவர்கள் நித்திய ஜீவனைச் சுதந்தரித்தார்கள். புறஜாதியாருக்குரிய காலம் நிறைவேறும் வரையிலும் இஸ்ரவேலருக்குள் அந்த ஒளி வெளிப்படுவதில்லை. அவர்கள் ஒளியற்றவர்களாய் ஜீவிக்கக்கூடிய காலமானது புறஜாதிகளின் கிருபை பெற்ற காலமாகும். ஒளியில்லாததால் அவர்களுக்குள் ஜீவன் என்ற ஆத்துமா கட்டளையிடப்படவில்லை. எனவே பரலோகம் என்ற சுதந்திரத்தில் அவர்கள் பங்கை இழந்தவர்களானார்கள்.

    அப்போஸ்தலனாகிய பவுல் புறஜாதிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்க தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரமாகும். புறஜாதிகளிடம் அறிவிக்கப்பட்ட அந்த சுவிசேஷத்தினை ஏற்றுக்கொண்டவர்கள், ஒளியினைக் கண்டார்கள். ஒளியினைப் பெற்றவர்கள் நித்திய ஜீவனைச் சுதந்தரித்தார்கள். ஒளிக்குரிய சுவிசேஷத்தின் மூலமாக ஜீவன் உருவாகின்றது. புறஜாதிகளில் இயேசுகிறிஸ்துவைத் தேவன் என்று விசுவாசித்து, ஏற்றுக்கொண்டவர்கள் தங்களுக்குள் ஜீவனைப் பெற்றுக்கொண்டார்கள். அந்த ஜீவன் ஆவியின் சரீரமான ஆத்துமாவாகும்.

    அதுபோல ஒவ்வொரு சபையின் காலத்திலும் அந்த சபைக்கென்று அனுப்பப்பட்ட தூதன் மூலமாய்க் கொடுக்கப்பட்ட வார்த்தையில் ஜீவனுக்குரிய ஒளியிருந்தது. அந்த சுவிசேஷ வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் நித்திய ஜீவன் என்ற ஒளியினைக் கண்டார்கள். அந்த ஒளி நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள ஜீவன் கொண்டவர்களுக்குள் அனுப்பப்பட்ட ஒளியாகும். விசுவாசியாதவர்கள் இருளுக்கு உரியவர்களானார்கள். 5-ம் சபைக்குரிய தூதன் மார்ட்டீன் லூதர். பிரிவினையாளர் சபையினைச் சார்ந்தவர்கள் அன்று நித்திய ஜீவன் என்ற ஒளிக்குரியவர்களாயும், அது அல்லாதபடிக்கு பிற சபை பிரிவைச் சார்ந்தவர்கள் இருளுக்குரியவர்களாகவும் காணப்பட்டார்கள். அதுபோலவே 7-ம் திருச்சபையின் காலத்தில் இயேசுகிறிஸ்துவின் நாமம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் எனவும், அந்த நாமத்தின் மூலம் பெறும் ஞான்ஸ்நானமே பரிசுத்த ஆவியினைத் தரும் எனவும் அந்த சபைத்தூதனான சகோ. வில்லியம் பிரன்ஹாம் சாட்சியிட்டார். அவர் மூலம் உரைக்கப்பட்ட வார்த்தை ஒளிக்குரியதாயிருந்தது. அதனை விசுவாசித்தவர்கள் நித்திய ஜீவன் என்ற ஒளிக்குரியவர்களானார்கள். ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருளுக்குரியவர்களாய் இருந்தார்கள்.

    ஒளிக்குரியவர்கள் நித்திய ஜீவனைச் சுதந்தரித்தார்கள். இருளுக்குரியவர்கள் ஆக்கினைத்தீர்ப்பிற்குக் காத்திருக்கின்றார்கள். இரண்டாம் சபை முதற்கொண்டு ஏழாம் சபைக்காலம் வரையிலும் சபைத்தூதர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட சுவிசேஷமானது கிறிஸ்தவர்களுக்குள்ளாக மாத்திரம் சாட்சியிடப்பட்ட சுவிசேஷமாகும்.

