Phone
Mail
Whatsapp

The Word for the day

வார்த்தையினால் விடுதலை

Listenகேட்க Watchபார்க்க

43. காட்டு மிருகங்கள்

43. காட்டு மிருகங்கள்

Sorry for the inconvience, Currently English version is not avalilable.

Switch to Tamil language

எசே. 34: 8-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்."

    இங்கே மேய்ப்பர்கள் கர்த்தரின் ஆடுகளை விசாரியாமற்போனபடியால் அவரின் ஆடுகள் சூறையாகி, காட்டு மிருகங்களுக்கு இரையாய்ப் போயிற்றென்று தீர்க்கதரிசியாகிய எசேக்கியாவின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்த்தரின் ஆடுகள் காட்டு மிருகங்களுக்கு இரையாகிப் போனது குறித்து இங்கே கூறப்பட்டுள்ளது. இவைகளின் பொருள் இன்னதென்று பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலின் மூலம் தங்கள் முன் செய்தியாக அறிவிக்கப்படுகின்றது.

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்!!

    மந்தைகள் யார் என்றும், மேய்ப்பன் யார் என்றும், காட்டு மிருகங்கள் எவைகள் என்றும் வார்த்தையின்படியாக காண்போமாக:-

"நானே நல்ல மேய்ப்பன்" என்று இயேசுகிறிஸ்து கூறியுள்ளார் (யோவான் 10: 11). அவரே நல்ல மேய்ப்பராக இருக்கின்றார்.
"என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்" என்றும் கூறப்பட்டுள்ளது (எசே. 34: 31).

    கர்த்தரின் மந்தை என்பது கர்த்தரைத் தெய்வமாகக் கொண்ட ஜனங்களாகும். பழைய ஏற்பாட்டின் காலத்தில் அந்த மந்தை இஸ்ரவேலர்களாகும். எசேக்கியேல் தீர்க்கதரிசி இஸ்ரவேல் புத்திரரிடத்திற்குக் கர்த்தரால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி (எசே. 2: 3, 5). அவன் மூலம் கொடுக்கப்பட்ட சாட்சி, இந்த கர்த்தரின் ஆடுகள் இஸ்ரவேல் புத்திரர் என்பதாகும்.

    இஸ்ரவேல் புத்திரரை நியாயப்பிரமாணத்திற்குள்ளாக வழிநடத்தக் கர்த்தரால் நியமிக்கப்பட்டவர்கள் மேய்ப்பர்கள். மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து கானான் தேசத்திற்கு வழிநடத்திச் செல்ல தெரிந்தெடுக்கப்பட்டவன். மோசே மேய்ப்பன் என்று சாட்சியிடப்பட்டுள்ளான். பழைய ஏற்பாட்டின் காலத்தில் லேவி கோத்திரத்தானாகிய ஆரோனும் அவன் குமாரரும் ஆசாரிய ஊழியம் செய்வதற்காக அபிஷேகிக்கப்பட்டவர்கள். இந்த மேய்ப்பர்கள் கர்த்தரின் ஜனங்களை வழிநடத்த கர்த்தரால் தெரிந்தெடுத்தக்கப்பட்டவர்கள். மேய்ப்பர்கள் ஜனங்களை பிரமாணத்திற்குள்ளாக வழிநடத்துபவர்கள். மேய்ப்பர்கள் ஆடுகளை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீரண்டை வழிநடத்துபவர்கள். ஆனால், காட்டுமிருகமானது மந்தையின் ஆடுகளை தனக்கு இரையாக்கும்.

    கர்த்தரின் மந்தையினை இரையாக்கிக் கொண்டிருக்கும் காட்டு மிருகம் எது?

    "தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரம் உள்ளதாய் இருந்தது..." (ஆதி. 3: 1) என்று வேதம் கூறுகின்றது. சர்ப்பம் காட்டு மிருகங்களில் ஒன்றாக இருந்ததைக் குறித்து இங்கே கூறப்பட்டுள்ளது. அநேக காட்டு மிருகங்களுக்குள் சர்ப்பமும் இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. காட்டு மிருகங்களுக்குள் இந்த சர்ப்பமானது மிகுந்த தந்திரமுள்ளதாய் இருந்தது. தந்திரமுள்ள இந்த சர்ப்பமானது தன்னுடைய வஞ்சகத்தினால் ஏவாளை ஏமாற்றியது (2கொரி.11:3). சர்ப்பத்தின் இந்த தந்திரம் வஞ்சனையாகக் காணப்பட்டது.

