Phone
Mail
Whatsapp

The Word for the day

வார்த்தையினால் விடுதலை

Listenகேட்க Watchபார்க்க

34. காளை, வெண்கல சர்ப்பம், ஆட்டுக்குட்டி

34. காளை, வெண்கல சர்ப்பம், ஆட்டுக்குட்டி

Sorry for the inconvience, Currently English version is not avalilable.

Switch to Tamil language

(அறிவிக்கப்பட்ட நாள்:15.12.2013)

    கர்த்தர் தம்முடைய அளவில்லாத கிருபையின் மூலம் தம்முடைய ஆதீனத்தில் அவர் முன்குறித்தவைகள் ஒவ்வொன்றையும் வரிசைக்கிரமமாக அறிவித்து வருகின்றார். அவர் அறிவித்துள்ள வார்த்தைக்குச் சாட்சியாய் இந்த ஊழியத்தையும் எழுப்பியிருக்கின்றார். அந்தக் கிருபையின் வார்த்தையண்டையிலே நாம் ஒன்று கூட்டப்பட்டிருக்கின்றோம்.

யோவான் 17: 3-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்."

    நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள ஒரு கிரியை அவசியமாய் தேவைப்படுவதைக் குறித்து இங்கே சாட்சியிடப்பட்டுள்ளது. அது கர்த்தரை அறியக்கூடிய அறிவாகும். இந்த அறிவு கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் இருக்கின்றதா? ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவையும், அவர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என்று இங்கே உரைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவு கிறிஸ்தவர்களாகிய நம் எல்லோரிடமும் இல்லையே! நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டிருப்பவர்கள் அந்த அறிவைப் பெற்றுக்கொள்கிறார்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கர்த்தரை அறியக்கூடிய அறிவைப் பெற்றவர்களாக சாட்சியிடப்படுகிறார்கள்.

    ஏசா, யாக்கோபு என்ற இரு மாமிச சரீரங்களுக்குள்ளாக ஜீவித்த ஆத்துமாக்கள் தங்களது கிரியைகளில் பூரணப்பட வேண்டும் என்பதற்காக இந்தப் பூமியில் அனுப்பப்பட்டார்கள். ஏசா ஆக்கினைக்குரியவனாகவும், யாக்கோபு ஜீவனுக்குரியவனாகவும் தீர்க்கப்பட்டார்கள். யாக்கோபு கர்த்தரைக் குறித்த அறிவைப் பெற்றிருந்தான். ஏசா அவ்விதமாய் சாட்சியிடப்படவில்லை. கிறிஸ்தவர்களாகிய நம் எல்லோரிடத்திலும் யாக்கோபைப்போல கர்த்தரைப் பற்றி அறியக்கூடிய அறிவு இருக்கின்றதா? உலகப் பூர்வமாகக் கொடுக்கப்படுகின்ற ஞானம் வேறு;; பரத்திலிருந்து அனுப்பப்படுகின்ற ஞானம் வேறு, பரத்திலிருந்து அனுப்பப்படுகின்ற ஞானமே, தேவனைப் பற்றியும், கர்த்தரைப் பற்றியும், கர்த்ததத்துவத்தினைப் பற்றியும் அறியச் செய்யும். பூமிக்குரிய ஞானமானது பூமிக்குரியவைகளை மாத்திரம் அறியச்செய்யும். கர்த்ததத்துவத்தில் கர்த்தரால் ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவனாக இருந்தாலும், கர்த்ததத்துவ அறிவைப் பெற்றவனாக இருந்தாலும், உலக ஞானம் இல்லாதிருந்தால், அவனால் ஒரு ராக்கெட்டை உருவாக்க இயலாது அல்லவா? ராக்கெட்டினை உண்டுபண்ணுவதற்கு, அதைக் குறித்த ஞானம் பெற்றிருக்க வேண்டும். அதுபோலவே பூமிக்குரிய ஞானத்தினைக் கொண்டு, கர்த்ததத்துவ காரியங்களை அறிய இயலாது. கர்த்ததத்துவத்திற்குள்ளான ஞானம் யாருக்கு அருளப்பட்டிருக்கின்றதோ, அவர்களால் மாத்திரமே கர்த்ததத்துவத்திற்குச் சாட்சியிட இயலும். இதைத்தான் வேதம் சாட்சியிடுகின்றது.

    தேவனாகிய கர்த்தரைப் பற்றி அறியக்கூடிய அறிவு என்பது யேகோவாவினைப் பற்றி அறியக்கூடிய அறிவாகும் எனவும், சர்வவல்லமையுள்ள தேவனைப் பற்றி அறியக்கூடிய அறிவாகவும் தீர்க்கப்படுகின்றது. யார் இவைகளை அறிந்தார்களோ, அவர்களாலேயே கிறிஸ்துவைப் பற்றி அறிய முடிந்தது. கிறிஸ்து பிதாவினால் அனுப்பப்பட்ட வார்த்தை -"நீர் அனுப்பியவர்" என்று தன்னைக் குறித்து அவர் சாட்சியிட்டுள்ளார். பிதா அனுப்பியவர் மூலமாக மாத்திரமே நாம் பிதாவை அறிய இயலும். கிறிஸ்து பிதாவினால் அனுப்பப்பட்டவர். அவர் மூலமாகவே பிதாவை அறியக்கூடிய ஞானத்தினைப் பெற முடியும்.

    மோசே கர்த்தரால் அனுப்பப்பட்டவன். மோசேயின் மூலமாக நியாயப் பிரமாணம் சாட்சியிடப்பட்டது. அதனைப் பின்பற்றிய இஸ்ரவேலர்கள் நித்திய ஜீவனுக்குரியவர்களானார்கள், கர்த்தரை அறியக்கூடிய அறிவைப் பெற்றார்கள். எல்லோரும் ஒரே ஞானபானத்தினைக் குடித்தார்கள் என்றும்; ஒரே ஞான போஜனத்தினைப் புசித்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளதை வேதத்தில் வாசிக்கின்றோம். இருப்பினும், மோசேக்கு எதிராகவும் ஒரு கூட்டம் எழும்பியது. அவர்கள் யேகோவாவைக் குறித்த அறிவு இல்லாதிருந்தபடியால், மோசேக்கு எதிர்த்து நின்றார்கள்.

    கர்த்தரைப்பற்றி அறியக்கூடிய அறிவே நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய கிருபையினைக் கொடுக்கும். கர்த்தரை அறியக்கூடிய அறிவு கொண்டவர்கள் அவரால் அனுப்பப்பட்டவரிடத்திலும் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

யோவா. 17: 5-ல் இவ்விதமாகக் கூறப்படுள்ளது

    "பிதாவே, உலகம் உண்டாகிறதற்குமுன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்."

    "நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்" என்று கிறிஸ்து வேண்டுதல் செய்வதை இங்கே பார்க்கிறோம்.

யோவா. 17: 2-ல் இவ்விதமாகக் கூறப்படுள்ளது

    "பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்."

    பிதா குமாரனுக்கென்று தந்தருளின யாவரும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டதைக் குறித்து இங்கே சாட்சியிடப்பட்டிருக்கிறது. குமாரன் மகிமைப்படுவதற்கென்று ஒரு கால அளவினைக் கர்த்தர் முன்குறித்து வைத்திருந்தார். குமாரனுடைய மாமிச சரீரம் உபத்திரவத்திற்குள்ளாகி மரித்து, அதன்பின் உயிரோடு எழுந்தபோது மகிமைக்குள்ளானது. அவர் அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தபோது, இந்த மகிமைக்குள்ளானார். இயேசுகிறிஸ்துவின் மாமிச சரீரம் இந்தப் பூமிக்கு அனுப்பப்பட்ட நோக்கம், அது பிட்கப்பட வேண்டும் என்பதாகும். அது பிட்கப்பட்டு மரித்தபின்னர், உயிரோடு எழும்பி மகிமைப்பட வேண்டும். அப்படியாக மகிமைப்பட்ட பின்னரே பரிசுத்த ஆவியானவர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமத்தில் அனுப்பப்பட்டார். இவை யாவும் முன்குறிக்கப்பட்ட தேவதிட்டம், மகிமைப்பட்ட கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பிதாவை ஏற்றுக்கொண்டவர்கள் ஆனார்கள்; இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத இஸ்ரவேலர்கள் பிதாவையும் ஏற்றுக்கொள்ளாதவர்களாகவே சாட்சியிடப்பட்டுள்ளார்கள்.

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற பிதாவின் நாமத்தினை ஏற்றுக்கொண்டதால் நாம் கிறிஸ்தவர்களானோம். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள் யாவரும் பிதாவினிடத்திற்குச் செல்லக்கூடியவர்களாக இருக்கின்றார்களா? என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்று கிறிஸ்து சாட்சியிட்டுள்ளார். பிதாவின் எல்லா நாமத்திற்கும் மேலாக அவரது நாமம் உயர்த்தப்பட்டுள்ளது. கர்த்தரகிய இயேசுகிறிஸ்து என்ற நாமத்தினைக் கொடுப்பதற்காக அந்த வார்த்தை மாமிச சரீரமாய் இந்தப் பூமிக்கு அனுப்பப்பட்டது. அவர் மகிமையடைந்ததும் அவரின் நாமம் பிதாவின் நாமமாக உயர்த்தப்பட்டது.

    பிதாவின் ராஜ்யமாகிய பரலோகராஜ்யத்திற்குள்ளாக செல்வதற்கு, பிதாவையும் குமாரனையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். பிதாவையும் குமாரனையும் அறிவதே நித்திய ஜீவன் என்று வேதம் சாட்சியிடுகின்றது. இந்த அறிவு இல்லாதவர்கள் பிதாவை இன்னாரென்றும், குமாரனை இன்னாரென்றும் அறியமாட்டார்கள். குமாரனை அறிந்தவர்கள் அவர்மூலமாக பிதாவையும் அறிவார்கள். ஒவ்வொரு காலத்திலும் கர்த்தர் தம்மிடத்திலிருந்து அந்த நாளுக்குரிய குமாரனான வார்த்தையினை அனுப்புகின்றார்.

    இப்போது நாம் ஜீவிக்கும் காலம் கடைசி ஏற்பாட்டின் காலமாகும். கடைசி ஏற்பாட்டின் காலத்தில் நித்திய ஜீவனைக் குறித்துச் சாட்சியிட ஒரு விளக்குத்தண்டினை கர்த்தர் அனுப்பப்போகின்றார். அந்த விளக்குத்தண்டிற்குச் சாட்சிகள் எழும்புவார்கள். பூமிக்குரிய ஞானம் அந்த விளக்கின் ஒளியை அங்கீகரிக்காது. அது மாறுபாடான சிந்தையையே வெளிப்படுத்தும். பூமிக்கு உரியவர்கள் பூமிக்குரியவைகளையே சிந்திப்பார்கள் என்று வேதம் சாட்சியிடுகின்றது.

    வார்த்தைக்குச் சாட்சியிடும் மாமிச சரீரங்களுக்கென்று தனி மகிமை ஏதும் எந்த ஒரு காலத்திலும் கட்டளையிடப்படவில்லை; மகிமையான சரீரங்கள் சாட்சியிட தெரிந்தெடுக்கப்படுவதில்லை. இயேசுகிறிஸ்துவின் மாமிச சரீரம் மகிமையின் சரீரமாய் வெளிப்படவில்லை. அந்த சரீரத்திற்கென்று தனி மகிமை எதுவும் இல்லை. அந்த மாமிச சரீரம் மகிமையாய் ஜீவித்திருக்குமேயானால், அந்த மாமிச சரீரத்தினை அவர்களால் உபத்திரவப்படுத்தியிருக்க முடியாது. அந்த மாமிச சரீரத்திற்கென்று எந்த மகிமையும் கட்டளையிடப்படவில்லை. அந்த மாமிச சரீரத்தின் மூலம் பிதா அனுப்பிய வார்த்தை மகிமை கொண்டது. கிறிஸ்துவின் மாமிச சரீரம் அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டது. ஆனால், பிதாவினால் கொடுத்து அனுப்பப்பட்ட வார்த்தை உயிர்ப்பிக்கின்ற வார்த்தையாய், ஜீவன் கொண்டதாய் இன்று வரையிலும் நமக்கு ஜீவனைக் கொடுத்து வருகின்றது. அனுப்பப்பட்ட அந்த வார்த்தையினை அறியக்கூடிய அறிவே நித்திய ஜீவன் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள ஒரு வார்த்தை சாட்சியிடப்பட்டுள்ளது. அந்த வார்த்தை பிதா அனுப்பி வைத்த வார்த்தையாகும். அந்த வார்த்தைக்குச் சாட்சியிட ஒவ்வொரு காலத்திலும் கர்த்தர் தம்முடைய தூதர்களை அனுப்பிவந்துள்ளார்.

    பழைய ஏற்பாட்டுக் காலம் பலி செலுத்த கட்டளையிடப்பட்ட காலம். அப்போது காளைகள் பலியிடப்பட்டது. நியாயப்பிரமாணத்தில் காளைகளைப் பலியிட கட்டளையிடப்பட்டது.

யாத். 20: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:"

    தேவன் பேசிக் கூறிய சகல வார்த்தைகளும் பிரமாணங்களாகக் கொடுக்கப்பட்டது. அந்தப் பிரமாணத்திற்குச் சாட்சியாய் ஜனங்கள் பலிகளைச் செலுத்தினார்கள்.

யாத். 24: 5-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதன பலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்."

    கர்த்தருக்கு சமாதான பலியாக காளைகள் பலியிடப்பட்டது என்பதைப் பார்க்கின்றோம். அப்படி பலியிடப்பட்ட எல்லா பலிகளும் கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டதா? இல்லையே! எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட கர்த்ததத்துவ ஜனங்கள் இஸ்ரவேலர்கள் ஆவார்கள். அவர்கள் ஏறெடுத்த பலிகள் நியாயப்பிரமாணத்தினைக் கட்டளையிட்ட யேகோவாவுக்கு செலுத்தப்பட்ட பலியாகும். எதற்காக அவர்கள் இந்தப் பலிகளைச் செலுத்தினார்கள்?

யாத். 20: 2-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே."

    அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து அவர்களை அவர் புறப்படப்பண்ணினார். அந்த ஜனங்களிடத்தில் நியாயப்பிரமாணம் கட்டளையிடப்பட்டது. அந்தப் பிரமாணத்தின்படி, காளைகள் பலியிடப்பட வேண்டும். நியாயப்பிரமாணத்தினைப் பின்பற்றி வந்த இஸ்ரவேலர்கள் காளையினைப் பலியிட்டார்கள். அந்தப் பலிகள் கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டது. காளையினைக் கர்த்தருக்கென்று பலியிடுவது குறித்து பிரமாணம் கட்டளையிட்டது.

    பிரமாணம் கூறுகின்றது: சமாதான பலிகளாகக் காளையினைப் பலி செலுத்த வேண்டும் என்று. மோசே சீனாய் மலையின் மீது பிரமாணங்களைப் பெறுவதற்காகக் காத்திருந்தான். காலம் கடந்து கொண்டிருக்கின்றது; மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை; நம்மை அழைத்துச்செல்வதற்குத் தேவர்கள் வேண்டும். நம்மை அழைத்து வந்த மோசே நம்மை விட்டு கடந்து சென்றுவிட்டார். அவரைப் பற்றிய நிலை தெரியவில்லை. அடிமைத்தன வீட்டிலிருந்து நம்மை அழைத்து வந்த தெய்வம் நம்மை விட்டுச் செல்லாது. வாக்குத்தத்தம் கொடுத்த இடத்திற்கு அந்தத் தெய்வம் நம்மை அழைத்துச் செல்லும். அப்படியானால், என்ன செய்ய வேண்டும்? எல்லோரும் ஆரோன் முன் முறையிடுகின்றார்கள். மோசே அனுப்பப்பட்டவன். அவர் காளையினைப் பலியிட்டார். ஜனங்கள் ஆரோனிடம் வருகின்றார்கள். அப்போது ஆரோன் பொன்னினால் ஒரு கன்றுகுட்டியினை அங்கே உருவாக்கினான்.

    கன்றுகுட்டி என்பது கர்த்தருக்கு பலி செலுத்தும்படியாக கட்டளையிடப்பட்ட ஒன்றாகும். ஆரோன் உருவாக்கிய கன்றுகுட்டியானது, பொன்னினால் செய்யப்பட்ட கன்றுகுட்டியாக இருந்தது. பொன்னினால் ஒரு கன்றுகுட்டியினைச் செய்தார்கள்; கன்றுகுட்டியினைத்தானே, கர்த்தர் பலியிட அங்கீகரித்திருந்தார். கர்த்தர் பலியிட தேர்ந்தெடுத்த அந்த மாமிசமானது காளையின் மாமிசமாகத்தானே இருந்தது. எனவே காளையினை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். காளையினைப் பலியிடுவது மோசேயின் மூலம் கட்டளையிடப்பட்ட பிரமாணமாக இருந்தது. எனவே அந்தக் காளையின் உருவத்தினையே பலிபீடத்தில் வைத்து பலியிட ஆரம்பித்தார்கள். பலிபீடத்தில் பலியிடப்பட கட்டளையிடப்பட்ட அந்தக் காளையானது கர்த்தரின் உருவமாகப் பார்க்கப்பட்டது. காளையினை உண்டுபண்ணியபின், ஆரோன், இதுவே கர்த்தர் என்று அறிவிப்பு செய்தான்.

யாத். 32: 4-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்."

    இஸ்ரவேலர்களே, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்து வந்த உங்கள் தெய்வம் இதுவே என்று ஆரோன் கூறினான். உங்களை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு வந்தது அவர் பலியிடும்பொருட்டு கட்டளையிட்ட இந்தக் காளைதான். கட்டளையிட்டதாலேயே காளையினைப் பலியிட்டோம். இப்போது நாங்கள் அடிமை தேசத்திலிருந்து வந்துவிட்டோம். நாங்கள் அங்கேயிருந்து வந்ததற்குச் சாட்சியிட மோசேயின் மூலமாகக் கட்டளையிடப்பட்ட பிரமாணம் - காளை பலி செலுத்தப்பட வேண்டும். நாங்கள் காளையினைப் பலி செலுத்தி விட்டோம். இப்போது பலியிடப்பட்ட இந்த காளையே எங்கள் தெய்வத்தின் உருவமாக இருக்கின்றது. பலியிட கட்டளையிடப்பட்ட இந்தக் காளையின் உருவமாகவே நம்முடைய தெய்வம் இருக்கும். எனவே நமது தெய்வத்தினைக் காளையின் ரூபமாய் உருவாக்கினோம் என்பதாகக் கூறி அந்தக் காளைக்கு அங்கே பலிகளைச் செலுத்தினார்கள். அதன்பின் கன்றுகுட்டிக்கென்று பலிபீடம் கட்டப்பட்டது.

யாத். 32: 5, 6-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான். மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதனபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கரிந்து, விளையாட எழுந்தார்கள்."

    கன்றுகுட்டியினை உருவாக்கி, அதற்கு முன்னதாக பலிபீடத்தினைக் கட்டி, அதன்மீது பலியிட்டார்கள். கன்றுகுட்டியானது கர்த்தர் அவர்களிடம் பலியிட கட்டளையிட்டதுதான். எனவே அதன் உருவத்தினை உருவாக்கி, அந்தக் கன்றுகுட்டிக்கு முன்பாக பலியிட்டார்கள். பொன்னினால் உருவாக்கப்பட்ட கன்றுகுட்டியினை கர்த்தரின் ரூபமாக எண்ணினர்கள். மோசே மூலம் அழைத்து வந்த தெய்வம் அதுவே என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் மோசேயின் மூலம் அழைத்து வந்த தெய்வத்திற்கு உருவம் சாட்சியிடப்படவில்லை என்பதை அவர்கள் அறியவில்லை. மோசே அந்த தெய்வத்திற்கென்று எந்த உருவத்தினையும் உருவாக்கவில்லை. எந்தவொரு சுரூபத்தினையும் உருவாக்கவில்லை.

    அங்கே அவர்களுக்கு தங்கள் மனதை ஒருமுகப்படுத்த ஒரு உருவம் தேவைப்பட்டது. நாங்கள் கண்ணை மூடிக்கொண்டே உட்கார்ந்து எப்படி ஆராதிப்பது? எங்களுடைய சிந்தனையினை நாங்கள் ஒருமுகப்படுத்த எங்கள் கண்களுக்குமுன் ஒரு உருவம் வேண்டும். ஏதாவது ஒரு உருவத்தைக் கொண்டு அந்த தெய்வத்தை நான் பார்க்க வேண்டும் என்ற சிந்தை கொண்டவர்களாகவே அவர்கள் காணப்பட்டார்கள். இதற்கு உதாரணமாக: ஒரு வெள்ளைச்சுவர் அல்லது வெள்ளைத் திரையினை மட்டும் நாம் பார்த்துக் கொண்டிருப்பதைவிட, அதில் ஒரு கரும்புள்ளி வைத்து, அதனையே பார்த்துக் கொண்டிருக்கும்போது, சிறிது நேரம் சென்றபின் வெள்ளை நிறம் தெரியாது; அதில் வைக்கப்பட்ட கரும்புள்ளி மாத்திரம்தான் தெரியும். இது மனதை ஒருமுகப்படுத்துகின்றது. எகிப்தியர்கள் ஞானத்தில் சிறந்தவர்கள். எகிப்தியருடைய கலாச்சாரம் நாகரீகத்தில் சிறந்த கலாச்சாரம். உலகம் முழுவதிலும் அதின் நாகரீகம் சாட்சியிடுகின்றது. மரித்த ஒரு மாமிச சரீரத்தினை பல ஆண்டு காலம் கெடாதபடிக்கு பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். எகிப்தியருடைய பாரம்பரியம் அது. இன்றைக்கும் "மம்மீஸ்" என்று அழைக்கப்படும் பிரம்மிடுகள் உலகம் முழுவதிலும் எகிப்தியரின் நாகரீகத்தை பறைசாற்றுகின்றது. இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்தில் 430 ஆண்டுகள் குடியிருந்தவர்கள்.

    இவர்கள் தங்களை அழைத்து வந்த தேவனுக்கு ஒரு உருவம் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள். மோசே இருந்திருந்தால் அவரைக் குறித்த காரியங்களை நமக்கு அறிவித்திருப்பார். ஆனால், மலையின் மீது சென்ற மோசே திரும்பவில்லை. அவர்கள் செய்யவேண்டிய காரியத்தினை அறிவிக்காமல் அவர் சென்றுவிட்டார். மலையின்மீது ஏறி பிரமாணத்தைப் பெற்று வருவதாக சென்றவன் திரும்பி வரவில்லை. எனவே அவன் செய்த கிரியைகளை நினைவுகூர்ந்தார்கள். மோசே முதன்முதலில் காளையினைப் பலியிடக் கூறினான். பலிபீடத்தின்மேல் செலுத்தப்பட்ட அந்தக் காளையின் சாயலையே நாம் அவருடைய சாயலாக எடுத்துக்கொள்வோம் என்ற சிந்தையில் காளையின் உருவத்தை கர்த்தருக்கு அடையாள மாக்கினார்கள். அவர்கள் மோசே தங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து அழைத்து வந்ததை மறுதலிக்கவில்லை. கர்த்தர் முன்னின்று வழிநடத்திவந்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள், அங்கீகரித்தார்கள். ஆனால், அந்த ஜனங்கள் அந்தக் கர்த்தருக்கு ஒரு சாயல் வேண்டுமென்று விரும்பினார்கள்.

    புறஜாதிகள் தங்களுக்கென்று உருவாக்கிய தேவர்கள் யாவரும் ஒரு உருவத்தில் இருந்தார்கள். அவைகளுக்கென்று ஒரு சாயல் இருந்தது. அவர்கள் தங்கள் தேவர்களின் சாயல்கொண்ட உருவத்தினைத் தங்கள் ஆலயத்தில் வைத்து வணங்கினார்கள். அவர்களின் இந்த வழிபாட்டினை இஸ்ரவேலர்கள் கண்டார்கள்; எனவே அவர்கள் தங்களது தேவனும் சாயல் இல்லாத தேவன் அல்ல. நம்முடைய தேவனுக்கும் ஒரு சாயல் இருக்கின்றது, ஒரு உருவம் இருக்கின்றது என்ற சிந்தை கொண்டவர்களாகவே ஒரு கன்றுக்குட்டியினை உருவாக்கினார்கள். அந்தக்கன்றுகுட்டிக்கு பலியும் செலுத்தினார்கள். பலியிட அனுமதிக்கப்பட்ட காளையானது கன்றுகுட்டியின் உருவத்தில் தேவனாயிற்று. இஸ்ரவேலரின் இந்தக் கிரியைகள் கர்த்தருடைய கண்களுக்கு முன் பாவமாயிருந்தது.

    கர்த்தருக்கு முன்பாக அது பாவமாயிற்று. மாமிசத்தின்படியாக சிந்தித்துப் பார்த்தோமானால், அவர்களின் இந்தக் கிரியைகள் மீறுதலாக இல்லாமல் போகலாம். இறைவன் எங்கும் இருக்கின்றான்; எல்லா பொருளிலும் இருக்கின்றான், எல்லா வடிவத்திலும் இருக்கின்றான். இது பொதுவாகக் கூறப்படுகின்ற ஒரு காரியமாகும். எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அவன் இருப்பான். இந்தத் தண்ணீரில் இருக்கின்றான். இந்தத் தண்ணீரைக் குவளையில் பிடித்தால், அந்தக் குவளையின் வடிவத்திலும் இருக்கின்றான். ஒரு புட்டியில் பிடித்தால், அந்தப் புட்டியின் வடிவிலும் இருக்கின்றான். ஒரு குடுவையில் வைத்தால், அந்தக் குடுவையின் வடிவிலும் இருக்கின்றான்; ஒரு பாத்திரத்தில் வைத்தால், அந்தப் பாத்திரத்தின் வடிவிலும் இருக்கின்றான் என்பது பொதுவான ஒரு சிந்தையாகும். இது புறஜாதிகளின் சிந்தையாகும். எந்தப் பாத்திரத்தின் தன்மையில் பார்க்கின்றோமோ, அந்தப் பாத்திரத்தின் தன்மைக்குஅவன் மாறிவிடுகின்றான் என்பதான ஒரு நம்பிக்கை.

    இந்த ஒரு பொதுவான சிந்தைதான் அன்று இஸ்ரவேலர்களிடமும் காணப்பட்டது; ஆரோனும் அப்படியே சிந்தித்தான். நாங்கள் கர்த்தரை மறக்கவில்லை; எங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து அழைத்து வந்த தேவனை நாங்கள் மறக்கவில்லை. அந்தத் தேவனுக்கென்று ஒரு உருவத்தினை மாத்திரமே உருவாக்கினோம். அந்த உருவத்தினைகூட நாங்களாகவே எங்கள் கற்பனையில் உருவாக்கவில்லை. அந்த உருவமானது அவர் பலியிட அனுமதித்தாரே, அந்தக்காளையின் வடிவில்தான் இருக்கின்றது. வேறொரு புதிய சாயலை உருவாக்கவில்லை. மேலும் அதற்கு மகிமையினைக் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே அதன்முன்னர் பலியிட்டோம். அந்த சிலையினை மகிமை கொண்ட பொன்னினால் உருவாக்கினோம் என்ற சிந்தை கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள். தாங்கள் உருவாக்கிய அந்த தேவனுக்கு அதன்மூலம் மகிமையினைச் சேர்த்தார்கள்; தங்களை அழைத்து வந்த தேவனுக்கு செலுத்தப்பட்ட மகிமையாகவே எண்ணினார்கள். பொன் மகிமைக்குரிய ஒரு காரியமாதலால், அந்தச் சிலையினை பொன்னினால் உருவாக்கினார்கள்.

    காளை கர்த்தருக்கென்று கட்டளையிடப்பட்ட பலி. பொன்னினால் செய்யப்பட்ட காளைக்கு ஏறெடுக்கும் பலியானது மீறப்பட்ட பலியாயிற்று. பொன்னினாலான மகிமையை கர்த்தர் அங்கீகரிக்கவில்லை. இந்தக் காளையினை உருவாக்கியதால், அவர்கள் கர்த்தருடைய கோபத்திற்குள்ளானார்கள்.

யாத். 32: 6, 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதனபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்து தேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்."