    பிசாசென்றும், சாத்தானென்றும், பழைய பாம்பாகிய சர்ப்பம் என்றும், வலுசர்ப்பம் என்றும் அழைக்கப்படும் காட்டு மிருகமானது "ஒளிக்குரிய வார்த்தைக்கு" செவிகொடாதபடிக்கு விசுவாசிகளைத் திசை திருப்புகிறவனாகவே செயல்பட்டு வருகின்றான். அவன் தனது கிரியைகளை கள்ளத்தீர்க்கதரிசிகளின் மூலம் ஒவ்வொரு காலத்திலும் செயல்படுத்தி வந்துள்ளான். அதேபோலொத்த ஒரு கிரியையே கடைசி நாட்களிலும் செயல்படுத்தப்படும்.

  • அன்றைக்குரிய வார்த்தை தீர்க்கதரிசனம்!
  • அன்றைக்குரிய வார்த்தைக்கு மாறாகக் கொடுக்கப்படும் வார்த்தை கள்ளத் தீர்க்கதரிசனம்!
  • அன்றைக்குரிய வார்த்தை கொடுப்பது ஒளி!
  • அன்றைக்குரிய வார்த்தைக்கு எதிரானது இருள்!
  • அன்றைக்குரிய வார்த்தை கொடுப்பது பரிசுத்த ஆவி!
  • அன்றைக்குரிய வார்த்தைக்கு எதிரானது அசுத்த ஆவி!
  • அன்றைக்குரிய வார்த்தை நித்திய ஜீவனைக் கொடுக்கும்!
  • அன்றைக்குரிய வார்த்தையினை மீறுபவர்கள் ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்!

ஒளி - ஜீவன்!! இருள் - மரணம்!! பகல் - ஒளிக்குரிய பொழுது இரவு - இருளுக்குரிய பொழுது

    கர்த்தருடைய நாள் என்பது "… இருளும் அந்தகாரமுமான நாள்" (யோவே. 2: 1, 2) என்றே வேதம் கூறுகின்றது. இங்கே இருள் என்று கூறப்பட்டுள்ளது, சூரியன் உதிக்காத பொழுது அல்ல. அது கர்த்தரைக் குறித்த அறிவு இல்லாத காலமாகும். அதுவே இருளான காலமாகும். கர்த்தரைக் குறித்த ஞானம் இல்லாத வேளையில் அந்த நாள் வரும். ஜனங்கள் ஜீவனுக்குரியதை மறந்து மாமிசத்திற்குரியதை தேடும் காலமே இருளுக்குரிய காலமாகும். ஒளிக்குரிய விசுவாசிகள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். இருளுக்குரியவர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரியும் கடலில் தள்ளப்படுவார்கள். இது புறஜாதிகளின் கிருபைக்கு நிறைவு.

    இருளுக்குரியவர்கள் - பிசாசுக்குரியவர்கள் ஒளிக்குரியவர்கள் - கர்த்தருக்குரியவர்கள்

    இருளுக்குரியவர்கள் அநேகராயும், ஒளிக்குரியவர்கள் சிறு கூட்டமாகவுமே இருப்பார்கள் என்று வேதம் கூறுகின்றது. சிறு கூட்டம் மாத்திரமே ஒளியினை ஏற்றுக்கொள்ளும். ஒளியினை விசுவாசிக்கும். நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும். இருளுக்குரியவர்கள் ஒளியினை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவிசுவாசிகளான அவர்கள் ஆக்கினைத் தீர்ப்படைவார்கள்.

    ஜீவனுக்குரிய ஒளியினைக் கொண்டுவருவது கர்த்தருடைய வார்த்தையாகும் (2 பேது. 1: 19). அந்த வார்த்தை சுயமாய் வராது. அது பரிசுத்த ஆவியானவர் மூலம் பரத்திலிருந்து அனுப்பப்படும் வார்த்தையாகும். பரிசுத்த ஆவியானவர் மூலம் அந்த நாளுக்கென்று கட்டளையிடப்படும் வார்த்தையே ஒளியாகும். அந்த வார்த்தை உயிர்ப்பிக்கின்ற வார்த்தையாகும். அதுவே நித்திய ஜீவனைக் கொடுக்கும்.