    ஏதேன் தோட்டத்தில் இருந்த இந்த பழைய பாம்பான சர்ப்பமானது சகல காட்டு மிருகங்களிலும் தந்திரம் கொண்டிருந்தது. அது ஏவாளை வஞ்சித்ததின் பொருட்டு சபிக்கப்பட்டு மண்ணுக்கு அனுப்பப்பட்டது (ஆதி. 3: 14). அன்று சர்ப்பமாகக் கிரியை செய்த பிசாசு இன்று வலுசர்ப்பமாய் தனது கிரியையினை செய்து கொண்டிருக்கின்றது. காட்டு மிருகங்களுக்குள் தந்திரமுள்ளதாய் இருந்த அந்த சர்ப்பம் இன்று வலுசர்ப்பமாய் கிரியை செய்கின்றது. இந்த வலுசர்ப்பமானது இப்போது எல்லாக் காட்டு மிருகங்களையும் விட தந்திரமுள்ளதாய் இருக்கின்றது.

    சர்ப்பம் என்றும், பிசாசு என்றும், வலுசர்ப்பம் என்றும் கூறப்பட்டுள்ள இந்த சாத்தானானவன் அபிஷேகம் பண்ணப்பட்ட லூசிபராகும் (எசே. 28: 14). உன்னதமான தேவனுக்குத் தானும் ஒப்பாவேன் என்று அவன் மேட்டிமை பாராட்டினான். இவன் தன் மேட்டிமையினால் தன்னைத் தேவன் என்று உயர்த்தியவன் (ஏசா. 14: 13, 14). தள்ளப்பட்ட ஆவிகள் யாவற்றிற்கும் இந்த வலுசர்ப்பமே தலைவனாகும். இவன் நட்சத்திரங்களாய் ஒளி விட்டுக்கொண்டிருந்த தேவதூதர்களில் மூன்றில் ஒரு பங்கினரைத் தன்பக்கம் இழுத்து தன் நிலையிலிருந்து விழச் செய்தான் (வெளி. 12: 4) என்று வேதம் கூறுகின்றது. காட்டு மிருகங்கள் யாவற்றிற்கும் தலைவனாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வலுசர்ப்பத்தினை பிசாசென்றும், சாத்தான் என்றும், சர்ப்பம் என்றும் வேதம் கூறுகின்றது (வெளி. 20: 2).

    சர்ப்பமானது எல்லாக் காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரமுள்ளதாகவும். வஞ்சிக்கின்றதாகவும் செயல்பட்டபடியால் காட்டு மிருகங்கள் யாவற்றிற்கும் தலைவன் ஆனான் (ஆதி. 3: 1, 13). மேய்ப்பர்கள் கர்த்தரின் மந்தையினை விசாரியாமற்போனபடியினால் மந்தையின் ஆடுகள் சூறையாக்கப்பட்டு சர்ப்பத்திற்கு இரையானது என்று தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம். கர்த்தரின் மந்தையாகிய ஜனங்களை காட்டுமிருகங்களாகிய தள்ளப்பட்ட ஆவிகள் இரையாக்கிற்று. அது எப்படியாக மந்தையின் ஆடுகளை இரையாக்கினது? அது மேய்ப்பர்கள் மூலம் தனது கிரியைகளை செய்ய ஆரம்பித்தது.

    கானான் தேசத்தில் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகள் இருந்தார்கள் (உபா. 7: 1). அந்த ஜாதிகளை நீ ஒருமிக்க நிர்மூலமாக்க வேண்டாம் என்றும், நிர்மூலமாக்கினால் காட்டு மிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும் என்றும் கர்த்தர் தமது ஜனமாகிய இஸ்ரவேலரிடம் கூறியதைப் பார்க்கின்றோம் (உபா. 7: 22). அந்த ஜாதியாரை ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கினால், காட்டு மிருகங்களின் மூலம் தனது ஜனமாகிய இஸ்ரவேலருக்கு இடையூறு ஏற்படும் என்பதால், அந்நிய ஜாதியான ஜனங்களை ஒருமிக்க அழிக்க வேண்டாம் என்று கர்த்தர் கூறியுள்ளார்.