    அவர்களது இந்தக் கிரியைகள் மூலம் அவர்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள் என்றே வேதம் கூறுகின்றது. நோவா திராட்சரசம் அருந்தி, தன் வஸ்திரம் விலகி நிர்வாணமாயிருந்தான். ஆயினும், நோவா கர்த்தருடைய பார்வையில் நீதிமானாகக் காணப்பட்டான். அவனுக்குக் கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. மாமிசத்திற்குரிய கிரியைகள் மாத்திரம் பாவமாக எண்ணப்பட்டிருக்குமேயானால், நோவா நீதிமான் என்று சாட்சியிடப்பட்டிருக்க மாட்டான். மேலும், யூதாவைக் குறித்தும், தாவீதைக் குறித்தும் இப்படியாகவே நாம் காணலாம்.

    இஸ்ரவேலர்கள் நிர்வாணமாய் இருந்ததினால் மாத்திரம் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள் என்பதாய் கூறப்படவில்லை. கர்த்தரை அறியாதிருந்த தன்மையே அவர்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள் என்று சாட்சியிடப்பட்டுள்ளது.

    பொன்னினால் உருவாக்கப்பட்ட கன்றுக்குட்டியின் சாயலுக்கு கர்த்தரை ஒப்பிடமுடியாது. நம்முடைய தேவனை எந்தவொரு சாயலுக்கும் ஒப்பிடமுடியாது. அவருக்குரிய மகிமையினை எந்தவொரு விக்கிரகத்திற்கும் கொடுக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இஸ்ரவேலர்கள் கன்றுகுட்டிக்கு மகிமையினைக் கொடுத்ததினால், தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. அந்த ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாகத் தங்களைக் கெடுத்துக் கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள்.

யாத். 32: 5-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்."

    உருவாக்கப்பட்ட அந்தக் கன்றுகுட்டிக்கு பண்டிகை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். அந்தப் பண்டிகையை கர்த்தருக்குரிய பண்டிகையாக எண்ணி கொண்டாடினார்கள். ஆனால், அவர்களது இந்தக் கிரியைகள் கர்த்தருக்கு முன்பாக அருவருப்பாகக் காணப்பட்டது. அவர்கள் கர்த்தருக்கென கொண்டாடின அந்தப் பண்டிகை, கர்த்தருக்கு முன்பாக அருவருப்பாகக் காணப்பட்டது. அதேபோலொத்த ஒரு நிலையில்தான் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களும் இன்று நடந்துகொண்டிருக்கின்றது. கர்த்தர்தானே காளையினைப் பலியிடக் கூறினார்; எனவேதான் நாங்கள் காளையினை உருவாக்கி வைத்திருக்கின்றோம் எனவும், அந்தக் காளைக்கு மகிமை கொடுப்பதற்காகவே அதனை பொன்னினால் உருவாக்கினோம் எனவும் சிந்தை கொண்டவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.

    அப்படி உருவாக்கப்பட்ட அந்த தெய்வத்திற்கு மேலும் மகிமையினைச் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அதற்கென்று பலியிட்டோம் என்ற சிந்தையே அவர்களிடம் காணப்பட்டது. மேலும், அப்படி பலிசெலுத்தப்படும் நாளை பண்டிகையாகவும் அவர்கள் ஆசரித்தார்கள். ஆனால் அவர்கள் கொண்டாடின பண்டிகையானது கர்த்தருடைய கண்களுக்கு முன்பாக களியாட்டமாகவே காணப்பட்டது என்று வேதம் சாட்சியிட்டுள்ளது.

    கிறிஸ்தவர்களாகிய நாமும் இன்று பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதனைக் குறித்து அறியாதிருக்கக்கூடிய நிலையே காணப்படுகின்றது. கிறிஸ்மஸ் கொண்டாடக் கூடாதா என்று கேட்பவர்கள் மத்தியில், கர்த்தரைப் பற்றிய அறிவு இல்லாமல் கொண்டாடப்படும் பண்டிகையானது கர்த்தருக்கு முன்பாக எப்படி அமையும் என்பதை சிந்திக்க தவறிவிடுகின்றார்கள். கர்த்தரை இன்னாரென்று அறியாது நாம் ஆசரிக்கும் பண்டிகையும் களியாட்டம் போலவே அவர் கண்களுக்கு முன்பாகக் காணப்படும் என்பதை அறியாதிருக்கின்றோம்.

    பஸ்கா பண்டிகை கர்த்தர் அனுமதித்த பண்டிகைதான். நீங்கள் தலைமுறை தலைமுறையாக பஸ்கா பண்டிகையினை ஆசரிக்க வேண்டும் என அவர் கட்டளையிட்டிருந்தார். ஆனால், அந்தப் பஸ்கா பண்டிகையின் நாளில் குமாரனாய் அவர்கள்முன் வந்து நின்றவரை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. காரணம், அவர்கள் கர்த்தரைப் பற்றி அறியக்கூடிய அறிவைக் கொண்டவர்களாகக் காணப்படவில்லை. நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்கள் கர்த்தரைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்வார்கள்.

    பொற்காளைக்குப் பலியிட்டு, ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள். கர்த்தருக்குச் செலுத்த வேண்டிய பண்டிகையின் மகிமையினை விக்கிரகத்திற்குச் செலுத்த ஆரம்பித்தார்கள்; இதன் மூலம் மாறுபாடான போதகத்திற்குச் செவிகொடுக்க ஆரம்பித்தார்கள்.

    அடுத்தபடியாக,

யாத். 32: 8-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்."

    கர்த்தருடைய வழியை விட்டு அவர்கள் விலகினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரவேலர்கள் தங்களுக்குக் கட்டளையிடப்பட்ட வழியிலிருந்து விலகினார்கள். அவர்கள் உருவாக்கிய கன்றுகுட்டி. அவர்களை கர்த்தர் நியமித்த வழியிலிருந்து விலகச் செய்தது. மாமிசத்தின்படி அவர்கள் கானான் தேசத்திற்கு செல்லக்கூடிய அந்த வழியில்தான் சென்றார்கள். வேறு தேசத்திற்குள் செல்லவேண்டிய வழியில் அவர்கள் செல்லவில்லை. கர்த்தர் கட்டளையிட்ட அந்தப் பாதையில்தான் தாத்தான், அபிராம் உட்பட்ட அனைவரும் பிரயாணமாய் சென்றார்கள். அது மாமிசத்தின்படியாக கானானுக்குச் செல்லும் வழி. ஆனால் ஆவிக்கென்று வகுக்கப்பட்ட கர்த்தரது வழியில் அவர்கள் செல்லவில்லை. அதனைவிட்டு வழி விலகி சென்றார்கள். எகிப்து தேசத்திலிருந்து கானானுக்குள் செல்லும் அந்த வழியினை விட்டு அவர்கள் விலகவில்லை. கர்த்தர் வாக்குக்கொடுத்த கானான் தேசத்திற்குச் செல்லும் வழியில்தான் அவர்கள் சென்றார்கள்.

    ஆனால், வார்த்தை எந்த வழியில் செல்ல வேண்டும் என்று நியமித்திருந்ததோ, அந்த வழியினை விட்டு விலகினார்கள். மாமிசத்தின்படியாக அவர்கள் செல்லும் வழி கானானுக்குள் அழைத்துச் செல்லும் வழியாகவே இருந்தது. ஆனால் அவர்கள் பின்பற்ற கட்டளையிடப்பட்ட பிரமாணத்திற்கு அது மாறுபாடானது. நியாயப்பிரமாணம் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று சாட்சியிட்டது. இந்த நியாயப்பிரமாணமானது புறஜாதிகளின் காலத்தில் நிறைவேறித்தீர்ந்த பிரமாணமாயிற்று. இப்போது நாம் ஜீவிக்கும் காலம் கிருபையின் காலமாகும். இது புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காலமாகும். இது கிறிஸ்தவர்களாகிய நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கிருபையின் காலமாகும். ஆனால் நியாயப்பிரமாண காலம் என்பது மாமிசத்தில் செய்யும் கிரியைக்குத்தக்க பலன் மாமிசத்தில் உடனுக்கு உடன் கொடுத்த காலமாகும். ஆனால், ஆவிக்குரிய பலனோ அது நித்திய ஜீவன்.

யாத். 32: 34-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்."

    கர்த்தர் தாம் விசாரிக்கும் நாளில், ஆவிக்குரிய கிரியைகளைக் குறித்து விசாரிப்பார். அன்று இஸ்ரவேலர்களை வழிநடத்த மோசே என்ற தூதனானவர் கட்டளையிடப்பட்டார்.

    ஆரோன் உருவாக்கிய பொன்னினால் செய்யப்பட்ட காளையினுக்குப் பலி செலுத்திய எல்லா இஸ்ரவேலரையும் கர்த்தர் அன்று அழித்துப் போடவில்லை. மோசேயின் பக்கம் வந்தவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். காளையின் பக்கத்தில் நின்றவர்கள் யாவரும் அழிக்கப்பட்டார்கள். ஆரோன் ஜனங்களைக் கெடுத்துப்போட்டான் என்று இங்கே கூறப்பட்டிருக்கின்றது. காளையினைப் பற்றிய விஷயத்தில் மோசே தவறு என்று சுட்டிக்காட்டியவுடன், அனுப்பப்பட்டவன் தவறு என்று கூறியவுடன், அவர்கள் செய்த அந்தக் காரியம் தவறு என்று தங்களுக்குள் உணர்த்தப்பட்டதால், அவர்கள் மோசேயின் பக்கம் வந்தார்கள். மோசே அனுப்பப்பட்டவன்.

    ஒன்றான மெய்த்தேவனான யேகோவாவினால் அனுப்பப்பட்டவன் மோசே. அவன் அழைத்துச் சென்ற வழியாய் யார் அவனைப் பின்பற்றி நடந்தார்களோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றார்கள். நற்செய்தியினைச் சாட்சியிட்டு மோசேயினைப் பின்பற்றிச் சென்றவர்கள் காலேபும் யோசுவாவும் என்று வேதம் சாட்சியிடுகின்றது. மற்றவர்கள் அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கவில்லை என்றே வேதம் சாட்சியிடுவதைப் பார்க்கின்றோம். எகிப்திலிருந்து புறப்பட்ட அனைவருக்கும் கர்த்தர் மன்னாவைக் கொடுத்தார். எல்லோருக்கும் காடைகளைக் கொடுத்தார்; எல்லோருக்கும் வஸ்திரங்களைக் கொடுத்தார். வஸ்திரம் கிழிந்த நிலையில் ஒருவனும் இல்லை. எல்லோருக்கும் பாதரட்சைகளைக் கொடுத்தார். அறுந்த பாதரட்சைகளோடு அவர்கள் நடந்து செல்லவில்லை. எல்லோரும் வாக்குத்தத்தம் கொடுத்து அழைத்துவரப்பட்டார்கள். எனவே அவர்கள் யாவருக்கும் இவைகள் மறுக்காமல் கொடுக்கப்பட்டது.

    கிறிஸ்தவர்களாகிய நாமும் வாக்குத்தத்தம் கொடுத்து அழைத்துவரப்பட்டுள்ள ஜனங்களாகும். கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் என்பது நித்திய ஜீவன் என்ற பரலோக ராஜ்யம் ஆகும். அதற்காகத்தான் எல்லோரையும் போஷித்து அழைத்து வருகின்றார். அன்று அழைத்துவரப்பட்ட கூட்டத்திற்குள்ளாக தாத்தான், அபிராம், கோராகு கூட்டத்தாரும் இருந்தார்கள். அவர்களுக்கும் மன்னா கொடுக்கப்பட்டது. அவர்களுக்கும் வார்த்தை கொடுக்கப்பட்டது. எகிப்து தேசத்தில் நடந்த உபாதையிலிருந்து அவர்களும் காக்கப்பட்டார்கள். ஏனென்றால், அவர்களும் வாக்குத்தத்தம் கொடுத்து அழைத்து வரப்பட்ட ஜனங்கள். இஸ்ரவேலர்கள் யாவரும் எகிப்து தேசத்திலிருந்து வெளியேறிவர கிருபையினைப் பெற்றவர்கள். எனவே அவர்கள் யாவரும் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். எகிப்தினைவிட்டு வெளியேறினார்கள். அந்த இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திட அனுப்பப்பட்ட தூதன் மோசே.

    அவன் அனுப்பப்பட்ட வார்த்தையினைக் கொண்டுவந்தான். அந்த வார்த்தை நியாயப்பிரமாணமாகும். அந்தப் பிரமாணத்தில் பலியிட தெரிந்தெடுக்கப்பட்டதுதான் காளை. காளையினை பலியாகச் செலுத்துவதனால் அந்தப் பலி கர்த்தருக்கு இடும் பலியாக இருந்தது. பலியாய்ச் செலுத்தப்படும் காளைக்கென்று மகிமை இல்லை. கட்டளையிடப்பட்ட பிரமாணத்திற்கும் மகிமை இல்லை. அந்தக் காளையினைப் பலியிடவும், பிரமாணத்தினைக் கட்டளையாயும் கொடுத்தவரே மகிமைக்குரியவர். ஆனால் ஜனங்கள் அவரை அறியாது; கட்டளையிடப்பட்ட மற்ற இரண்டையும் பிடித்துக்கொண்டார்கள்; காளையினைப் பிடித்துக் கொண்டார்கள்; நியாயப்பிரமாணத்தினையும் பற்றிக்கொண்டார்கள். ஆனால் இவைகளைக் கட்டளையிட்டவரை இன்னார் என்று அறியவில்லை. இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வந்தபோது அவர்கள் நியாயப்பிரமாணத்தைப் பற்றிக்கொண்டிருந்தார்கள். ஆனால் காளையினைப் பலியிடுவதை விட்டுவிட்டிருந்தார்கள். காரணம், காளையின் சுரூபம் அதற்கு முன்னமே உடைக்கப்பட்டுவிட்டது. அது அனுப்பப்பட்டவன் மூலம் உடைக்கப்பட்டது.

    இஸ்ரவேலர்கள் கர்த்தரை மறந்து காளையினைப் பற்றிக்கொண்டு இருந்ததுபோல, கிறிஸ்து வெளிப்பட்டபோது அவர்கள் நியாயப்பிரமாணத்தினைப் பற்றிக்கொண்டு பிரமாண பக்தர்களாய் இருந்தார்கள். அவர்கள் பிரமாணத்தினைக் கட்டளையிட்டவரை மறந்திருந்தார்கள். பிரமாணத்தினைக் கட்டளையிட்டவரை அவர்கள் அறிந்திருந்தார்களேயானால், அவரால் அனுப்பப்பட்டிருந்த கிறிஸ்துவையும் அறிந்திருப்பார்கள்.