    குமாரன் அந்த நாளுக்குரிய வார்த்தையாகும். தீர்க்கதரிசிகள் மூலம் குமாரனாகிய வார்த்தை ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டிருந்தும் இஸ்ரவேலர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பரிசுத்த ஆவியானவர் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள சாட்சியை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வார்த்தை சுவிசேஷமாய் அறிவிக்கப்படும்போது, அதனை ஏற்றுக்கொள்பவர்கள் ஒளியினைப் பெற்றுக்கொள்வார்கள். ஒளிக்கென்று நியமிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இருளுக்குரியவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    அன்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து குமாரனாய் மாமிசத்தில் வெளிப்பட்டார். அவர் உயிர்ப்பிக்கின்ற ஆவியானவர். அவர் புறஜாதிகளை உயிர்ப்பிக்கின்ற பிந்தின ஆதாம் (1 கொரி. 15: 45) என்று வேதம் கூறுகின்றது. பிந்தின ஆதாமாகிய கிறிஸ்துவின் பிள்ளைகளே கிறிஸ்தவர்களாகிய நாம். குமாரனாகிய கிறிஸ்து 2000ம் ஆண்டுகளுக்கு முன்னதாக மாமிசத்தில் வெளிப்பட்டார். அவர் மகிமையடைந்தபின்னர், அவரின் நாமம் பிதாவின் எல்லா நாமத்திற்கும் மேலான நாமமாக உயர்த்தப்பட்டது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற பிதாவின் நாமத்தின்மேல் விசுவாசம் வைப்பவர்கள் அவரின் பிள்ளைகள் ஆனார்கள். அந்தப் பிள்ளைகளுக்குள் பிதாவானவரின் மூலம் அனுப்பப்பட்ட வார்த்தையே ஏழு சபைக்காலங்களிலும் குமாரனாய் வெளிப்பட்டது. அந்த வார்த்தை அதினதின் காலத்தில் ஒளியாய் பிரகாசித்தது.

    இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்ட காலத்தில் இஸ்ரவேலர்கள் பிதாவை விசுவாசித்தார்கள். ஆனால் குமாரனாய் அனுப்பப்பட்ட வார்த்தையாகிய கிறிஸ்துவை விசுவாசிக்கவில்லை. அதுபோலவே கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கின்றோம். அவரை உலக இரட்சகர் என்று விசுவாசிக்கின்றோம். அவரை மேசியா என்று விசுவாசிக்கின்றோம். ஆனால் அதன்பின்னர், கிறிஸ்து அனுப்பி வைத்துள்ள தூதர்களை ஏற்றுக்கொண்டிருக்கின்றோமா? ஏற்றுகொள்ளாதிருக்கக்கூடிய நிலையே இருளுக்குரியவர்களாக்கிற்று. ஜீவனுக்குரிய ஒளியாய் அனுப்பி வைக்கப்பட்ட தூதர்களை நம்மில் எத்தனைபேர் ஏற்றுக்கொண்டுள்ளோம்? சபைக்காலங்களுக்குப்பின்னர் எழும்பும் விடியலின் சத்தத்திற்கு செவிகொடுத்திருக்கின்றோமா? சற்று சிந்தியுங்கள்.

    குமாரனை உடையவனே ஜீவனை உடையவன் என்று வார்த்தை சாட்சியிடுகின்றது. குமாரனை விசுவாசிப்பவர்களே நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள். இயேசுகிறிஸ்து பிதா என்று யாரைக்குறித்து அறிக்கையிட்டாரோ, அவரையே இஸ்ரவேலர்களும் தேவன் என்று அறிக்கையிட்டார்கள் (யோவா. 8: 54). ஆனால் அவரிடத்திலிருந்தும், அவராலும் அனுப்பப்பட்ட இயேசுகிறிஸ்துவாகிய குமாரனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சத்துருவின் கிரியை அவர்களை ஏற்றுக்கொள்ளவிடவில்லை. அன்று ஏதேன் தோட்டத்தில் இருந்த சர்ப்பமும் அதே தன்மையிலான கிரியைகளை செய்தது. அதேபோலொத்த ஒரு நிலையினை சபைக்காலங்களின் நிறைவில் வலுசர்ப்பம் செய்துமுடிக்கும். சர்ப்பமானவன் இச்சையான மாமிச நலனைக் காட்டி ஆத்துமாக்களைக் கொள்ளையிடுவான். இருளுக்குரியவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள்.