    புறஜாதிகளை முற்றிலுமாக நிர்மூலமாக்கினால் அவர்களுக்குள் வாசமாய் இருக்கும் தள்ளப்பட்ட ஆவிகள், அதாவது காட்டு மிருகங்கள் இஸ்ரவேலருக்குள் பெருகி அதன்மூலமாக அவர்களுக்குள் இடையூறுகள் ஏற்படும் எனவும், எனவே புறஜாதிகள் யாவரையும் மொத்தமாக அழிக்க வேண்டாம் எனவும் கர்த்தர் கூறியுள்ளதைக் காண்கின்றோம்.

    காட்டு மிருகங்களாய் கூறப்பட்டுள்ள இந்த தள்ளப்பட்ட ஆவிகள் புறஜாதிகளின் தேவர்களாகும். புறஜாதிகள் முழுமையாய் அழிக்கப்பட்டால் அவர்களிடம் இடைபடும் தள்ளுண்ட ஆவிகள் தனது ஜனமாகிய இஸ்ரவேல் மந்தைக்குள் புகுந்து அவர்களை கெடுத்துவிடாதபடிக்கு புறஜாதிகளை முற்றிலும் அழிக்க வேண்டாம் என்று இங்கே கர்த்தர் கூறியுள்ளார். எனவேதான், உலகில் உள்ள நாடுகள் யாவும் கிறிஸ்தவ நாடுகளாக மாறாது என்று பார்க்கின்றோம். பிற தேவர்களை வணங்கும் ஜனங்களும் இந்தப் பூமியில் இருப்பார்கள். அக்கினியினால் அழிக்கப்படும் வரையிலும் பூமியில் இஸ்ரவேலர்கள் இருப்பார்கள்; கிறிஸ்தவர்கள் இருப்பார்கள்; ஜென்ம சுபாவத்தாரும் இருப்பார்கள். உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களின் உலகமாகாது.

    தள்ளப்பட்ட தூதனான லூசிபர் அன்று இஸ்ரவேலருக்குள் செயல்பட்டதுபோல, இன்று கிறிஸ்தவர்களுக்குள்ளும் வஞ்சிக்கின்றவனாக செயல்பட்டு வருகின்றான். உலக நாடுகள் முழுவதிலும் பார்த்தீர்கள் என்றால், சர்ப்பத்தின் சாயல் கொண்ட அல்லது சர்ப்பத்தின் நாமம் கொண்ட தேவர்களும் தேவதைகளும் இருப்பதை இப்போதும் நாம் பார்க்கின்றோம்.

    இஸ்ரவேல் ஜனம் தன்னைத் தேடினாலும், தன்னைத் தேடாவிட்டாலும் அந்த ஜனத்தின் மீது கர்த்தர் அன்புள்ளவராக இருக்கின்றார். இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை என்று கூறப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம் (ஏசா. 44: 21). இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மீது விசுவாசம் கொண்டதால் நாம் கிறிஸ்தவர்களாகின்றோம். இப்போது நாம் இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளானதால் யூதா கோத்திரத்தாராய் சுவிகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டோம். கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் பரந்து காணப்படுகின்றார்கள். இப்போது கிறிஸ்தவர்கள் அல்லாத புறஜாதிகள் முற்றிலுமாக அழிக்கப்படுவார்களேயானால் காட்டு மிருகங்கள் தங்களின் செயல்பாட்டினை முழுமையாக கிறிஸ்தவர்களுக்குள் புகுத்திக் கொள்ளும். அதின்மூலமாக அதிகப்படியான இடையூறுகளை அவர்களுக்குள் ஏற்படுத்தும். எனவே புறஜாதியாரை முழுவதுமாய் அழித்திட கர்த்தர் அனுமதிக்கவில்லை.