    ஆரோன் மோசேக்குப் பகைஞன் இல்லை. மோசேக்கு உதவி செய்வதற்காகவே கர்த்தரால் அனுப்பப்பட்டவன். மோசேக்கு உதவியாக வந்தவன் மோசேயோடு இருந்த வரையிலும் கிரியைகளில் நீதியுள்ளவனாய் இருந்தான். மோசே மலையின்மீது ஏறியபின்னர், மாறுபாடான போதகத்திற்குள்ளாக ஜனங்களை அழைத்துச் சென்றான். கன்றுகுட்டியை உருவாக்கி அதனைக் கர்த்தர் என்று சாட்சியிட்டான். கிறிஸ்தவர்களாகிய நாம் வார்த்தையோடு இணைந்து இருக்கின்றவரையிலும், அனுப்பப்பட்டவரோடு இணைந்து இருக்கின்ற வரையிலும் ஜீவனுக்குரியவர்களாக இருப்போம். வார்த்தையை விட்டு விலகினால் ஆத்தும அழிவிற்குள்ளாவோம். மோசே காளையினை பலியிடக் கட்டளையிட்டான். இஸ்ரவேலர்கள் அதிலிருந்து மாறவில்லை. கர்த்தரையும் அவர்கள் மறக்கவில்லை. ஆனால் அவர்கள் காளைக்கு மகிமை சேர்த்தவர்களாய் அதனையே கர்த்தர் என்று அறிக்கையிட்டார்கள்; காளைக்குப் பண்டிகை கொண்டாடினார்கள்.

    ஆரோன் மோசேக்கு நாவாய் செயல்பட கர்த்தரால் அனுப்பப்பட்டவன். மோசே தன்னோடு இல்லாதபோது ஆரோன் தனிமையில் ஏறெடுத்த பலி அங்கே கர்த்தருக்கு முன்பாக அருவருப்பாக மாறியது. அவன் கன்றுகுட்டியினை உருவாக்கினான். ஆனால் அதன்பின்னர், அவன் மோசேயின் பட்சமாக மாறிவிட்டான்: ஜனங்கள்தான் இந்தக் கிரியைகளைச் செய்யத் தூண்டினார்கள் என்றான். ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஜனங்கள் ஆபரணங்களைக் கொடுத்தார்கள், அவைகள் நெருப்பில் போடப்பட்டது, அதிலிருந்து கன்றுகுட்டி உருவாகியது என்று கூறப்பட்டுள்ளது. மோசேக்கு என்ன ஆயிற்றோ என்று ஜனங்கள் வினவியதின் பலன் கன்றுகுட்டி உருவாயிற்று. ஆரோன் அனுப்பப்பட்டவனாகிய மோசேக்கு எதிர்த்து நிற்கவில்லை.

    ஆனால், தாத்தான், அபிராம், கோராகு கூட்டத்தார் மோசேக்கு எதிர்த்து நின்றார்கள். அவர்கள் மோசே மூலம் அறிவிக்கப்பட்ட வார்த்தைக்கு எதிர்த்து நின்றார்கள்; அவர்கள் மோசே பெற்ற அபிஷேகத்திற்கு எதிர்த்து நின்றார்கள். மோசேயிடம் மாத்திரம் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வாரா? எங்களிடத்திலும் அவர் கிரியை செய்கிறார் என்ற சிந்தை அவர்களிடம் காணப்பட்டது.

    ஆரோன் உருவாக்கின கன்றுகுட்டிக்கு முன்பாகப் பலியிட்டது அங்கே பாவமாயிற்று. காளை நியாயப்பிரமாணத்தின்படி பலியாய் செலுத்தப்பட அனுமதிக்கப்பட்டிருந்தது. செலுத்தப்பட்ட அந்தக் காளையின் பலி கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் காளையாய் உருவமான கன்றுக்குட்டிக்கு ஏறெடுக்கப்பட்ட பலி கர்த்தரது சமூகத்தில் பாவமாயிற்று. அவர்கள் கன்றுகுட்டியை உருவாக்கியது பாவமாயிற்று.

    கன்றுகுட்டிக்கு செலுத்தப்பட்ட பலியினை அவர்கள் கர்த்தருக்கு செலுத்துகின்ற பலி என்பதான சிந்தை கொண்டே செலுத்தினார்கள். அவர்கள் கன்றுகுட்டியின் உருவத்தில் கர்த்தரைக் காண்பதாகவே சிந்தை கொண்டிருந்தார்கள். கன்றுகுட்டிக்கு முன்பாக செலுத்திய பலியினை கர்த்தருக்கு இடும் பலி என நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அப்படியான விசுவாசத்தோடு அவர்கள் பலி செலுத்தினாலும், அந்தப் பலி கர்த்தருக்கு முன்பாக அருவருப்பான பலியாகவே காணப்பட்டது. அதேபோலொத்த வேறொரு நிகழ்வையும் வேதம் சாட்சியிடுகின்றது.

எண். 21: 6-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்."

    இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் வழிநடத்தப்பட்டபோது, கொள்ளிவாய்ச் சர்ப்பம் கடித்ததினால் அநேகர் மரித்தார்கள். அவர்கள் கர்த்தரிடம் வேண்டுதல் செய்தபோது, கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் சாயலான ஒரு உருவத்தினை உண்டுபண்ணி, அதனை நோக்கிப் பார்க்க வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

எண். 21: 8, 9-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.

    அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைப்பான்."

    கொள்ளிவாய்ச் சர்ப்பத்தினால் கடிபட்டவர்கள் பிழைக்கத்தக்கதாக இந்தக் கட்டளை அவர்களிடத்தில் கொடுக்கப்பட்டது. வெண்கலத்தினால் உருவாக்கப்பட்ட இந்த கொள்ளிவாய்ச் சர்ப்பத்தினை, ஒரு கம்பத்தில் உயர்த்தி கட்டி வைத்தார்கள். சர்ப்பத்தினால் கடிபட்டவன் அதனை நோக்கிப் பார்த்தபோது பிழைத்தான். சர்ப்பம் கடித்ததினால் மரணிக்க வேண்டியவன் மரணத்திலிருந்து காக்கப்பட கர்த்தர் இங்கே ஒரு உபாயத்தினை அவர்கள் மத்தியில் கட்டளையிட்டார். இது பிரமாணமாயிற்று. இந்தப் பிரமாணத்தின்படி, சர்ப்பத்தினால் கடியுண்டவர்கள் அந்த சர்ப்பத்தினைப் போன்ற இந்த உருவத்தினை நோக்கிப் பார்க்க வேண்டும். அவ்வாறு நோக்கிப் பார்க்கும்போது, அவர்கள் விடுதலை பெற்றார்கள். அந்தக் கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் சாயலான வெண்கல சர்ப்பம் ஒரு கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டது. கொம்பு என்பது உயர்ந்திருக்கின்ற ஒரு இடமாகும். கொம்பு என்றால் உயர்த்துதல். அப்படியானால், அந்த சர்ப்பத்தின் உருவத்தினை உயர்த்த வேண்டும். உயர்ந்திருக்கின்ற அந்த சர்ப்பத்தை நோக்கிப் பார்த்தவன், சர்ப்பத்தினால் கடிபட்டவனாயிருந்தாலும் மரணிக்கமாட்டான். இது வனாந்திர பயணத்தின்போது இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையாகும்.

    கொள்ளிவாய்ச் சர்ப்பத்தால் கடிக்கப்பட்டவன், ஆசாரியனிடம் சென்று தன்னுடைய பாவங்களை மன்னிக்க வேண்டி கேட்கவேண்டிய அவசியமில்லை; தீட்டாயிற்றே என்று கூறி ஸ்நானம் பண்ணவேண்டிய அவசியம் இல்லை.

    கொள்ளிவாய்ச் சர்ப்பத்தினால் கடியுண்டவர்கள் வேறு எந்த மாறுத்தரமும் செய்ய கட்டளையிடப்படவில்லை. கொள்ளிவாய்ச் சர்ப்பத்தினை நோக்கிப் பார்த்தால் அதுவே போதும்; உயர்த்தப்பட்ட அந்த வெண்கல சர்ப்பத்தைப் பார்க்க வேண்டும். அப்போது கொள்ளிவாய்ச் சர்ப்பத்தினால் வர இருந்த மரணத்திலிருந்து இரட்சிப்பு கிடைக்கும். அதனை மோசே உருவாக்கி வைத்தார். கர்த்தர் கட்டளையிட்ட பிரமாணத்தின்படி விக்கிரகத்தினை உண்டாக்கக்கூடாது, விக்கிரகத்தினை வணங்கக்கூடாது. ஒருவன் சர்ப்பத்தினால் கடியுண்டபின் அதைப் பார்க்க மாட்டேன்; எனக்கு சுகம் வேண்டும் என்ற சிந்தை கொண்டிருந்தால், அது மாறுபாடான சிந்தையாகவே எண்ணப்பட்டது. விக்கிரகத்தினை உருவாக்கவோ அதை சேவிக்கவோ கூடாது என்று கட்டளையிட்டிருந்தபோதும், இங்கே கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தினால் ஒரு வெண்கல சர்ப்பத்தை உருவாக்கியது பிரமாணத்தினை மீறாத ஒரு செயலாகவே சாட்சியிடப்படுகின்றது. ஆனால், கன்றுகுட்டியினை உருவாக்கியது பாவமாகவே காணப்பட்டது. இங்கே வெண்கல சர்ப்பத்தை நோக்கிப் பார்த்தது பாவமாக எண்ணப்படவில்லை. எனவே, வனாந்திர பயணத்தின்போது, அவர்கள் அந்த வெண்கல சர்ப்பத்தினை வணங்கினார்கள். விக்கிரகத்தை உருவாக்கக்கூடாது என்று கட்டளையிட்டவரே, அனுப்பப்பட்ட மோசேயின்மூலம் வெண்கல சர்ப்பத்தினை உருவாக்கக் கட்டளையிட்டார்.

    அனுப்பப்பட்டவனும் சர்ப்பத்தின் விக்கிரகத்தினை உண்டாக்கி அதனை உயர்த்தி வைத்தான். சர்ப்பத்தால் கடிபட்டவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கோ அல்லது யேகோவா தேவனே எங்களைக் காப்பாற்றுங்கள் என்றோ வேண்ட வேண்டியதில்லை. வெண்கல சர்ப்பத்தினை நோக்கிப் பார்த்தவர்கள் உடனடியாக சுகம் பெற்றார்கள். இங்கே வெண்கல சர்ப்பம் ஒரு அடையாளமாகக் கொடுக்கப்பட்டது. அது தன்னை நோக்கிப் பார்க்கும் இஸ்ரவேலர்களை மரணத்தினின்று காத்தது. எனவே இந்த வெண்கல சர்ப்பமும் வனாந்தர பயணத்தில் இஸ்ரவேலர்களால் சுமந்துகொண்டு வரப்பட்டது. அது வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் தேசத்திற்குள்ளாகக் கொண்டுசெல்லப்பட்டது. மோசேயும் அவனோடு இருந்தவர்களும் அந்த வெண்கல சர்ப்பத்தினை தூக்கிக்கொண்டு வனாந்தரத்தில் பயணம் செய்தார்கள். இந்த வெண்கல சர்ப்பமானது எசேக்கியாவின் காலம் வரையிலும் எருசலேமில் வைக்கப்பட்டிருந்தது.

    உடன்படிக்கைப் பெட்டிக்குள் ஆரோனுடைய துளிர்த்த கோல், மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம், மோசேயிடம் கர்த்தர் எழுதி கொடுத்த கற்பலகைகளும் இருந்தது. அதைப்போலவே இந்த வெண்கல சர்ப்பமும் அவர்களுடனே பிரயாணப்பட்டு கானான் தேசத்திற்குள் சென்றது. ஆரோனும் மோசேயும் மரித்தபின்னரும், அந்த வெண்கல சர்ப்பமானது இஸ்ரவேல் ஜனங்களால் தூபம் காட்டப்பட்டு உயர்த்தப்பட்டிருந்தது. எசேக்கியா ராஜா அதனை உடைத்துப்போட்டான் (2 இராஜா. 18: 4).

    மோசே மரித்தபின் இஸ்ரவேலர்களை வழிநடத்தி செல்ல யோசுவா நியமிக்கப்பட்டான்.

    யோசுவா கானான் தேசத்தைப் பங்கிடும்போதும் வெண்கல சர்ப்பம் வழிபாட்டுக்குரியதாகவே காணப்பட்டது. யோசுவா ஜனங்களை அழைத்துச் சென்ற தேசம் முழுமைக்குள்ளும் அது சென்றது. கூடாரம் போடுகின்ற இடங்களிலெல்லாம் அதுவும் இருந்தது. எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட ஜனங்கள் கானான் தேசத்திற்குள் குடியமர்த்தப்பட்டார்கள். கானான் தேசத்திற்குள் குடியமர்ந்தவுடன் அவர்களுக்கு ஒரு பிரமாணம் கொடுக்கப்பட்டது. அது, கண்ட இடத்திலும் அவர்கள் பலி செலுத்த தடை செய்தது. பெத்தேலுக்குப் போகாதே; தாணுக்குப் போகாதே என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கர்த்தருடைய நகரமாக சாட்சியிடப்பட்டுள்ள அந்த இசைவிணைப்பான நகரமான எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்தில் அது வைக்கப்பட்டது. அதற்கு ஜனங்கள் பலி செலுத்தினார்கள்.

    எருசலேமில் இருந்த தேவாலயத்தில் மட்டுமே பலி செலுத்த வேண்டும்; இதுவே பிரமாணமாகக் கட்டளையிடப்பட்டது. எருசலேம் தேவாலயத்தில் பரிசுத்த ஸ்தலம் எனவும், மகா பரிசுத்த ஸ்தலம் எனவும் இருபிரிவு காணப்பட்டது. அந்த தேவாலயத்தில்தான் வெண்கல சர்ப்பத்தினையும் வைத்தார்கள்.

    இஸ்ரவேலர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் யேகோவாவினுக்கு பலி செலுத்தியபின்னர் தேவாலயத்தின் வெளியில் வைக்கப்பட்டிருந்த இந்த வெண்கல சர்ப்பத்திற்கும் பலி செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்வுகள் எசேக்கியா ராஜாவின் நாட்கள் வரையிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. வனாந்திரத்தில் கொள்ளிவாய்ச் சர்ப்பம் கடிப்பதினால் ஏற்பட்ட மரணத்திலிருந்து காக்கப்பட அப்போது இந்த வெண்கல சர்ப்பம் உயர்த்தப்பட்டது. வனாந்தர பயணத்தின்போது கட்டளையிடப்பட்ட இந்த பிரமாணம் அவர்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது. அந்தப் பிரமாணமானது எசேக்கியா ராஜாவின் நாட்களில் தகர்க்கப்பட்டது.