    குமாரன் பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார் என்று வேதம் சாட்சியிடுகின்றது (யோவா. 16: 8). குமாரனை விசுவாசியாதது பாவம் (யோவா. 16: 9; 8: 24; 19: 11). குமாரன் பிதாவிடத்திலிருந்து புறப்பட்டு கிரியைகளை நிறைவேற்றிவிட்டு மீண்டும் பிதாவினிடத்திற்கே திரும்பிச் செல்கின்றார் (யோவா. 16: 28). குமாரன் பிதாவின் வலது பாரிசத்தில் இருந்து அனுப்பப்பட்டு மீண்டும் பிதாவின் வலது பாரிசத்திற்கே திரும்ப சென்றார் (அப். 7: 55). வலது மகிமைக்குரிய ஸ்தலம். ஏழு சபைக்குரிய தூதர்களும் கிறிஸ்துவின் வலது புறத்திலிருந்து அனுப்பப்பட்டு மீண்டும் அவரின் வலது புறத்திற்கே திரும்பச் சென்றிருக்கின்றார்கள் (வெளி. 1: 16, 20). வலதுபுறமிருந்து புறப்படுவது சத்திய ஆவி. வலது புறமுள்ளவர்கள் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் (மத். 25: 34). வலது புறமுள்ள ஆடுகள் செம்மறியாடுகள். செம்மறியாடுகளே நியாயத்தீர்ப்பிற்கு உட்படுத்தப்பட்டு பரலோக சுதந்திரத்தினை அடையும். இவையாவும் பிதாவின் வலதுபுறத்திற்குரிய மகிமைக்குச் சாட்சியிடுகின்றது.

    இடதுபுறமுள்ளது பொய்யின் ஆவி. கர்த்தருக்கு முன்பாக பரமசேனைகளெல்லாம் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் நின்றிருக்கும்போது ஒரு ஆவி தீர்க்கதரிசிகளின் வாயிலிருந்து பொய்யின் ஆவியாய் தீர்க்கதரிசனம் உரைக்க வைப்பேன் என்று கூறியதைக் காண்கின்றோம் (1 இராஜா. 22: 19-23). அந்தப் பொய்யின் ஆவி கர்த்தரின் சிங்காசனத்திற்கு இடப்புறமிருந்து அனுப்பப்பட்ட ஆவியாகும். இடது புறமுள்ளவர்கள் சபிக்கப்பட்டவர்கள் (மத். 25: 41) என்று வேதம் கூறுகின்றது. இடதுபுறம் பிசாசுக்கும் அவன் தூதர்களுக்கும் ஒதுக்கப்பட்ட இடமாகும். அவர்கள் நித்திய அக்கினிக் கடலில் தள்ளப்படுவார்கள் (மத். 25: 41).

    வலதுபுறத்திலிருந்து அனுப்பப்படும் தூதர்கள் நித்திய ஜீவனுக்கும், இடது புறத்திலிருந்து அனுப்பப்படும் தூதர்கள் இருளாகிய மரணத்திற்கும் சாட்சியிடுவார்கள். இடதுபுறத்திலுள்ள வெள்ளாடுகள் இருளுக்குரிய தூதர்களின் சாட்சிக்கு செவிகொடுத்து ஆக்கினைத்தீர்ப்படையும் (மத். 25: 33). வெள்ளாடு சத்தியத்தினைத் தரையிலே தள்ளி (தானி. 8: 12), பாழாக்குகின்றவனைப் பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டு செல்லும். வெள்ளாடு கர்த்தருக்குச் செலுத்தக்கூடிய அன்றாட பலியினை நீக்கி, அந்தப் பலியினை பிசாசின் மகிமைக்குக் கொண்டு செல்லும் எனவும் தீர்க்கதரிசனம் உரைக்கின்றது.

    கர்த்தரின் மந்தையின் ஆடுகளாக இன்று கிறிஸ்தவர்கள் குறிக்கப்படுகின்றார்கள். கர்த்தரது சமூகத்திலிருந்து அனுப்பப்படும் சாட்சியின் வார்த்தையினை விசுவாசிப்பவர்கள் செம்மறியாடுகள். பிதாவை விசுவாசிக்கிறோம் என்று சாட்சியிட்டும், அந்த நாளுக்குரிய வார்த்தையினை விசுவாசியாதவர்கள் அவிசுவாசிகள். அவர்கள் வெள்ளாடுகள் என்று குறிக்கப்படுகின்றார்கள். நியாயத்தீர்ப்பும், ஆக்கினைத்தீர்ப்பும் ஆடுகளுக்குள்ளாகவே நிகழ்கின்றது. ஆடுகள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்களில், கர்த்தரின் வலது புறத்திலிருந்து அனுப்பப்படும் தூதர்கள் கொண்டுவரும் வார்த்தையினை விசுவாசிப்பவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள். இடதுபுறத்திலிருந்து அனுப்பப்படும் பொய்யின் ஆவி கொண்ட தூதர்களின் வார்த்தையினை விசுவாசிப்பவர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரியும் கடலில் தள்ளப்படுவார்கள்.