    காட்டு மிருகங்கள் எல்லாவற்றிலும் தந்திரமுள்ளவன் வலுசர்ப்பம். அவன் வஞ்சகன் என்று சாட்சியிடப்பட்டுள்ளான். கர்த்தரைத் தெய்வமாகக் கொண்ட ஜாதிகளிடம் சோதனைக்காரனாக அவன் அனுப்பப்படுகின்றான். புறஜாதிகள் மத்தியில் அவன் சோதனைக்காரனாக கிரியை செய்வதில்லை. காரணம், சோதனை நித்திய ஜீவனை சுதந்தரிக்கப்போகும் ஜீவன் கொண்டவர்களுக்கே. வலுசர்ப்பமும் மற்ற காட்டு மிருகங்களும் ஆவியின் சரீரம் இல்லாத மற்ற ஜனங்களை வஞ்சிக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் அவர்கள் ஆவியின் சரீரம் இல்லாதவர்கள். காட்டு மிருகங்கள் புறஜாதிகளால் வணங்கப்படும் தேவர்களாகும். உலகத்தின் சகல ராஜ்யங்களின் மேலுள்ள அதிகாரமும், அவைகளின் மகிமையும் அவைகளுக்கு தேவத்துவ அபிஷேகத்தினால் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கின்றது (லூக். 4: 5, 6). அவைகளைத் தங்களின் அதிகாரத்திற்குட்பட்ட ஜனங்களுக்குள் தங்களுக்குச் சித்தமானவனுக்கு கொடுக்கின்றது.

    எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலரின் கூக்குரலையும், அவர்கள் பட்ட உபத்திரவத்தினையும் கண்ட தேவன், தனது தாசனாகிய மோசேயைத் தெரிந்தெடுத்து அவர்களை எகிப்தியர் மத்தியிலிருந்து அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து வெளிக்கொணர்ந்தார்.

    எகிப்தியர் அழிவைக் கண்டார்கள். இஸ்ரவேலர் அற்புதங்களைக் கண்டார்கள்.

  1. ஆரோனின் கோல் சர்ப்பமானது:

    எகிப்தின் மந்திரவாதிகளும் தங்களின் மந்திர வித்தையினால் தங்களின் கோல்களைச் சர்ப்பங்கள் ஆக்கினார்கள். ஆனால் ஆரோனுடைய கோலோ மந்திரவாதிகளின் கோல்கள் யாவற்றையும் விழுங்கிற்று (யாத். 7: 9-12).

  2. எகிப்தின் நீர்நிலைகளின் உள்ள தண்ணீர் மீது மோசே தனது கோலை ஓங்கி அடிக்கத் தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று. எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினால் அப்படியே செய்தார்கள் (யாத். 7: 17-22).

  3. மோசே தனது கைக்கோலினை நீட்டி எகிப்து தேசத்தினை மூடிக்கொள்ளத்தக்கதாய் தவளைகளை வரப்பண்ணினான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினால் அப்படியே செய்தார்கள் (யாத். 8: 2-7).

  4. ஆரோன் தன் கையில் இருந்த தன் கோலை நீட்டி பூமியின் புழுதியின் மேல் அடித்தான். எகிப்து தேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று. எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினால் அப்படிச் செய்ய பிரயத்தனம் செய்தார்கள். ஆனால், அது அவர்களால் கூடாமற்போயிற்று (யாத். 8: 16-18).

பூமியின் நடுவே நானே கர்த்தர் என்பதை அறியும்படி என் ஜனத்திற்கும், உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படிச் செய்வேன் என்று கர்த்தர் கூறினார். எகிப்தியருக்கு உண்டான வாதையிலிருந்து தமது ஜனங்களைக் காத்துத் தப்புவித்து வித்தியாசம் உண்டாகும்படிச் செய்தார் (யாத். 8: 23). முதல் மூன்று காரியங்களையும் எகிப்தின் மந்திரவாதிகள் காட்டு மிருகங்களாகிய தங்களின் தேவர்களைக் கொண்டு செய்தார்கள். ஆனால் அதன்பின்னர் எகிப்தின் தேவர்களால் மோசே செய்த கிரியைகளைச் செய்யக்கூடாமற்போயிற்று. அதன்பின்னர் மேலும் 7 வாதைகளை எகிப்தியருக்குள் கர்த்தர் கட்டளையிட்டார். அந்த வாதைகளிலிருந்து தனது ஜனங்களைக் காக்க எகிப்தின் தேவர்களாகிய காட்டுமிருகங்களால் கூடாமற் போயிற்று. எகிப்தின் தேவர்களால் கிரியை செய்ய இயலாத கீழ்க்காணும் அற்புதங்களையும் கர்த்தர் மோசேயின் மூலம் செய்தார்.