    எசேக்கியா ராஜாவின் நாட்களில் எருசலேம் தேவாலயத்தில் உடன்படிக்கை பெட்டி இருந்தது. உடன்படிக்கைப் பெட்டிக்குள் கற்பலகைகள் இருந்தது. இவைகள் தேவாலயத்தில் சாட்சியாக வைக்கப்பட்டிருந்தது. பொற்பாத்திரத்தில் மன்னா வைக்கப்பட்டிருந்தது. இந்த மன்னாவானது இஸ்ரவேலர்கள் வனாந்தர பயணத்தில் மன்னாவினால் போஷிக்கப்பட்டதற்கு சாட்சியாக வைக்கப்பட்டிருந்தது. ஆரோனுடைய கோல் துளிர்த்ததால் ஆரோனுடைய வம்சத்தார் கர்த்தருக்குப் பலியிட தெரிந்தெடுக்கப்பட்டவர்களாய் உறுதி செய்யப்பட்டார்கள். இந்த ஆரோனின் சந்ததியார் அந்த வெண்கல சர்ப்பத்திற்கு தூபம் காட்டினார்கள். எசேக்கியா ராஜா கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையினால் அந்த வெண்கல சர்ப்பத்தினை உடைத்துப் போட்டான். அதன்பின்னர் இந்த வெண்கல சர்ப்பத்திற்கு தூபம் காட்டப்படவில்லை.

2 இரா. 18: 4, 5-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.

    அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை."

    எசேக்கியா ராஜா தவிர்த்து மற்ற இஸ்ரவேலரின் சிந்தை அன்று எப்படியாக இருந்தது? கர்த்தர் உருவாக்கக் கட்டளையிட்ட சர்ப்பத்தினை உடைத்துப்போடுவது சரியானது அல்ல என்பதாகவே காணப்பட்டது. தேவாலயத்திலிருந்து அதனை அப்புறப்படுத்துவது நீதிக்குரியதாய் காணப்படாததுபோன்ற எதிர்வினையான சிந்தையே காணப்பட்டது. மோசேயும் யோசுவாவும் பின்பற்றி வந்த நிலையில் அந்த வெண்கல சர்ப்பத்தை உடைப்பதால், தேவகோபத்திற்கு ஆளாக வேண்டிவருமோ போன்ற சிந்தையும் எழுந்திருந்த நிலை. ஆனால் எசேக்கியா ராஜாவோ அதனை உடைத்தெறிந்தான்.

    தாவீதிற்குப் பின்னதாக இந்த எசேக்கியா ராஜா இஸ்ரவேலர்களை ஆளுமை செய்தான். தாவீதின் நாட்களிலும் இந்த வெண்கல சர்ப்பம் இருந்தது. எசேக்கியாவுக்கு முன்பு இருந்த எந்த ராஜாவும் அதனை எடுத்துப்போடவில்லை. அது அங்கேயே இருந்தது. எசேக்கியாவுக்கு கர்த்தர்மேல் இருந்த வைராக்கியம் அதனை உடைத்தெறிந்தது. அவனுக்கு அந்த வெண்கல சர்ப்பத்தின்மீது நம்பிக்கை இல்லாதிருந்தது. அது நிறைவேறிய பிரமாணமாகவே அவனுக்குக் காணப்பட்டது. எசேக்கியா கர்த்தர்மீது நம்பிக்கை கொண்டவனாகக் காணப்பட்டான்; தேவனாகிய கர்த்தர்மீது நம்பிக்கை கொண்டவனாகக் காணப்பட்டான். சர்வவல்லமையுள்ள தேவன்மீது நம்பிக்கை கொண்டவனாகக் காணப்பட்டான். அந்த நம்பிக்கை வெண்கல சர்ப்பம் நிறுத்தப்பட கொடுக்கப்பட்டிருந்த காலம் இன்னதென்று அறிய செய்தது. காலம் நிறைவடைந்த பின்னரும் தேவாலயத்தில் அது இருப்பது நீதியாக அவனுக்குத் தோன்றவில்லை. எனவே அதனை உடைத்தெறிந்தான். உடைத்தெறிந்தவுடன், அதற்கென்று எந்த தனி மகிமையும் அவனுக்குக் கொடுக்கப்படவில்லை. நித்திய ஜீவனே அவனுக்குக் கிடைத்த பலன்.

    மேலும் ரப்சாக்கே ஈனமான வார்த்தைகளால் அவனை நிந்தித்துப் பேசினான். மனித கழிவுகளுக்குரிய காரியங்களால் எசேக்கியாவைத் தூற்றினான். எசேக்கியா துக்கமுகம் ஆனான் என்று வேதத்தில் பார்க்கின்றோம். அவன் எசேக்கியா உடைத்தெறிந்த அந்த மேடையினைக் குறித்து பழித்துக் கூறினான். ஆனால் எசேக்கியா கர்த்தர்மீது வைத்த நம்பிக்கையினால் அந்த வெண்கல சர்ப்பத்தினை உடைத்தெறிந்திருந்தான்.

    வெண்கல சர்ப்பம் உருவாக்கப்பட வேண்டும் என்பது முன்னர் பிரமாணமாய் கட்டளையிடப்பட்டது. கொள்ளிவாய்ச் சர்ப்பத்தால் கடியுண்டவர்கள் அதனை நோக்கிப் பார்த்து பிழைத்துக்கொண்டார்கள். வானத்தின் கீழே பூமியில் நீ எந்த விக்கிரகத்தையும் உருவாக்கவோ, அதனை நமஸ்கரிக்கவோ, அதனை சேவிக்கவோ கூடாது என்பது நியாயப்பிரமாணம். ஆனால், இங்கே விதிவிலக்காக வெண்கல சர்ப்பத்தினை நோக்கிப் பார் என்ற ஒரு பிரமாணம் கட்டளையிடப்பட்டது. அதனை நோக்கிப் பார்த்தவர்கள் ஜீவனை அடைந்தார்கள். நோக்கிப் பார்க்காதவர்கள் மரணம் அடைந்தார்கள். இவைகள் கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வுகளாகும். அதன்பின்னர், கானானுக்குள் குடியமர்ந்தார்கள். அங்கே கர்த்தருடைய நகரமாகிய எருசலேம் கட்டப்பட்டது. அதில் தேவாலயம் கட்டப்பட்டது. அதற்குள் அந்த வெண்கல சர்ப்பமும் வைக்கப்பட்டது. அங்கே ஜனங்கள் அதற்கும் பலியிட்டார்கள்; தூபம் காட்டி வந்தார்கள். ஆனால், எசேக்கியா ராஜாவோ அந்த வெண்கல சர்ப்பத்தினை உடைத்துப் போட்டான். இப்போது அது அங்கே வைக்க அனுமதிக்கப்படவில்லை.

    முதலாவது காளை. காளைக்குப் பின்னர் வெண்கல சர்ப்பம். காளையினைப் பலியிட கர்த்தர் கட்டளையிட்டார். ஆனால் பொன்னினால் செய்யப்பட்ட காளைக்கு பலி செலுத்தியது பாவமாயிற்று.

    அதன்பின்னர் வெண்கல சர்ப்பத்தினை நோக்கிப் பார்க்கும்படி கட்டளையிட்டார். பார்த்தவர்கள் பிழைத்தார்கள். ஆனால், அதன்பின்னர், அது எருசலேம் தேவாலயத்தில் வைக்கப்பட்டது பாவமாயிற்று. இவைகள் பழைய ஏற்பாட்டில் சாட்சியிடப்பட்டுள்ளவைகள்.

    புதிய ஏற்பாட்டிலும் இப்படியான ஒரு கிரியை ஏற்படும். அது மனுஷகுமாரன் உயர்த்தப்படக்கூடிய நிலையாகும்.

யோவா. 3: 14, 15-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "சர்ப்பமானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும்."

    வெண்கல சர்ப்பம் எப்படி வனாந்திரத்தில் உயர்த்தப்பட்டதோ, அதைப்போல மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும். வெண்கல சர்ப்பத்திற்கென்று ஒரு கால அளவு கட்டளையிடப்பட்டதுபோல, மனுஷகுமாரனை நோக்கிப் பார்க்கவும் ஒரு கால அளவு முன்குறிக்கப்பட்டிருக்கின்றது.

    கொள்ளிவாய்ச் சர்ப்பத்தினால் கடியுண்டவர்கள் மரணத்திலிருந்து தப்பிக்க வெண்கல சர்ப்பத்தினை நோக்கிப் பார்க்க வேண்டும். வெண்கல சர்ப்பத்தினை நோக்கிப் பார்த்தவர்கள், ஜீவனைப் பெற்றவர்களானார்கள். இந்த வெண்கல சர்ப்பம் உயர்த்தப்படுவதற்கென்று ஒரு கால அளவு முன்குறிக்கப்பட்டது. அது கானான் தேசத்திற்குள் இஸ்ரவேலர் சென்றடைகின்ற வரையிலுமான காலமாகும்.

    கானான் தேசத்திற்குள் சென்றபின்னர், இங்கே பிரமாணம் மாற்றி அமைக்கப்படுகின்றது. எருசலேமானது மகிமையின் ஸ்தலமாக உயர்த்தப்பட்டது. அது கர்த்தரது நகரம் என்று சாட்சியிடப்பட்டது. கர்த்தரது ஆலயம் அந்த நகரத்தை அலங்கரித்தது. எருசலேம் தேவாலயத்தினை நோக்கிப் பார்த்து, ஜனங்கள் இரட்சிப்பைக் கண்டார்கள். எதிரிகளால் சூழ்ந்த நிலையானாலும், பஞ்ச காலமாக இருந்தாலும், அவர் வாசம் செய்த அந்த எருசலேம் தேவாலயத்தினை நோக்கிப் பார்த்து ஜெபிக்கும்போது, அங்கே அவர்கள் செய்யும் வேண்டுதல் கேட்கப்படும் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. ஆலயத்தினைக் கட்டிய சாலொமோனும் இப்படியாக ஜெபித்ததை வேதத்தில் பார்க்கலாம். வெண்கல சர்ப்பத்தின் கிரியையின் காலம் நிறைவடைந்ததும் எருசலேமின் கிரியை ஆரம்பமாயிற்று. கண்ட இடத்திலும் பலி செலுத்த தடை செய்யப்பட்டது. எருசலேமில்தான் பலி செலுத்த வேண்டும் என்பது கட்டளையாக அறிவிக்கப்பட்டது.

    யோசுவாவின் நாட்களிலிருந்து எசேக்கியா ராஜா அந்த வெண்கல சர்ப்பத்தினை தகர்த்தெறியும் வரையிலும் ஜனங்கள் வெண்கல சர்ப்பத்திற்கும் தூபம் காட்டி வந்தார்கள். இந்தக் காரியம், எசேக்கியா ராஜாவிற்கு முரண்பாடாக காணப்பட்டது. எனவே எசேக்கியா இதனை மாற்றினார்.

    கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பு வரையிலும் இந்த வெண்கல சர்ப்பமானது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. கொள்ளிவாய்ச் சர்ப்பத்தால் கடியுண்டவர்களுக்கு மட்டுமே இந்த நீதி. கடிபட்டவன் அதனை நோக்கிப் பார்க்க வேண்டும். இது அவனுக்கு பிரமாணம். அதைப் பார்க்கும்போது, மரணமில்லா நிலை; ஒரு இரட்சிப்பு. ஆனால் அதன் காலம் நிறைவுபெற்றதும், அது விக்கிரகமாக மாறியது; எருசலேம் தேவாலயத்திற்குள்ளும் சென்றது. எருசலேமிற்குள் அதற்கு தூபம்காட்டும் சடங்குகள் எசேக்கியாவிற்கு அநீதியாகக் காணப்பட்டது. இதனை உடைத்தெறியும்படியாய் எசேக்கியாவின் ஆவியினைக் கர்த்தர் எழுப்பினார். அது மற்ற ஜனங்களின் நிலையிலிருந்து மாறுபட்ட ஒரு சிந்தனையினை அவனுக்குள் உருவாக்கிற்று.

    அதற்கென்று கொடுக்கப்பட்ட காலம் கடந்தபின்னர், அந்த வெண்கல சர்ப்பமானது வஞ்சிக்கிற போதகமாயிற்று. அதுபோலவே, இயேசுகிறிஸ்துவின் நாட்களில் எருசலேமிற்குள் இருந்த ஆசாரியர்களின் போதகம் வஞ்சிக்கிறதாகவே காணப்பட்டது. இந்த வஞ்சகத்தின் மூலம் எருசலேமிற்குள் மரணம் ஏற்பட்டது. அது ஆவியின் சரீர மரணம். மரணத்திற்கென்று முன்குறிக்கப்பட்டவர்கள் இந்த வஞ்சிக்கின்ற போதகத்தினால் ஆத்தும மரணத்திற்குள்ளானவர்களாய் தீர்க்கப்பட்டார்கள். இந்த வஞ்சிக்கின்ற போதகமானது சர்ப்பம் கொடுத்த போதகமாகும். சர்ப்பமானது வஞ்சிக்கின்ற தனது போதகத்தின்மூலமாக இஸ்ரவேலர்களைத் தீண்டும்போது, அங்கே மரணம். அது ஆவியின் சரீர மரணம்.

    சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டவர்கள் மரணத்திற்குள்ளானார்கள். சர்ப்பத்தினால் தீண்டப்பட்ட இஸ்ரவேலர்கள், இரட்சிக்கப்பட கிறிஸ்துவை நோக்கிப் பார்க்க வேண்டும் என்ற புதிய பிரமாணம் சாட்சியிடப்பட்டது. வனாந்திர பயணத்தின்போது கொள்ளிவாய்ச் சர்ப்பத்தினால் கடியுண்டவர்கள், வெண்கல சர்ப்பத்தினை நோக்கிப் பார்த்தபோது இரட்சிப்படைந்தார்கள். அதுபோல கிறிஸ்துவை நோக்கிப்பார்த்த இஸ்ரவேலர்கள் நித்திய ஜீவன் என்ற கிருபை பெற்றவர்கள் ஆனார்கள். இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோது, சர்ப்பத்தினுடைய வஞ்சிக்கின்ற போதகத்தின்மூலமாகத் தீண்டப்பட்டவர்கள் அவரை நோக்கிப் பார்த்தபோது இரட்சிப்பிற்குள்ளானார்கள். அப்போது சர்ப்பமானது எருசலேம் தேவாலயத்தில் இருந்து வஞ்சிக்கின்ற போதகத்தின் மூலம் இஸ்ரவேலர்களைத் தீண்டிற்று. இங்கே கிறிஸ்து வெண்கல சர்ப்பம்போல உயர்த்தப்பட்டார்.