    ஏழு சபைக்காலங்கள் நிறைவடைந்தபின்னர் தீர்க்கதரிசன வார்த்தைகள் சபைகளை பாபிலோனாகச் சித்தரிக்கின்றது. ஏழு சபைக்காலங்களும் நிறைவுபெற்றபின் மணவாட்டியின் அலங்கார காலம் (கி.பி. 2005-க்குப் பின்னர்). அப்போது கர்த்தரின் இடப்புறமுள்ள தூதர்கள் (கள்ளத்தீர்க்கதரிசிகள்) ஆக்கினைக்குரிய வார்த்தையினை செய்தியாக, சத்தியமாக சபைகளுக்குள் கொண்டு வருவார்கள். பாபிலோன் கர்த்தருடைய கையில் உள்ள பொற்பாத்திரம் என்று வேதம் கூறுகின்றது (எரே. 51: 7). அதில் வேசித்தன மது நிறைந்துள்ளது (வெளி. 18: 3). அதனை இடப்புறமுள்ள ஆடுகளாகிய வெள்ளாடுகள் உறிஞ்சிக் குடிக்கும். உலக மயக்கமாகிய மாமிசத்திற்குரிய போதனைகளை அது தனது விசுவாசிகளுக்குக் கொடுக்கும். சபைகள் ஆவிக்குரிய சிந்தையை இழந்துவிடும். முழுக்க முழுக்க மாமிசத்திற்கென்றே செயல்படும் கூடாரத்தினை நோக்கி வெள்ளாடுகள் ஓடும்.

    கர்த்தரின் வலது புறத்திற்குரிய ஆடுகள் செம்மறியாடுகளாகும். "பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரம் ஆகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி அவரவர் தங்கள் ஆத்துமாக்களைத் தப்புவியுங்கள்" (எரே. 51: 6) என்றும், "என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும் அவளுக்கு நோரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்" (வெளி. 18: 4) என்றும் கர்த்தர் தமது வலது புறத்திலிருந்து அனுப்பப்படும் ஆவியின் மூலம் செம்மறி ஆடுகளுக்கு அறைகூவல் விடுவார். வலதுபுறமுள்ள அவரது ஆடுகள் அவரது சத்தத்திற்கு செவிகொடுக்கும்.

    பாபிலோன் என்று சாட்சியிடப்பட்டுள்ள சபைகளை விட்டு வெளியேறிய மணவாட்டி அலங்காரிக்கப்படுகின்றாள். வார்த்தையின் மூலம் இந்த அலங்காரம் செய்யப்படுகின்றது. அவளின் இந்த அலங்காரம் முடிந்ததும் அவள் மணவாளனோடு சேர எடுத்துக்கொள்ளப்படுவாள். வலது புறத்து மந்தையின் ஆடுகள் அழைப்பின் சத்தம் கேட்டு பாபிலோனை விட்டு வெளியேறும். அப்போஸ்தலனாகிய பவுலும் கொலொசெயருக்கு எழுதின நிருபத்தில் கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள் என்று சாட்சியிட்டுள்ளார். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் என்று வலப்புறத்து ஆடுகளுக்கு பரிசுத்த ஆவியானவர் அறைகூவல் விடுவார் (கொலோ. 3: 1, 2). அதற்கு செவிகொடுக்கும் ஆடுகள் வருகையில் எடுத்துக்கொள்ளப்படும் மணவாட்டியாகும்.

    வலப்புறம் - ஒளிக்குரிய ஸ்தலம். இடப்புறம் - இருளுக்குரிய ஸ்தலம்.

    வலதுபுறத்தில் சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளி ஒளிக்குரியவனானான். அவன் கிறிஸ்துவை இன்னார் என்று அறிந்து ஏற்றுக்கொண்டான். இடதுபுறம் அறையப்பட்ட குற்றவாளி மரணத்திற்குள்ளாக்கப்பட்டான். வலப்புறம் இருந்தவன் ஏற்றுக்கொண்டான். இடப்புறம் இருந்தவன் ஏற்றுக்கொள்ளவில்லை.