  1. எகிப்தியரின் வீடுகளிலும் அவர்கள் இருந்த இடங்களிலும் வண்டுகளை அனுப்பினார் (யாத். 8: 24).

  2. எகிப்தியருடைய மிருக ஜீவன்கள் யாவும் சாகும்படி மகா கொடிதான கொள்ளை நோய் உண்டானது (யாத். 9: 6).

  3. எகிப்தியர் மேலும் அவர்களின் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப் பண்ணினார் (யாத். 9: 9-11).

  4. எகிப்து தேசமெங்கும் வீடுகளுக்கு வெளியில் இருந்த மனிதர்கள், மிருகங்கள் மற்றும் வெளியில் இருந்தவைகள் யாவும் அழிந்து போகும்படியாய் கல்மழை அனுப்பப்பட்டது. இந்த முறை பார்வோனின் ஊழியக்காரரில் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டவர்களின் உயிரும் உடமைகளும் காப்பாற்றப்பட்டது (யாத். 9: 18-26).

  5. எகிப்து தேசத்தின் மேல் வெட்டுக்கிளிகளை வரப்பண்ணி, கல்மழையினால் அழியாத பயிர் வகைகள் எல்லாவற்றையும் அழித்தார் (யாத். 10: 12, 13).

  6. எகிப்து தேசம் எங்கும் மூன்று நாட்கள் காரிருள் உண்டாயிற்று. இஸ்ரவேல் புத்திரர் வாசஸ்தலங்களிலோ வெளிச்சம் இருந்தது (யாத். 10: 22, 23).

  7. பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் எகிப்தில் உள்ள அடிமைப் பெண்ணின் தலைப்பிள்ளைகள் வரையிலும், எகிப்தியரின் மிருக ஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கொன்று போட்டார் (யாத். 12: 29). அன்றைய தினம் எகிப்தியரில் சாவில்லாத வீடு ஒன்றுகூட இல்லை (யாத். 12: 30). ஆனால் இஸ்ரவேலர் யாவரும் காக்கப்பட்டார்கள்.

எகிப்தின் தேவர்களாகிய காட்டு மிருகங்களால் கர்த்தரிடமிருந்து எகிப்தின் ஜனங்களையோ, அவர்களின் மிருகங்களையோ, உடமைகளையோ காக்க முடியவில்லை. மேலும் முதற்பேறாயிருந்த எல்லாவற்றையும் சங்காரம் செய்து எகிப்தின் தேவர்களின் மேலும் கர்த்தர் நீதியினைச் செலுத்தினார் (யாத். 12: 12, எண். 33: 4) என்று வேதம் கூறுகின்றது.

    கர்த்தர் நடத்துவித்த எல்லா காரியங்களையும் காட்டு மிருகங்களான இந்த தள்ளப்பட்ட ஆவிகள் செய்வதற்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை. அதாவது புறஜாதிகளுடைய தேவர்களான காட்டுமிருகங்களுக்கு அத்தகைய வல்லமை கட்டளையிடப்படவில்லை.