    ஆக்கினைத்தீர்ப்பு என்ற இரண்டாம் மரணத்திலிருந்து இரட்சிக்கப்பட சர்ப்பத்தின் போதகத்தினால் தீண்டப்பட்ட இஸ்ரவேலர்கள் இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்க்க வேண்டும் என்பது புதிய பிரமாணம். கொள்ளிவாய்ச் சர்ப்பத்தினால் தீண்டப்பட்ட இஸ்ரவேலர்கள் வெண்கல சர்ப்பத்தினை நோக்கிப் பார்த்த போது அவர்களுக்கு ஜீவன் கிடைத்ததுபோல, எருசலேமின் போதனையினால் தீண்டப்பட்டவர்களாகிய இஸ்ரவேலர்கள் இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்த்தபோது, அவர்களுக்குள் நித்திய ஜீவன் என்ற கிருபை பெற்றவர்களானார்கள்.

    சர்ப்பமானது எருசலேம் தேவாலயத்தில் நிறைவேறிய பிரமாணத்தினைக் கொண்டு இஸ்ரவேலர்களைத் தீண்டியது. நிறைவேறிய போதகத்தினால் கடியுண்டவர்கள் மரணத்திற்குள்ளானார்கள். அவர்களை மரணத்திலிருந்து இரட்சிப்பதற்காக வெண்கல சர்ப்பம்போல இயேசுகிறிஸ்து உயர்த்தப்பட்டார். அவரின் மாமிச சரீரம் உயர்த்தப்பட்டது. அதை அறியாத இஸ்ரவேலர்களுக்கு இயேசுகிறிஸ்து ஒரு தச்சன் மகனாகவே தோன்றினார். அவர்கள் கிறிஸ்துவை மறுதலித்தார்கள். அப்போஸ்தலர்களின் பார்வையில் அவர் கிறிஸ்துவாகக் காணப்பட்டார். வெண்கல சர்ப்பம் உயர்த்தப்பட்டதுபோல இயேசுகிறிஸ்துவின் மாமிச சரீரமும் உயர்த்தப்பட வேண்டும் என்று சாட்சியிடப்பட்டதை ஒரு சிறுகூட்டம் ஏற்றுக்கொண்டது. அவர்கள் நித்திய ஜீவனுக்குரியவர்களாக மாறினார்கள்.

    நிறைவேறிய நியாயப்பிரமாணத்தினைக் கொண்டுள்ள வஞ்சகமான போதனையின் மூலம் கடியுண்ட இஸ்ரவேலர்கள் மரணத்திலிருந்து தப்பிட, ஆக்கினையிலிருந்து தப்பிட, எரிநரகத்திலிருந்து தப்பிட, இயேசுகிறிஸ்து என்ற மாமிச சரீரம் வெண்கல சர்ப்பமாய் உயர்த்தப்பட்டது. இயேசுவை கிறிஸ்து என்று அங்கீகரித்தவர்கள் ஜீவனுக்குரியவர்களாக மாறினார்கள். வெண்கல சர்ப்பமானது வனாந்திரத்தில் உயர்த்தப்பட்டதுபோல, இயேசுவும் கிறிஸ்துவாக, மேசியாவாக இஸ்ரவேலர்களுக்குள்ளாக உயர்த்தப்பட்டார். அவரை நோக்கிப் பார்த்த இஸ்ரவேலர்கள் நித்திய ஜீவனைச் சுதந்தரித்தவர்களாய் ஆத்தும மரணத்திலிருந்து காக்கப்பட்டார்கள்.

இயேசுகிறிஸ்து யார்?

    பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தருக்கென்று ஆட்டுக்குட்டியும் பலியாக செலுத்தப்பட்டது.

ஆதி. 22: 7, 8, 13-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது. தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்.

    அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய்,

    ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதார்லே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்."

    காளையினைப் போல ஆட்டுக்குட்டியும் பலி செலுத்துவதற்காக நியமிக்கப்பட்டிருந்தது. வேத வார்த்தையின்படியாக "ஆட்டுக்குட்டி" என்பது "பலிக்குரிய ஒரு சரீரமாகும்", "பலி செலுத்துவதற்காகத் தேர்ந்து எடுக்கப்பட்ட சரீரமாகும்.

யாத். 29: 39-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக."

    ஆட்டுக்குட்டி கர்த்தருக்கென்று பலி செலுத்துவதற்காகக் கர்த்தர் தேர்ந்தெடுத்த ஒரு சரீரமாகும்.

லேவி. 3: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,"

    செலுத்தப்படும் பலியின் இரத்தமானது பலிபீடத்தில் தெளிக்கப்பட வேண்டும். அந்த இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள், அதாவது கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு செல்லப்பட்டது.

லேவி. 4: 32-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவன் பாவநிவாரண பலியாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவருவானாகில், பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து,"

    பாவநிவாரண பலியாகவும் ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்டது.

லேவி. 12: 6-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடார வாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்."

    சர்வாங்க தகன பலியாகவும் ஆட்டுக்குட்டி செலுத்தப்பட்டது.

லேவி. 16: 10-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்திரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;"

    இப்படியாக ஆட்டுக்குட்டியினைப் பலி செலுத்துவது குறித்து வேதாகமத்தில் அநேக இடத்தில் கூறப்பட்டிருக்கின்றது. பழைய ஏற்பாட்டின் காலத்தில், ஆட்டுக்குட்டியானது பலி செலுத்தும்பொருட்டாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

லேவி. 14: 25-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "குற்றநிவாரண பலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்ற நிவாரண பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,"

    குற்றநிவாரண பலியாகவும், பாவநிவாரண பலியாகவும், மற்றும் சுத்தப்படுத்தும் பொருட்டாகவும் ஆட்டுக்குட்டியின் இரத்தம் பயன்படுத்தப்பட்டது.

லேவி. 23: 12-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,"

    மேலும் சர்வாங்க தகனபலியாகவும் ஆட்டுக்குட்டி கர்த்தருக்கென்று செலுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம். இப்படியாக பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆட்டுக்குட்டி என்பது கர்த்தருக்கு பலி செலுத்தும்பொருட்டு கட்டளையிடப்பட்ட ஒரு சரீரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டுக்குட்டியினைப் பலியாக செலுத்தவேண்டும் என்பதும் பிரமாணங்களில் ஒன்றாகும். தகனபலி, பாவநிவாரண பலி, குற்றநிவாரண பலி, சுத்திகரிப்பு இப்படியாக கர்த்தருக்கு இடும் பலிகளுக்கு ஆட்டுக்குட்டியினை பலியாகச் செலுத்தினார்கள்.

    பழைய ஏற்பாட்டின் காலத்தில் பலியிட கட்டளையிடப்பட்ட இந்த ஆட்டுக்குட்டியானது புதிய ஏற்பாட்டுக் காலத்தில் எப்படியாக சாட்சியிடப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.

யோவா. 1: 29-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி."

    "உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" என்று இங்கே யோவான் ஸ்நானகன் சாட்சியிட்டுள்ளான். இஸ்ரவேலர்களின் பாவத்திற்காக ஆட்டுக்குட்டியானது பழைய ஏற்பாட்டின் காலத்தில் பலியாக செலுத்தப்பட்டது. அது பாவநிவாரண பலியாக இருந்தது; அந்தப் பலி செலுத்துபவர்களை பாவத்திலிருந்து விடுவிப்பதாக அது இருந்தது. அந்தப் பலியில் ஆட்டுக்குட்டியின் இரத்தம் பலிபீடத்தில் தெளிக்கப்பட்டது. அந்த இரத்தம் பாவத்திற்கு விலையாகக் கொடுக்கப்பட்டது; அது பாவ நிவாரண பலியாகக் கொடுக்கப்பட்டது. பாவம் நிவிர்த்தியாக இரத்தம் சிந்தப்பட வேண்டும். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவநிவிர்த்தி இல்லை. இது பழைய ஏற்பாட்டின் முறைமை. புதிய ஏற்பாட்டின் காலத்திலும் அதுபோன்ற ஒரு ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டது. இந்த ஆட்டுக்குட்டியானது இஸ்ரவேலர்களுடைய பாவத்திற்காக மாத்திரமல்ல, உலகத்தின் பாவத்திற்காக செலுத்தப்பட்ட பலி என்று சாட்சியிடப்பட்டுள்ளது. உலகத்தின் பாவம் என்பது புறஜாதிகளின் பாவமாகும். இந்தப் பலி ஏறெடுக்கப்படும் வரையிலும் நாம் ஆபிரகாமின் தேவனை அறியாதிருந்தோம். நாம் உலகத்தானாயிருந்தோம், ஜென்ம சுபாவத்தானாயிருந்தோம். ஜென்மசுபாவம் கொண்ட புறஜாதியாரை உலகத்தார் என்று வேதம் சாட்சியிடுகின்றது. நம்முடைய ஜென்ம சுபாவத்திலிருந்து மீட்க்கப்பட இந்த ஆட்டுக்குட்டியானது பலியிடப்பட்டது. ஆத்துமா என்ற உள்ளான மனிதனை புறஜாதியார் கர்ப்பம் தரிக்க இயலாதிருந்தபோது இந்த ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டது. ஜென்ம சுபாவம் கொண்ட புறஜாதியாரின் பாவத்திற்காக அந்த ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டது. அந்த ஆட்டுக்குட்டி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மாமிச சரீரமாகும்.

    ஜென்மசுபாவத்தாரை பாவிகள் என்று வேதம் கூறுகின்றது. புறஜாதிகள் யாவரும் ஜென்மசுபாவத்தார் ஆவார்கள். களவு செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, பிறனுடையதை இச்சியாதிருப்பாயாக; மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உண்டாயிருக்கின்ற யாதொரு விக்கிரகத்தையாகிலும், சொரூபத்தையாகிலும் உண்டாக்காதிருப்பாயாக; அவைகளை நமஸ்கரியாமலும் சேவியாமலும் இருப்பாயாக. உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக. பூமியில் உன் ஆயுசு நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தாயையும், தகப்பனையும் கனம்பண்ணுவாயாக. இவையெல்லாம் பிரமாணங்களாகும். இந்தப் பிரமாணமானது ஜென்ம சுபாவத்தாராகிய புறஜாதிகளுக்குக் கொடுக்கப்பட்ட பிரமாணம் அல்ல. அது இஸ்ரவேலர்களுக்குக் கர்த்தர் கட்டளையிட்ட பிரமாணமாகும். இஸ்ரவேலே, கேள், உன் தேவனாகிய கர்த்தர் நானே. உன்னை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அழைத்து வந்தவர் நானே என சாட்சியிட்டவர், இந்தப் பிரமாணங்களை இஸ்ரவேலர்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு மற்றும் யாக்கோபின் சந்ததியாருக்குக் கட்டளையிட்டார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட இஸ்ரவேல் சந்ததியார் பின்பற்றவே மோசேயின் மூலம் நியாயப்பிரமாணம் கட்டளையிடப்பட்டது. அப்போது, இஸ்ரவேலர்கள் ஆவியின் சரீரம் என்ற ஆத்துமா கொண்ட ஜனங்களாய் இருந்தார்கள். அது அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட கிருபையாகும். ஆவியின் சரீரம் என்ற இந்தக் கிருபையானது அப்போது புறஜாதிகளுக்குக் கட்டளையிடப்படவில்லை. மேலும் அவர் இஸ்ரவேலர்களுக்கே தேவனாக தம்மைக் குறித்துச் சாட்சியிட்டுள்ளார். அப்போது புறஜாதிகளுடைய மாமிச சரீரத்தில் உயிர் இருந்தது. மாமிச சரீரத்தில் எல்லா ஆசீர்வாதமும் அவர்களுக்கும் அருளப்பட்டிருந்தது. மாமிச சரீரத்தில் இஸ்ரவேலர்களைக் காட்டிலும் எகிப்தியர் ஞானமுள்ளவர்களாக இருந்தார்கள். இஸ்ரவேலர்களைக் காட்டிலும் அறிவுள்ளவர்களாக இருந்தார்கள். இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். எகிப்தியரின் நாகரீகமே உலகின் தலைசிறந்த நாகரீகமாக அறியப்பட்டு வருகின்றது. இந்த எகிப்தியர்களிடம் இஸ்ரவேலர்கள் அடிமைப்பட்டிருந்தார்கள்.

    ஆத்துமா கொண்டவனை தன்னிடத்தில் அடிமைப்படுத்தி, சிறுமைப்படுத்திக் கொண்டிருந்தான் எகிப்தியன். துரைத்தனம் செய்த அவர்களுக்குள் கட்டளையிடப்படாத ஒன்று இஸ்ரவேலர்களுக்குள் இருந்தது. அது ஆத்துமா என்ற உள்ளான சரீரமாகும். மாமிச சரீரம் கொண்ட மனிதர்களை வேதம் இரு பிரிவாக வேறுபிரிக்கின்றது. அவைகளாவன:

  1. ஆத்துமா கொண்டவர்கள்,
  2. ஆத்துமா இல்லாதவர்கள்.

    மாமிச சரீரத்தில் ஆத்துமா கொண்டவர்கள் பரிசுத்தருடைய நிகழ்வுகளுக்குள்ளானவர்கள். அது அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட ஆவியின் சுவாசம். தேவனாகிய கர்த்தர் முதன்முதலில் ஆதாமிடம் தமது ஆவியின் சுவாசத்தினை ஊதினார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த ஸ்பரிசத்தின் மூலம் ஆத்துமா என்ற உள்ளான மனுஷன் அவனுக்குள் உருவானான்.

    பரிசுத்தருடைய அந்த ஸ்பரிசம் யாருக்கெல்லாம் ஊற்றப்பட்டதோ, அவர்கள் ஆவியின் நிகழ்வினால் ஆத்துமாவைப் பெற்றார்கள்.