    குமாரனை விசுவாசிப்பவளே இருள் நீங்கி ஒளியைக் காண்பாள். ஒளியினைக் கொடுக்க அனுப்பப்படுபவரே குமாரன். குமாரனில் ஒளி இருக்கின்றது. அந்த ஒளி ஆத்துமாவை நித்திய ஜீவனுக்குள் அழைத்துச் செல்லும். குமாரன் அந்தக் காலத்திற்குரிய வார்த்தை. அந்த வார்த்தை ஒளியாய் இருக்கின்றது. அந்த வார்த்தையே நித்திய ஜீவனைக் கொடுக்கின்றது.

    இருள் - மரணம். ஒளி - ஜீவன். இருளுக்குரியவர்கள் இரண்டாம் மரணத்திற்குரியவர்கள். ஒளிக்குரியவர்கள் நித்திய ஜீவனுக்குரியவர்கள். இருள் முந்தினது. ஒளி பிந்தினது (ஆதி. 1: 2, 3). ஆத்துமா கொண்ட முதல் மனிதன் ஆதாம். உருவாக்கப்பட்ட முதல் மனிதன் ஆதாம் அல்ல. ஆதாமிற்கு முன்னரும் இருள் இருந்தது. ஒளி ஆவியின் சரீரத்திற்குரியதாகும்.

    கர்த்தர் ஜீவ சுவாசத்தினை ஆதாமின் நாசியில் ஊதினார். ஆதாம் ஜீவாத்துமா உள்ளவன் ஆனான். ஆதாமிற்கு ஆத்துமா கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட அந்த ஆத்துமாவை இருளுக்குரியதாக்கியவன் பிசாசு (ஆதி. 3: 13). எல்லாக் காலத்திலும் பிசாசு தனது வஞ்சகத்தின் மூலம் குமாரனுக்கு எதிரான போதகத்தினைக் கொடுத்து வந்துள்ளான். ஜீவனுக்குரியவனாய் உருவாக்கப்பட்ட ஆதாம் பிரமாணத்தை மீறினபடியால் இருளுக்குரியவன் ஆனான். பிரமாணம் ஜீவனுக்குரியவர்களை இருளுக்குரியவர்கள் எனவும், நித்திய ஜீவனுக்குரியவர்கள் எனவும் வேறுபிரிக்கின்றது.

    குமாரன் மீது வைக்கும் விசுவாசத்தின் மூலம் ஒளி பற்றிக்கொள்கின்றது. பெற்றுக்கொண்ட ஒளியினை இருளாக்காதபடிக்கு எச்சாரிக்கையாய் இருக்க வேண்டும் என வேதம் கூறுகின்றது. "உன்னில் உள்ள வெளிச்சம் இருள் ஆகாதபடிக்கு எச்சாரிக்கையாயிரு" (லூக். 11: 35). ஒளிக்குரிய தேசத்திற்குள் சென்றடையவே உருவாக்கப்பட்டவன் ஆதாம். ஆதாம் மாமிச சரீரம் கொண்டவன் மாத்திரம் அல்ல; ஆவிக்குரிய சரீரம் என்ற ஆத்துமாவையும் தன்னகத்தே கொண்டவன்.

    "அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படி தானே…" (மல். 2: 15) என்றே வேதம் கூறுகின்றது. ஆத்துமா கொண்ட ஆதாமைப் படைத்தது அவனைப்போல ஆத்துமா கொண்ட சந்ததியினை இந்தப் பூமியில் பெருகும்படி செய்யவே உருவாக்கப்பட்டான். ஒளிக்குரியவனாக நித்திய ஜீவனைப் பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஆதாம் மாறான போதகத்திற்கு செவிகொடுத்து இருளுக்குரியவனாக மாறினான். அவன் இரண்டாம் மரணமாகிய ஆத்தும மரணத்திற்குரியவனாக தீர்க்கப்பட்டான். ஆபேல் ஒளியினைப் பெற்றுக்கொண்டபடியால் நித்திய ஜீவனுக்குரியவனானான் என்று வேதம் சாட்சியிடுகின்றது. அவன் மாரித்தான், இன்னமும் பேசுகிறான் (எபி. 11: 4) என்றே வேதம் சாட்சியிடுகின்றது.