    ஏதேன் தோட்டத்திலிருந்த சர்ப்பமானது ஜீவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட ஆதாமை வஞ்சித்தது. கர்த்தரின் ஜனமாகிய இஸ்ரவேலர்களை பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமல் செயல்படும்பொருட்டு வஞ்சித்தது. இப்போது கிறிஸ்தவர்களாகிய நம்மையும் ஆவிக்குரிய சிந்தையிலிருந்து விலகும்படி செய்து வஞ்சித்துக் கொண்டிருக்கின்றது. சர்ப்பமாக, ஏதேன் தோட்டத்தில் தடை செய்யப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியினைப் புசிக்கும்படிக்கு ஏவாளை ஏவி அவளை வஞ்சித்தான். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளிக்கொணரப்பட்ட இஸ்ரவேலரை நன்மைதீமை அறியத்தக்கவர்களாக்கி, வனாந்தரத்தில் மரித்தவர்களாக்கினான். அவர்களின் நன்மை தீமை அறியாத பிள்ளைகள் மாத்திரம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தினைச் சுதந்தரித்தார்கள் (உபா. 1: 39). கானான் தேசத்தினைச் சுற்றிப்பார்த்து வந்து சுவிசேஷம் அறிவித்தவர்களில் 10 பேர் நன்மை தீமையினை அறிந்துகொண்டவர்கள். அவர்கள் துர்ச்செய்தியினைப் பரப்பினார்கள். மீதமுள்ள காலேப்பும், யோசுவாவும் நற்செய்தியினைக் கொண்டுவந்தார்கள்.

    துர்செய்திக்குச் செவிகொடுத்த இஸ்ரவேலர்கள், அற்புதங்களைக் கண்டும், அதிசயங்களைப் பெற்றும், மன்னாவினால் போஷிக்கப்பட்டும், காடைகளை ருசித்தும், மாராவின் தண்ணீரை மதுரமாகப் பருகியும், கன்மலையினிடத்தில் தண்ணீரைப் பருகியும், தங்களுக்கு அறிவிக்கப்பட்ட மாறான சுவிசேஷத்திற்குச் செவிகொடுத்து நிச்சயிக்கப்பட்ட இலக்கினை இழந்துபோனார்கள். நன்மை தீமை அறியத்தக்க மாறான சுவிசேஷத்திற்கு செவிகொடுத்ததால் அவர்கள் நன்மை தீமை அறியத்தக்க கனியினைப் புசித்தவர்களின் நிலைமைக்குள்ளாகி வழியிலே மாண்டுபோனார்கள். ஜீவனுக்குரியவர்களை மரணத்திற்கு உள்ளாக்கியது காட்டு மிருகத்தின் வஞ்சகமான போதகம்.

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் வனாந்திரத்தில் சாத்தானால் சோதிக்கப்படக் காட்டு மிருகங்களின் நடுவில் 40 நாட்கள் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள் என்று வேதம் சாட்சியிடுகின்றது (மாற். 1: 13). மாமிசத்தில் வெளிப்பட்ட வார்த்தையானவரும் காட்டு மிருகங்கள் மத்தியில் சோதிக்கப்பட அனுமதிக்கப்பட்டார். காட்டு மிருகங்களில் பிரதானமானவன் பிசாசு. அவனின் சோதனையினைக் கர்த்தர் ஜீவ வார்த்தையினைக் கொண்டு ஜெயங்கொண்டார். அதனால் அவன் அவரை விட்டு விலகிப்போனான் என்று வேதம் சாட்சியிடுகின்றது (லூக். 4: 2, 13).

    சோதனைக்காரன் பிசாசு. சோதனைக்குட்படுத்த நியமிக்கப்பட்டவன் பிசாசு. பிசாசு தன்னோடு சேர்த்து தள்ளப்பட்ட ஆவிகளைக் கொண்டு அந்தக் கிரியைகளைச் செய்து வருகிறது. சர்ப்பத்தோடு சேர்ந்து தள்ளப்பட்ட ஆவிகள் காட்டுமிருகங்களாகும்.

சோதனைகளில் ஜெயிக்கின்ற மனுஷன் பாக்கியவான் என்றே வேதம் கூறுகின்றது.

    சோதனைக்காரனான காட்டு மிருகங்களே கர்த்தரின் மந்தையின் ஆடுகளை அன்று முதல் இன்று வரையிலும் தனக்கு இரையாக்கிக் கொண்டிருக்கின்றது. பீறுகின்ற ஓநாய்கள் போல் அவைகள் கிரியை செய்துவருகின்றது. காட்டு மிருகங்களிலிருந்து தனது ஜனங்களைக் காக்க தம்முடைய மேய்ப்பர்களை கர்த்தர் அனுப்புகின்றார். ஏழு சபைக்காலங்களிலும் கர்த்தர் தனது மேய்ப்பர்களை அனுப்பி தனது ஆடுகளை வழிநடத்தி வந்துள்ளார். இப்போது நாம் ஜீவிக்கும் காலம் கிறிஸ்தவர்களாகிய நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கிருபையின் நிறைவின் காலமாகும். இப்போது கர்த்தர் தமது ஆடுகளை மேய்க்கும் பொருட்டு தனது மேய்ப்பனாகிய மோசேயை இந்தப் பூமிக்கு அனுப்புவார். அவன் கர்த்தரது சத்தத்திற்கு செவிகொடுக்கும் மந்தையை கர்த்தத்துவத்திற்குள்ளாக வழிநடத்துவான்.