    ஆவியின் சரீரமானது மாமிச சரீரத்தினைக் காட்டிலும் மேன்மையான ஒன்றாகும். மாமிச சரீரங்கள் கொண்ட எல்லா மனிதர்களும் இந்த ஆவியின் சரீரம் பெற்றவர்கள் அல்ல. ஆவிக்குரிய அந்த சரீரம் பெற்றிருப்பவனே ஜீவனுக்குரியவன் என்றும், ஆக்கினைக்குரியவன் என்றும் வேறுபிரிக்கப்படுகின்றான். விருத்தசேதனம் என்பது ஆவியின் சரீரம் கொண்ட ஆதாமின் சந்ததிக்கு கொடுக்கப்பட்ட பிரமாணம். அதன்பின்னர் அது இஸ்ரவேலர் மத்தியில் மோசேயின் மூலமாக கட்டளையாகக் கொடுக்கப்பட்டது. விருத்தசேதனமில்லாத பாவி என்று வேதத்தில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். விருத்தசேதனம் உள்ளவனுக்கு முன்பாக விருத்தசேதனமில்லாதவன் அருவருப்பானவன். விருத்தசேதனம் கொண்டவர்கள் நித்திய ஜீவனுக்குரியவர்கள் என்றும், நித்திய ஆக்கினைக்குரியவர்கள் என்றும் இருபிரிவினராகப் பிரிக்கப்பட்டார்கள்.

    ஆத்துமா என்ற உள்ளான மனிதனைப் பெற்றுக்கொள்ள இயலாதவர்களை பாவிகள் என்று நிருபங்கள் சாட்சியிடுகின்றது. இந்த பாவியானவன் ஜென்மசுபாவம் என்ற பாவத்திலிருந்து விடுதலை பெற அவர்களுக்காக ஒரு பாவநிவாரண பலி செலுத்தப்பட்டது. அது அவர்களின் பாவத்தினை நிவிர்த்தியாக்க செய்யப்பட்ட பலியாகும். ஆத்துமா என்ற உள்ளான மனிதனைப் பெற இயலாதிருக்கக்கூடிய அந்தப் பாவம் நீங்க ஒரு சுத்திகரிப்பு தேவைப்பட்டது. இரத்தத்தின் மூலம் அந்த சுத்திகரிப்பு வழங்கப்பட்டது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படும்போது இந்தப் பாவம் நீங்கி சுத்திகரிக்கப்படுகிறார்கள்.

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்தப்படுத்தப்பட்ட ஜென்மசுபாவத்தார், உள்ளான மனுஷன் என்ற ஆத்துமாவைப் பெறக்கூடிய கிருபை பெற்றவர்களானார்கள். இதுவே புதிய ஏற்பாடாகும். இரத்தத்தினால் கழுவப்படும் புறஜாதிகள் அவரின் பரிசுத்த ஜனமாக மாற்றப்பட்டார்கள்; அவர்கள் பரிசுத்தரின் ஜனமாக மாறுகின்றார்கள். கர்த்தத்துவத்திற்குள்ளான நிகழ்வுகளின் மூலம் ஆத்துமா என்ற உள்ளான மனிதன் புறஜாதிகளுக்குள் உருவாக்கப்படுகின்றான். அப்படியாக புறஜாதிகள் கர்த்தத்துவத்திற்குள்ளாகக் கடந்துவர கிருபை பெற்றவர்களானார்கள். கர்த்தத்துவ ஜனத்திற்கே தீர்ப்பு. இந்த தீர்ப்பானது நித்திய ஜீவன் என்ற பரலோக சுதந்தரத்தினைப் பெறவும், நித்திய ஆக்கினை என்ற எரிநரகத்தில் தள்ளப்படவும் வழங்கப்படும் தீர்ப்பாகும்.

    நியாயப்பிரமாணத்தில் மிருகங்கள் சுத்த மிருகம் எனவும், அசுத்தமான மிருகம் எனவும் இரு தன்மையில் வேறுபிரிக்கப்பட்டது. அதுபோல மனிதர்களுக்குள்ளாகவும் சுத்தமுள்ளவர்கள் என்ற ஒரு பிரிவும், சுத்தமில்லாதவர்கள் என்ற ஒரு பிரிவுமாக வேதம் வேறு பிரிக்கின்றது.

    ஆத்துமா கொண்டவர்கள் சுத்தமுள்ளவர்கள் எனவும், ஆத்துமா பெற்றுக்கொள்ள இயலாதவர்கள் பாவிகள் என்றும் வேறுபிரிக்கப்படுகின்றார்கள். சுத்தமுள்ளவர்களாக பிரிக்கப்பட்ட ஜனங்களுக்குள்ளாக பரிசுத்தமுள்ளவர்கள் என்றும், பரிசுத்தமில்லாதவர்கள் என்றும் வேறுபிரிக்கப்படுகின்றார்கள். கிரியைகளின் மூலம் பரிசுத்தனாக்கப்பட்டவன் பரலோக சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்கின்றான்; அவனே நித்திய ஜீவனுக்குரியவன். கிரியையில் சுத்தமில்லாதவன் ஆக்கினைக்குரியவன் என்று தீர்க்கப்படுகின்றான். ஆத்துமா என்ற உள்ளான மனுஷனைக் கர்ப்பந்தரிக்க அருகதையில்லாத பாவிகளின் பாவங்களுக்காக ஆட்டுக்குட்டியான கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டது. அந்த மாமிச சரீரம் உலகமெங்கும் இருக்கக்கூடிய ஜென்மசுபாவத்தார்களுக்குள்ளாக ஆத்துமா என்ற உள்ளான மனுஷனைப் பெற்றுக்கொள்வதற்காகக் கிருபையினைக் கொண்டுவந்து சேர்த்துள்ளது. ஜென்மசுபாவத்தாரின் பாவநிவிர்த்திக்கென்று அனுப்பப்பட்ட மாமிச சரீரமே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய மாமிச சரீரமாகும். அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தம் பாவத்திற்காக சிந்தப்பட்ட பலியாகும். ஜென்மசுபாவம் என்ற பாவம் நீங்கி சுத்திகரிக்கப்பட்டவர்களே கிறிஸ்தவர்களாகும்.

    வனாந்தர பயணத்தின்போது வெண்கல சர்ப்பத்தினை உண்டாக்கி, அதனை நோக்கிப் பார்க்கக் கட்டளையிட்டவர் பிதாவாகிய தேவனே. ஆனால், வெண்கல சர்ப்பத்தினை வணங்கி, அதனை உருவாக்கியவரை உணராமல் போனது இஸ்ரவேலர்களுக்குள் பாவமானது. அதுபோல காளையினைப் பலி செலுத்துவதற்காக கட்டளையிட்டவரும் அவரே. ஆனால் அந்தக் காளையினைக் கர்த்தர் என்று கூறி, அதற்குப் பலியிட்டது பாவமானது. கர்த்தரை மறந்தவர்களாய் செய்த பலி கர்த்தருக்குப் பாவமாயிற்று. காளையினை பலி செலுத்துவதும், வெண்கல சர்ப்பத்தினை நோக்கிப் பார்ப்பதும் கர்த்தர் கட்டளையிட்ட கிரியைகளே ஆகும். ஆனால் அவரை இன்னார் என்று அறியாது பலிக்குரிய கிரியையில் மாத்திரம் அவர்கள் கொண்ட விசுவாசம் அவர்களை பாவிகளாக தீர்த்தது. அதேபோலொத்த நிலையில், ஆட்டுக்குட்டியும் உலகத்தின் பாவத்தினைச் சுமந்து தீர்ப்பதற்காக அனுப்பப்பட்ட கிறிஸ்துவின் சரீரமாகும். அவர் அந்த ஆட்டுக்குட்டியினை பூமியிலிருந்து உண்டாக்கவில்லை. அது தேவனுடைய ஆட்டுக்குட்டி. தேவன் அந்த ஆட்டுக்குட்டியினை அனுப்பி வைத்தார். மாமிசத்திற்குள்ளான கூடுகையினால் அந்த ஆட்டுக்குட்டி உருவாகவில்லை. அந்த ஆட்டுக்குட்டி தேவதிட்டத்தினை நிறைவேற்ற உருவானது. அதனால்தான் அதனை தேவ ஆட்டுக்குட்டி என்று வேதம் சாட்சியிடுகின்றது. அதனை "மாசற்ற தேவ ஆட்டுக்குட்டி" என்று பேதுரு சாட்சியிட்டுள்ளார்.

1 பேது. 1: 19-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே."

    மேலும், ஆட்டுக்குட்டியானது இரத்தம் சிந்தத்தக்கதாகவே பலியிடப்பட்டது. அந்த இரத்தம் பூமியில் சிந்தப்பட வேண்டும். இரத்தம் சிந்தாமல் பாவ மன்னிப்பு இல்லை என்று வேதம் கூறுகின்றது. பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தம் பலிபீடத்தில் சிந்தப்பட வேண்டும். பலிபீடத்தில் சிந்தப்பட்ட அந்த இரத்தமே பாவத்தினை நிவிர்த்தியாக்கும். "மாசற்ற ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தமே பாவத்தைக் கழுவும்". இயேசுகிறிஸ்துவினுடைய மாமிச சரீரம், முதலில் ஆட்டுக்குட்டியாக வந்தது. பின்னர் அந்த ஆட்டுக்குட்டியானது தேவ ஆட்டுக்குட்டியாக மாறிற்று. தேவனால் அனுப்பப்பட்ட அந்த ஆட்டுக்குட்டியானது மாமிச ரூபத்தில் வந்தது. அது அடிக்கப்பட்டபின் மறுரூபமாயிற்று. கிறிஸ்துவின் மாமிச சரீரம் பிட்கப்பட வேண்டும். அந்த சரீரத்திலிருந்து இரத்தம் சிந்தப்பட வேண்டும். பிட்கப்பட்ட அந்த சரீரத்தினாலும், சிந்தப்பட்ட அவரின் இரத்தத்தினாலும் புறஜாதிகளாகிய நம்முடைய பாவங்கள் கழுவப்பட வேண்டும். இது பிதாவின் சித்தம். புறஜாதியாரின் பாவங்களைக் கழுவுவதற்கே அந்த தேவஆட்டுக்குட்டி பூவுலகிற்கு அனுப்பப்பட்டது. உலகத்திற்காகப் பிட்கப்படுகின்ற என்னுடைய சரீரம் என்று அவர் சாட்சியிட்டுள்ளார்.

லூக். 22: 19-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்."

    அவருடைய இரத்தமே புதிய உடன்படிக்கையினை புறஜாதியாரான நமக்கு உருவாக்கிற்று. அவருடைய மாமிச சரீரத்தின் மூலமாக புறஜாதிகளாகிய நமக்குக் கிருபை கிடைத்துள்ளது. அவருடைய இரத்தம் நம்மை பாவத்திலிருந்து கழுவியுள்ளது. நாம் இப்போது கிறிஸ்தவர்கள் ஆகியுள்ளோம்.

1 கொரி. 11: 24-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்."

    என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்று அவர் அப்பத்தினைப் பிட்டு சாட்சியிட்டார். நமது விசுவாசத்தின் மூலமாகவே நாம் அவருடைய சந்ததிகளாக மாறியுள்ளோம். கிறிஸ்து யூதா கோத்திரம். நாம் இப்போது விசுவாசத்தின்படியாக யூதா கோத்திரமாகும். சிந்தப்பட்ட அவரது இரத்தத்தின்மூலம் நாம் ஆபிரகாமின் சந்ததியாகியுள்ளோம். மாமிச சரீரத்தின்படி நாம் இஸ்ரவேலர்கள் அல்ல. அவர் கட்டளையிட்ட புதிய உடன்படிக்கையின் மூலம் நாம் யூதா கோத்திரத்தாராகின்றோம். கிறிஸ்தவர்களாகிய நாம் மாமிசத்தின்படி இப்போது யூதா கோத்திரமாய் இருக்கின்றோம். மாமிசத்தின்படியாக கிறிஸ்தவர்களாக மாறிட மாத்திரம் நாம் அழைக்கப்படவில்லை. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட நாம் புறஜாதி என்ற பாவத்திலிருந்து மீட்கப்பட்டு, ஆபிரகாமின் சந்ததியாகியுள்ளோம். இது புதிய உடன்படிக்கையின் மூலமாக நம்மை அவரோடு இணைத்துள்ளது.

    பழைய ஏற்பாட்டில் ஆட்டுக்குட்டி என்பது பலிக்குரிய ஒரு சரீரமாக இருந்தது. இப்போது, புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் சரீரம் ஆட்டுக்குட்டியாய் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆட்டுக்குட்டி தன்னுடைய சாயலிலேயே பலியிடப்பட்டது. ஆனால் புதிய ஏற்பாட்டில் அந்த ஆட்டுக்குட்டி மனுஷ சரீரத்தில் வந்தது. அது சபைக்காலத்தில் பிட்கப்பட்ட அப்பமாய் தன்னை வெளிப்படுத்திற்று. பலியிடப்பட்டபின் கிறிஸ்து தலையாகவும், சரீரம் சபையாகவும் சாட்சியிடப்பட்டுள்ளது. கிறிஸ்து - தலை; சரீரம் - சபை. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்று வேதத்தில் வாசிக்கின்றோம். இதனை நினைவுகூரும்பொருட்டே அந்த அப்பம் பிட்கப்பட்டது. அன்றைக்குரிய அப்பமாய் விளங்கிய சபையோடு வைக்கக்கூடிய ஐக்கியம் ஒரு கிறிஸ்தவனுக்கு நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள கிருபையினைக் கொடுத்தது. அன்றைக்குரிய அப்பமாய் பிட்கப்பட்ட அப்பத்தோடு இணைக்கப்பட்டவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டார்கள். அது அன்றைக்கென கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சபைப் பிரமாணமாகும்.

    ஆட்டுக்குட்டியானது பாவநிவாரண பலியாக செலுத்தப்பட்டதுபோல, உலகத்தாராயிருந்த ஜென்மசுபாவ பாவத்திலிருந்து மீட்கப்பட இயேசுகிறிஸ்து என்ற தேவ ஆட்டுக்குட்டி பலியாக செலுத்தப்பட்டது. இது புதிய ஏற்பாடு. செலுதப்பட்ட ஆட்டுக்குட்டிக்கு மகிமை இல்லை. அதனைப் பலியிட கட்டளையிட்டவரே மகிமைக்குரியவர். அதனையே கிறிஸ்துவும், என் பிதா என்னிலும் பெரியவர் என்று சாட்சியிட்டுள்ளார். கிறிஸ்துவின் சரீரமானது பிதா கட்டளையிட்ட வார்த்தையாகும். அந்த இரட்சிப்பிற்குரிய வார்த்தையானது பலியிடும்பொருட்டாக மாமிச சரீரத்தில் வந்தது. இதனை அப்போஸ்தலனாகிய யோவானும் "அந்த வார்த்தை மாமிசமாகி" என்று சாட்சியிட்டுள்ளார்.