    ஆதாமின் குமாரனாகிய ஆபேல் ஒளிக்குரியவனாய் சாட்சியிடப்பட்டுள்ளான். ஆதாமின் 7-ம் தலைமுறையில் பிறந்த ஏனோக்கும் நித்திய ஜீவன் என்ற ஒளியினைப் பெற்றுக்கொண்டான். மீதமுள்ள ஆதாமின் சந்ததிகள் யாவரும் இருளுக்குரியவர்களாகவே தீர்க்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஆதாமைப் போல ஒளியினை ஏற்றுக்கொள்ளாமல் இருளைப் பற்றிக்கொண்டார்கள். எனவே மரணத்திற்குரியவர்கள் ஆனார்கள்.

    ஏனோக்கிற்குப் பின்னர் ஆதாமின் 10ம் தலைமுறையினனான நோவா ஜீவனுக்குரியவன் ஆனான். அவன் ஒளிக்குரியவனானான். முந்தைய 10 தலைமுறையினருக்குள்ளும் ஆபேல், ஏனோக்கு, நோவா என்ற 3 பேர் மாத்திரமே ஒளிக்குரியவர்களாய் சாட்சியிடப்பட்டுள்ளார்கள்; நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டார்கள் என்றே வேதம் கூறுகின்றது.

    நோவா காலத்தில் கர்த்தரால் அனுப்பப்பட்ட வார்த்தை குமாரனாக சாட்சியிடப்படுகின்றது. அது பிரமாணமாக சாட்சியிடப்பட்டுள்ளது. அது கட்டப்பட்ட பேழைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதாகும். நோவா அதனை விசுவாசித்தபடியால் ஒளியினைப் பெற்றுக்கொண்டான். அந்த ஒளி அவனுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்தது; அவன் காக்கப்பட்டான்.

    இஸ்ரவேலர்களை எகிப்து தேசத்திலிருந்து வெளிக்கொணர, யேகோவா என்ற நாமத்தில் கர்த்தர் தம்மை வெளிப்படுத்தினார். அன்று நியாயப்பிரமாணம் குமாரனாக இருந்தது. நியாயப்பிரமாணத்தின்படி நடந்தவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றார்கள். மோசே, தாவீது, சாமுவேல் போன்றோர் ஒளிக்குரியவர்களாய் அறியப்படுகின்றார்கள்.

    இருளுக்குரியவர்கள் பாபிலோனின் வஞ்சக போதனையினால் வஞ்சிக்கப்படுவார்கள் என வேதம் கூறுகின்றது. பாபிலோனின் வேசித்தனத்தில் அகப்படாதபடி காத்துக்கொள்பவர்களே ஒளிக்குரியவர்கள் ஆவார்கள். கர்த்தருடைய செம்மையான வழியினை ஏதேன் தோட்டத்தில் ஆரம்பித்து இறுதிவரையிலும் புரட்டிக் கொண்டு வருபவன் பிசாசு. இருளுக்குரியவர்கள் அவனது போதனையினை அடையாளம் காண இயலாமல் வஞ்சனைக்குள்ளாகி வருகின்றார்கள்.

    இஸ்ரவேலர் பாபிலோனுக்குள் சிறைப்பட்டுப் போகும்படியாய் கி.மு. 626 - 584 வரையிலான காலங்களில், எரேமியா தீர்க்கதரிசனம் அறிவித்தான். யோயாக்கீம் மற்றும் சிதேக்கியா ராஜாக்களின் காலத்தில் பாபிலோன் ராஜா யூதர்களை சிறைப்படுத்தினான். அன்று பாபிலோனுக்குள் இஸ்ரவேலர்கள் சென்றடையும்படியாய் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது.

    இன்று பாபிலோனாகத் திகழும் சபைகளை (ஸ்தாபனங்களை) விட்டுத் தங்களை விடுவித்துக் கொள்ளும்படியாய் தீர்க்கதரிசனம் முன் உரைக்கப்பட்டுள்ளது. வலப்புறத்து மந்தையாகிய செம்மறியாடுகள் இதனை ஏற்றுக்கொண்டு ஒளிக்குரியதாகின்றது. அப்போஸ்தலனாகிய யோவானுக்குப் பத்மு தீவில் இருந்தபோது வெளிப்படுத்தப்பட்ட (வெளி. 18: 4) இந்த தீர்க்கதரிசனமானது நிறைவேறும் காலத்தில் நாம் ஜீவிக்கின்றோம்.