    சபைக்காலங்களின் நிறைவில் கர்த்தருடைய மந்தையின் ஆடுகள், காட்டு மிருகங்களிடம் மேய்ப்பர்களாலேயே ஒப்புக்கொடுக்கப்படும். மேய்ப்பர்கள் கர்த்தரின் மந்தையினை வார்த்தையின்படி மேய்க்காமல் தங்களுடைய இச்சையின்படி மேய்ப்பார்கள். வலுசர்ப்பம் தனது ஆவியை மேய்ப்பர்களுக்குள் அனுப்பி மந்தையை காட்டுமிருகங்களுக்கு இரையாக்கும். மேய்ப்பர்கள் பரிசுத்த ஆவியானவரின் மூலம் சாட்சியிடப்படும் வார்த்தையின்படி உபதேசியாமல் உலக ஞானத்தில் கற்று, உலகத்தின் ஆவியினைக் கொண்டு மந்தையினை மேய்ப்பவர்களாகியிருப்பார்கள். எனவே, உலகத்தின் அதிபதியாகிய பிசாசு தன் இனத்தாராகிய காட்டு மிருகங்களுடன் சேர்ந்து கர்த்தரின் மந்தையினை இரையாக்கும் (எசே. 34: 3, 5, 8).

    இன்றைய ஸ்தாபனங்களும், சபைகளும் மந்தையின் ஆடுகளை வார்த்தைக்கு நேராக வழிநடத்துகின்றதா? சற்று சிந்தியுங்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின்மூலம் ஆடுகளை வழிநடத்துகின்றார்களா, அல்லது உலகத்தின் ஆவியினைக் கொண்டு வழிநடத்துகின்றார்களா? இன்று மாமிச தேவைகளுக்காக மாத்திரமே கர்த்தரை தேடச்செய்யும் மேய்ப்பர்களாக அவர்கள் மாறியுள்ளார்கள்.

    அன்று யூதர்கள் புறஜாதிகளுடன் சேர்ந்து அப்போஸ்தலர்களுக்கு அதாவது அன்றைக்குரிய வார்த்தையின் விசுவாசிகளுக்கு விரோதமாய் எழும்பினார்கள். காரணம், அவர்கள் காட்டு மிருகங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாகவும், அவைகளின் ஆளுகைக்கு உள்ளானவர்களுமாய் இருந்தார்கள். மாமிசத்தில் வெளிப்பட்ட அந்த வார்த்தையினை விசுவாசியாத யூதர்களும், புறஜாதிகளும் அதனை விசுவாசித்த விசுவாசிகளுக்கு விரோதமாக எழும்பினார்கள் (அப். 14: 2). எல்லா காலங்களிலும் கர்த்தத்துவத்தில் அனுப்பப்பட்ட மேய்ப்பர்களுக்கு எதிராகவே சத்துருவினால் அபிஷேகிக்கப்பட்ட மேய்ப்பர்கள் செயல்பட்டுள்ளார்கள்.

    கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சியின் போது ஒரே ஒரு மேய்ப்பன் மாத்திரமே இருப்பார். அந்த மேய்ப்பனின் வார்த்தைக்குச் செவிகொடுக்கும் ஆடுகள் அவரின் 1000 வருட அரசாட்சியில் பங்கடையும்.

    சாட்சியிடப்படும் சாட்சியின் வார்த்தைக்கு செவிகொடுக்க கர்த்தர் தாமே உங்களுக்குக் கிருபையினைக் கட்டளையிடுவாராக !

ஆமென்!     ஆமென்!!     ஆமென்!!!

All Sermonsஅனைத்து பிரசங்கங்கள்