    கிறிஸ்து என்ற ஆட்டுக்குட்டியின் மீது வைக்கக்கூடிய விசுவாசமே ஒரு புறஜாதியை பாவத்திலிருந்து விடுதலையாக்கும். பாவம் நீக்கப்பட்டதால் ஆவிக்குரிய சரீரத்தினைப் பெற்றுக்கொள்ள கிருபையினைப் பெறுகிறான். ஆவியின் சரீரம் பெற்றபின், அந்த ஆட்டுக்குட்டியை அனுப்பி வைத்தவர்மீது வைக்கக்கூடிய விசுவாசமே பிதாவினை அறியக்கூடிய அறிவினைக் கொடுக்கும். அந்த ஞானமே நித்திய ஜீவனைக் கொடுக்கும். ஆட்டுக்குட்டியின் நாமம் பிதாவின் நாமமாய் உயர்த்தப்பட்டபின், மகிமை பிதா ஒருவருக்கே!.

    இஸ்ரவேலர்கள் தாங்கள் பலியாக செலுத்திய ஆட்டுக்குட்டியினை பலியிட்டபோது இரத்தம் சிந்திய அந்த ஆட்டுக்குட்டியைப் பற்றி வேதனை கொள்ளவில்லை. அது பாவநிவிர்த்திக்காக யேகோவா தேவன் கட்டளையிட்டது. அதுபோலவே இயேசுகிறிஸ்து என்ற ஆட்டுக்குட்டியும் பிதாவாகிய தேவன் பலியிடுவதற்காக அனுப்பி வைத்த சரீரம் ஆகும்.

    இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தபின், தம்முடைய சீஷர்களில் இருவருக்கு காட்சி கொடுத்தார். அவர்கள் அவரை இன்னார் என்று அறியவில்லை. அதன்பின்னர் அவர் அப்பத்தினைப் பிட்கும்போது அவர்களுடைய கண்கள் திறக்கப்படுகின்றது. அவர்கள் அவரை இன்னார் என்று அறிந்தார்கள். அவரின் மாமிச சரீரத்திற்கு எந்த மகிமையும் கொடுக்கவில்லை. ஆனால் அது பிட்கப்பட்டபோது, மகிமைக்குரிய நிலைக்குள்ளாகிற்று. அது பிதாவின் சித்தத்தினை நிறைவேற்றினபடியினால், அந்த நாமம் பிதாவின் எல்லா நாமங்களுக்கும் மேலான நாமமாக உயர்த்தப்பட்டது.

    முதலாவது காளை கர்த்தருக்குப் பலியிட கட்டளையிடப்பட்டது. அது பாவநிவாரண பலி. அதன்பின்னர் வெண்கல சர்ப்பம் உருவாக்கப்பட்டது. வனாந்தர பயணத்தின்போது, கொள்ளிவாய்ச் சர்ப்பத்தினால் கடிபட்டவர்கள் அதனை நோக்கிப் பார்த்தபோது சுகம் பெற்றார்கள். ஆட்டுக்குட்டியினையும் பாவநிவாரண பலியாக பலியிட்டார்கள். ஆட்டுக்குட்டியினை பலியிட்டு பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்று விசுவாசித்தார்கள். அதன்பின்னர், தேவ ஆட்டுக்குட்டியானது இயேசுகிறிஸ்துவாய் மாமிசத்தில் வந்தது. அது பாடுபட்டது; அது பிட்கப்பட்டது. அந்த ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்டபடியால், நமக்கு கிருபை கிடைத்தது. நமக்குள் ஜீவன் என்ற ஆத்துமா உருவானது. ஜீவன் கிடைக்கப் பெற்றபின் அந்த ஜீவன் நித்திய ஜீவனாக இளைப்பாறுதலில் பிரவேசிக்க அது கிரியைகளில் பூரணப்பட வேண்டும்.

    கிறிஸ்துவைப் பற்றிய இரகசியம் இன்னதென்று வேதம் சாட்சியிடுகின்றது. இயேசுகிறிஸ்துவின் மாமிச சரீரத்திற்கென்று தனிப்பட்ட மகிமை கொடுக்கப்படவில்லை. சர்ப்பம் உயர்த்தப்பட்டதுபோல அந்த மாமிச சரீரமும் உயர்த்தப்பட வேண்டும் என்பது நீதி. நமக்குள் ஆவியின் சரீரம், அதாவது மாமிச சரீரம் உருவாகிட உயர்த்தப்பட்டது. அவரது சரீரம் பிட்கப்பட்டு, பின்னர் மகிமையடைந்து, பிதாவின் வலதுபாரிசத்திற்குள் சென்றுவிட்டது. பிதாவினிடமிருந்து அனுப்பப்பட்ட அந்த வார்த்தை பிதாவின் வலது பாரிசத்திற்குள் சென்றடைந்தது. காரணம், அந்த வார்த்தை பிதாவினுடையது. மாமிச சரீரம் மாத்திரம் கிறிஸ்துவினுடையதாய் தனது கிரியைகளில் பூரணப்பட்டு மகிமையடைந்தது.

    ஆட்டுக்குட்டியான அவரின் மாமிச சரீரத்தினை பிட்க பிதா ஒப்புக்கொடுத்தார். அந்த மாமிச சரீரம் உருவாகிட கிருபை பெற்றவள் மரியாள். மரியாள் கிருபை பெற்றாள்; பேறு பெற்றாள். மரியாள் வயிற்றில் உருவான அந்த ஆட்டுக்குட்டி உலகத்தாராகிய நமது பாவத்திற்காக பிட்க ஒப்புக்கொடுக்கப்பட்டது.

    வெண்கல சர்ப்பமானது வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டதுபோல அவரது மாமிச சரீரமும் ஒரு கால அளவு வரை உயர்த்தப்பட வேண்டும். வெண்கல சர்ப்பத்திற்குக் கொடுக்கப்பட்டதுபோன்ற ஒரு கிரியை அவரின் மாமிச சரீரத்திற்கும் கட்டளையிடப்பட்டுள்ளது. அவரது மாமிச சரீரம் உயர்த்தப்பட்டதை நோக்கிப் பார்த்தவர்கள் ஜீவனைப் பெற்றார்கள். அவரது மாமிச சரீரம் புறஜாதிகளாகிய நாம் ஜீவன் என்ற ஆவியின் சரீரம் பெற்றுக்கொள்ள கிருபையினைக் கொடுத்துள்ளது.

    அவரின் மாமிசத்திலிருந்து இவைகள் நிகழ்ந்ததினால் எல்லா நாமத்திற்கும் மேலாக இயேசு என்னும் நாமம் பிதாவின் நாமமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    நித்திய ஜீவனுக்குரிய ஆத்துமா பரதீசுக்கும், ஆக்கினைக்குரிய ஆத்துமா பாதாளத்திற்குள்ளும் சென்றடையும். பிதாவினிடமிருந்து புறஜாதிகள் மத்தியில் இந்த நிகழ்வுகளுக்காக அனுப்பப்பட்ட வார்த்தையானது மாமிசத்தில் தனது கிரியைகளில் பூரணப்பட்டது. அவரின் மாமிச சரீரமானது மகிமைப்பட்டபின்னரே, கிருபையானது புறஜாதிகளாகிய நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.

    இயேசுகிறிஸ்துவின் இந்தக் கிரியையே சத்தியமாகும். இந்த சத்தியத்தினின்று விலகத்தக்கவிதமான வஞ்சகத்தில் பிசாசானவன் செயல்படுவதாக வேதம் கூறுகின்றது.

2 கொரி. 11: 3-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்."

    பிதா தன்னிலும் பெரியவர் என்று கிறிஸ்து சாட்சியிட்டார். காரணம், ஆட்டுக்குட்டியான அவரைப் பலி செலுத்துவதற்காக அனுப்பியவர் பலிபீடத்திற்கு உரியவரான பிதா. அவர் அந்த ஆட்டுக்குட்டியிலும் பெரியவர்.

    புறஜாதிகளான நம்மை பிதாவினிடத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய வழி கிறிஸ்துவின் மாமிச சரீரம் ஆகும். அவரின் மாமிச சரீரமே அந்த வழி. அந்த வழி பிதாவினிடத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் வழி. பிதாவின் இராஜ்ஜியம் சென்றடைய நமக்குள் ஆவியின் சரீரம் உருவாக வேண்டும். அதற்காக அவர் இந்தப் பூமிக்கு அனுப்பப்பட்டார். அதன்படி நாம் கிறிஸ்தவர்களாக மாறியுள்ளோம். இப்போது நாம் கிரியைகளின் மூலம் நித்திய ஜீவனைப் பெற வேண்டும். அந்தக் கிரியையினை சாட்சியிடுவதே சத்தியமாகும்.

    கிறிஸ்துவின் மாமிச சரீரமானது இரண்டு நிகழ்வுகளை செய்துமுடிக்க ஆட்டுக்குட்டியாக அனுப்பப்பட்டது. அவைகள் யாதெனில்,

  1. மாமிசத்தினைப் பிட்க ஒப்புக்கொடுக்க
  2. அவருடைய நாமத்தினை அறிவிக்க.

    அவர் மாமிச சரீரத்தினைப் பிட்க ஒப்புக்கொடுத்ததாலேயே, அவரின் நாமம் பிதாவினுடைய நாமமாய் உயர்த்தப்பட்டது. இன்றைய கிறிஸ்தவர்கள் மாமிச தேவைகளுக்காக மட்டுமே அவரைத் தேடுகின்றவர்களாகக் காணப்படுகின்றோம். நாம் நித்திய ஜீவனைப் பெற்று அவரது பரம ராஜ்யத்திற்குள்ளாகச் செல்லவேண்டும் என்பதே பிதாவின் சித்தமாயிருக்கின்றது.

    முதலாவதாக, கிறிஸ்துவின் சரீரமானது பிட்கப்பட அனுப்பப்பட்டது.
    இரண்டாவதாக, அவரின் இரத்தம் சிந்தப்பட அனுப்பப்பட்டது.
    மூன்றாவதாக, அவரின் நாமத்தினை பிதாவின் நாமமாய் உயர்த்திட அனுப்பப்பட்டது.
    4-வதாக, புறஜாதிகளோடு புதிய உடன்படிக்கையினை ஏற்படுத்திட அனுப்பப்பட்டது.
    5-வதாக, புறஜாதிகளுக்குள் கிருபையினைக் கட்டளையிட அனுப்பப்பட்டது.

    இந்த 5 காரியங்களுக்காக அவரின் மாமிச சரீரம் இந்தப் பூமிக்கு அனுப்பப்பட்டது. ஒவ்வொரு கிரியைக்கும் ஒரு கால அளவினை கர்த்தர் நியமித்து வைத்திருக்கின்றார்.

    பிதாவினிடத்திலிருந்து அனுப்பப்பட்ட வார்த்தை சரீரமாய் வந்தது ஒரு கால அளவு; இரத்தம் சிந்தி அது தன்னுடைய மாமிசத்தினைப் பிட்க ஒப்புக் கொடுத்தது ஒரு கால அளவு; மீண்டும் அது பிதாவினிடத்தில் சென்றடைந்ததும் ஒரு கால அளவு.

    அவரின் மாமிச சரீரம் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டது. அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பினுடைய கல்லறையில் அந்த சரீரத்தினைக் கொண்டுபோய் வைத்தார்கள். ஆனால், இன்று கிறிஸ்தவர்களாகிய நம்முடைய கிரியை எப்படியாகக் காணப்படுகின்றது? கிறிஸ்துவின் சரீரத்தினை இன்னமும் சிலுவையில் தொங்க வைத்துக்கொண்டிருக்கும் நிலையாகக் காணப்படுகின்றது. அது வெண்கல சர்ப்பமானது பலிபீடத்தினருகே வைக்கப்பட்டு தூபம் காட்டப்பட்டது போலொத்த ஒரு நிகழ்வு. கிறிஸ்துவின் சரீரம் பலியிடப்பட்டபின் அந்த சரீரத்திற்கென்று எந்த மகிமையும் இல்லை. அந்த சரீரம் கர்த்தரால் மகிமைப்படத்தக்கவிதமாய், அதற்கு கொடுக்கப்பட்ட நாமத்தினைத் தன்னுடைய நாமமாக பிதா சூடிக் கொண்டார். கிறிஸ்துவின் சரீரமானது வார்த்தையாய் பிதாவினிடத்தில் சென்றடைந்தது.

    இன்றைய சபைகள் அவரின் மகிமை இழந்த அவரின் மாமிச சரீரத்தினை மட்டும் மகிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஜீவன் என்ற கிரியை புறஜாதிகளுக்குள் நிறுத்தப்படும் வேளை வெண்கல சர்ப்பமானது மகிமையற்று இருந்ததுபோல, கிறிஸ்துவின் சரீரமும் மகிமையற்றதாய் மாறிவிடும்.

    கிருபை என்ற ஆத்தும ஜனனம் புறஜாதிகளிடம் நிறுத்தப்பட்டபின், கிறிஸ்துவின் சரீரமும் மகிமையற்றதாகவே காணப்படும். சபை என்ற அவரின் சரீரம் கிரியை இழந்த சரீரமாகவே காணப்படும். கர்த்தரது ஜீவனுக்குரிய வார்த்தை மீண்டும் வார்த்தையாக வந்து, அவரால் ஏற்படுத்தப்படும் ஊழியத்தின் மூலம் சாட்சியிடும். அப்போது அந்த மகிமை வார்த்தையினிடத்தில் சென்றடையும். அது இஸ்ரவேலர்களுக்குள்ளாக மீண்டும் கிருபை என்ற ஆத்தும ஜனனத்தினை கொண்டு செல்லும்.

    கிருபையின் காலம் முடியும் முன்னர் சத்தியத்தினை விசுவாசிப்போம். கர்த்தர் தமது கிருபையினால் நமக்கு நித்திய ஜீவனைத் தந்தருளுவார்.

ஆமென்!     ஆமென்!!     ஆமென்!!!

All Sermonsஅனைத்து பிரசங்கங்கள்