    இருளுக்குரியவர்களாகிய அவிசுவாசிகளோடே பிணைக்கப்படாதிருங்கள்! (2 கொரி. 6: 14-18). உங்கள் இருதயம் கர்த்தரை நோக்கித் திருப்பப்படுவதாக என்று வார்த்தை அழைக்கின்றது. இந்த அழைப்புக்கு வலப்புறத்து ஆடுகள் செவிகொடுக்கும்.

    இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையின்போது ஒளிக்குரியவர்கள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். அவர்கள் ஜீவனுக்குரியவர்கள். ஜீவனுக்குரியவர்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், மீதமுள்ள ஆத்துமா கொண்ட கிறிஸ்தவர்கள் இருளுக்குரியவர்களாக தீர்க்கப்படுவார்கள். இவையாவும் நிறைவுபெற்ற பின்னர் ஆத்துமா என்ற உள்ளான மனிதன் கிறிஸ்தவர்களுக்குள் கட்டளையிடப்படுவதில்லை. கிறிஸ்தவ மதமும், அந்த மதத்திற்குரியவர்களும் இந்தப் பூமியின் கடைசி பரியந்தமும் இருப்பார்கள். பூமி ஆக்கினைத் தீர்ப்பிற்கு உட்படுத்தப்பட்டு அக்கினியினால் சுட்டொரிக்கப்படும் வரையிலும் கிறிஸ்தவ மதம் இந்தப் பூமியில் இருக்கும். இந்த மதத்தினைப் பின்பற்றக்கூடிய ஜனங்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் மறுமை என்ற நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆவியின் சரீரம் இல்லாத ஜனமாகவே இருப்பார்கள்.

    கிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப் பின்னர் கிறிஸ்தவர்களுக்குள் ஆவிக்குரிய நன்மையினை கொண்டுசேர்க்கும் தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள். கிருபை நிறைவுபெற்றதால் ஜனங்கள் கர்த்தருக்கு விரோதமான தங்களின் கிரியைகளை விட்டு மனம் திரும்ப மாட்டார்கள் (வெளி. 16: 11).

    மனிதனின் ஞானம் வளரும்போது மனிதன் கர்த்தரோடு இடைபடுவதையும், அவரிடத்தில் வைக்கும் விசுவாசத்தினையும் இழந்து போகின்றான். அது அவனை இருளுக்குள் அழைத்துச் செல்லும். நன்மைதீமை அறிந்து, உருவாக்கவும் அழிக்கவும் தக்கதான ஞானம் மனிதனிடத்தில் வளரும்போது அவன் அறிவுக் கண்கள் திறக்கப்படும் (ஆதி. 3: 5). அந்த அறிவு அவனை ஜீவன் என்ற ஒளியை ஏற்றுக்கொள்ளவிடாது. இந்த ஞானமானது ஜனங்களை இருளுக்கு உரியவர்களாக மாற்றும்.

    இருள் தற்போது பூமியினை மூட ஆரம்பித்துவிட்டது. காரிருள் ஜனங்களை மூட ஆரம்பித்துவிட்டது. மனிதனின் ஞானம் கர்த்தரை அறியக்கூடிய ஒளியினை மறுதலிக்கச் செய்யும். கர்த்தரை அறியக்கூடிய அறிவிலிருந்து விலகிய மனிதன் இருளைப் பற்றிக்கொள்வான். பரத்திலிருந்து அனுப்பப்படும் ஞானம் மனிதனிடம் இடைபடாது.

    இருள் பூமியினை மூடத் தொடங்கும். இந்த வேளையில் கர்த்தரின் வார்த்தையினை விசுவாசிப்போம். கர்த்தர் நம் மேல் உதிப்பார். எந்த மனுஷனையும் உயிர்ப்பிக்கும் மெய்யான ஒளி நம்மை உயிர்ப்பிக்கும். வார்த்தையில் விசுவாசம் கொண்டவர்களாகி, நித்திய ஜீவனைச் சுதந்தரிப்போம்.

    "எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது. கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது" (ஏசா. 60: 1). ஒளிக்குரிய அந்த மகிமையினைப் பெற்றுக்கொள்ள கர்த்தர்தாமே தமது கிருபையினை நமக்குக் கட்டளையிடுவாராக!

ஆமென்!     ஆமென்!!     ஆமென்!!!

All Sermonsஅனைத்து பிரசங்கங்கள்